தீராத வேதனைகளில் .

இருள் கூட பிரியாத
அதிகாலையில்
ஓர் வரிசை ஆரம்பிக்கிறது

செவிலிப்பெண்
8 மணி அடிக்க ஓர் நொடிக்கு முன்
கையெழுத்திட்டு
அமர்ந்த அந்த நொடியில்
ஆரம்பிக்கிறது
மருத்துவமனையின்
அன்றாட அல்லல்கள் . .

தீராத வலியென்று
திணறிக் கொண்டிருந்த ஒருவர்
குடித்து முடித்திருந்தார்
தனது மூன்றாவது தேநீரை .

அனுமனின் வால் போன்று
நீண்டு கொண்டே போனது
ஒவ்வொரு பகுதியின் வரிசையும் .

பால் மனம் மாறாத
பச்சிளம் குழந்தை ஒன்றின்
ஒரு கையில் புட்டிப்பாலும்
மறு கையில் சலைன் வாட்டரும்
ஒரு சேர உள்ளே போய் கொண்டிருந்தன

ஒரே வார்டின் எதிர் எதிர்
அறைகள் தான்
இரண்டு நாட்களாய்
குசலம் விசாரித்து
கொண்டவர்கள் தான்
இன்று ஒரு அறையில்
அழுகையின் எதிரொலி
ஆள் போய் விட்டது என்று

எதிர் அறையிலும் அழுகைதான்
ஆனால் அது
புதிதாய் பிறந்த குழந்தையின் குரல்
பங்கிட கூட முடியாமல்
அறையை கடந்து
செல்கின்றன பார்வைகள்

உன்னுடைய வலி
உனக்கு மட்டும் தான் என்பதாய்
கனிவான வார்த்தைகளை
கடைதெருவில் விற்றுவிட்ட
செவிலியின் வார்த்தைக்கு பயந்து
பல்லிடுக்கில் வலியை மறைத்து
பதுங்கி நிற்கின்றனர் பாவப்பட்டோர்

முள் போல நகர்கிறது
ஒவ்வொரு நொடியும்

ஒவ்வொருவரும்
திசைக்கொருவராய்
முனங்கி நிற்க,

வலியும் இல்லாமல்
வேலையும் செய்யாமல்
சும்மா துணைக்கு சென்ற
எனக்கு தான்
இடியாய் இறங்குகின்றது
அத்தனை இம்சைகளும் கண்ணில்

ஒரு போதும் துணைக்காய் இனி
மருத்துவமனை செல்லப் போவதில்லை
என்று கை கழுவிய பின்னும்
என் மீது ஒட்டிக் கொண்டிருக்கிறது
தீராத அந்த வலிகளின் வேதனைகள் .

எழுதியவர் : honey (31-Jan-12, 1:54 pm)
பார்வை : 226

மேலே