என்ன கொடுமையடா இது . . .
அல்லல் படும்
அலுவலக வேளையில்
அரை நொடி அவகாசம்
ஆசுவாசப்படுத்தி கொள்ள
முதல் கால் நொடியில்
மூச்சு முட்ட பால்
குடிக்கும் போது
கடிகாரத்தின் கால்
பார்த்து
அன்னையிடம் அள்ளிக்
கொடுத்து விட்டு
வந்தேன் உன்னை
அரை வயிற்று பசியுடன்
உன் அழுகை
தெருவின் கடைகோடிவரை
என் கால் பிடித்து வந்தது . . .
மறு கால் நொடியில்
உன் பசியை எண்ணி
என் மனது
நீ குடிக்காத இன்னொரு
மார்பு போல்
கனத்துக் கிடக்கிறது
பசியாற முடியாமல்
நீ புட்டிப்பால் குடிக்க
பாலிருந்தும்
பசியாற்ற முடியாமல்
பாத்ரூமில் கறந்து விட
என்ன கொடுமையடா இது . . .