அவன் வருகைக்காய் . . . .

ஒரு நாள் வயிற்றில்
எட்டி உதைத்தான்
அவன்
அவசர அவசரமாய்
அன்னையிடம் சொன்னேன்
வரட்டும் படவா
பார்த்துக் கொள்ளலாம் என்றாள்

அவனால் தான்
உணவின்றி
உடல் மெலிந்தது
என்று தந்தையிடம்
தாரை தாரையாய்
கண்ணீர் வடித்தேன் அவரும்
வரட்டும் அவன்
பார்த்துக் கொள்ளலாம் என்றார்
கண்ணீர் துடைத்து .

அவனால் என் கணவன் கூட
என்னிடம் அதிகமாய்
நெருங்குவதில்லை என்று
அண்ணனிடம் அழுதேன் அவரும்
எல்லாம் அவன்
வந்தால் சரியாகி விடும் என்றார்
தலை நீவி .

இதோ ஆயிற்று
அவன் வருகின்ற
நாளும் வந்து விட்டது
வீடே ஒரே அமளி துமளி தான்

என் கண்ணில் இருந்து
கண்ணீர் அருவியாய்
பெருக்கெடுத்து ஓடுகிறது

அன்னை எதை செய்வது
என்று தெரியாமல் அனைத்தையும்
முடித்தும் முடிக்காமலும்

தந்தை எது நடந்தாலும்
பார்த்துக்கொள்ளலாம்
என்று கல் போல நின்றாலும்
உள்ளுர எனக்காய் கரைந்து
கொண்டிருந்தார்

அண்ணன் அடுத்தடுத்து
வேலை செய்தாலும்
அவன் பட்ட அவதி
சொல்லி மாளாது

கைபிடித்த பிடியை விடாமல்
தன் கண்ணீரை அடக்கி
என் கண்ணீரை துடைத்து
அன்புக்கணவர் பட்ட பாடு
அய்யய்யோ போதும் போதும்

அந்த அரை நொடிக்குள்
உதிரம் ஊற்றாய் பெருக
ஆலைவாய் அகப்பட்ட
கரும்பாய் இருந்த நான்
சக்கையாய் சடுதியில்
மாறிப் போனேன்
மரணத்தின் படியிரண்டை
தொட்டு சட்டென்று
மீண்டு வந்து
நான் போட்ட
அலறலில்

அவன்

வந்தே வந்து விட்டான்

மயங்கி கிடந்த
விழியிரண்டை
மலர்த்திப் பார்க்கிறேன்

மத்தாப்பாய் பூரித்து
கிடக்கின்றன அனைவர்
முகமும்

திசைக்கொரு சூரியனாய்
சிரிப்பை சிந்திக் கொண்டிருந்தனர்
ஒரு திக்கை நோக்கி
நானும் சற்றே திரும்பி பார்க்கிறேன்

அன்னை மெதுவாய்
அவனை என் அருகே வைத்து
அகன்று போய் விட்டாள்

என் மேல் தன்
இதழிரண்டை வைத்து
என் முலைக்காம்புகளில்
முகம் பதிக்க ஆரம்பித்தான்
அனைவர் முன்னும்

பட்ட துன்பமெல்லாம்
பனி போல் மறைய
என் பொங்கும் பால் கடலில்
பரவசமாய்
பள்ளி கொண்ட பரந்தாமன்
அவன்

என் பாலகன்

வருவான் வருவான் என
காத்திருந்து
உருக்குலைந்து
வலிகளில் உறைந்து போன
என்னை மீண்டும்
உதைத்தான்

ஆனால்
இப்போதோ
தாய்மையின் பெருமிதத்தால்
கண்ணின் கடை கோடியில்
துளியிரண்டு உருண்டு நிற்கிறது
புன்னகையோடு . . .

எழுதியவர் : honey (2-Feb-12, 3:24 pm)
பார்வை : 270

மேலே