!!! மூன்றாவதாய் ஒரு மோசமான கிறுக்கல் !!!

புற்றிலிருந்து
புறப்படும்
ஈசல்களை போல்
மனிதனின்
மனதுக்குள் முளைக்கும்
நிறைவேறாத ஆசைகள்...!!!
!!!
வாரமொரு புதிய
செருப்பு அணிந்துகொண்டு
அலுவலகம் சென்று
அமர்ந்திருந்த போதிலும்!
கருவேலம் முள் தச்சு
இத்துப்போன கால்களோடு
இன்னும்
எனது சமுதாயம்...!!!
!!!
மக்கள் சமுதாயத்தை
முன்னேற்ற பாதையில்
கொண்டு செல்வோம் - என்ற
அரசியல் தலைவர்களின்
வார்த்தைகள்
காற்றில் கரைந்து
காணாமல்
போய்கொண்டிருக்க...
இன்னும்
தெருவோரங்களிலும்
கோவில் வாயில்களிலும்
கையேந்தி
கிடக்க்குரார்கள்
சமுதாய பிச்சைகள்...!!!
!!!
எதுவும் நிலையானதல்ல
எதுவும் கடந்து போகும்
எல்லாமே மாறிப்போகும் - என்பது
உண்மைதான்!
ஆனால்...
மாற்றத்தை யாரால்
மாற்றிவிட முடியும்...???

''நானொரு மாற்றம்''
!!!
ஆண் சாதி
பெண் சாதி
இரண்டையும் சேர்த்தால்
எஞ்சி இருப்பதென்னவோ
ஒரே ஒரு மனித சாதிதான்;
ஆனால்!
ஆயிரம் சாதிகள் இங்கு
அர்த்தமற்று கிடப்பதிலேயே
புரிகிறது
மனிதன் இன்னும்
மனிதனாகவில்லை என்று...!!!
!!!
சிறு வயதில்
சேர்த்து எழுதுவதையும்
பிரித்து எழுதுவதையும்
படித்து
இருக்கிறேன்
ஆனால் இன்று
பிரித்து எழுதுவதை மட்டும்
சுத்தமாய்
மறந்து போய்விட்டேன்...!!!
!!!
பாம்பென்று தாண்டவும் முடியாது
பழுதகயிறென்று மிதிக்கவும் முடியாது!
அதிகமாய் பேசுபவனையும்
எதுவுமே பேசாமல்
அமைதியாய் இருப்பவனையும்...!!!
!!!
காற்றே...
நீ புயலாகிவிடாமல்
தொடர்ந்து வீசிக்கொண்டே இரு...
எந்த மரத்தையும்
அமைதியாய்
இருக்கவிடாதே...
மரத்தின் அமைதியை
கெடுத்து அதனோடு
எப்பொழுதும்
பேசிக்கொண்டே இரு
எங்கள் சுயநலத்திற்காக!
அசைவற்று
கொஞ்சநேரம் நீ
உன் இயக்கங்களை
நிறுத்தி மௌனமாய்
உறங்கிபோய்விட்டால்
இந்த உலக
ஜீவராசிகள் அனைத்தும்
சுவாசிக்க வழியின்றி
மூர்ச்சையாகி போய்விடும்
என்பதை - நான்
நன்கு அறிவேன்...!!!
!!!
நானே ஒரு அரை குறை
இலக்கண போலிகளையும்
இலக்கிய பிழைகளையும்
தினம் தினம்
கையாண்டு கொண்டு
இருக்கிறேன்...
இதையும் கூட
விரும்பி படிக்கிறார்கள்!
இலக்கணமும் இலக்கியமும்
தெரியாதவர்கள் மட்டுமல்ல
தெரிந்தவர்களும் கூட...!!!
!!!
அயர்ந்து கிடக்கும்
நடு இரவில்
திடீரென
இடி மின்னலுடன்
கொட்டி தீர்க்கும்
கோடை மழையைப்போல
அப்பப்போ சில
நினைவுகள்
நெருப்பாய் வெடிக்கும்
அடி மனதில்...!!!
!!!
ஆழ்ந்த சிந்தனையில்
ஆழ்ந்துபோய் கிடந்தாலும்
எங்கோ கேட்கும்
கொலுசொலியின்
பின்தொடரும்
பாழாய்ப்போன மனது...!!!
!!!
பொத்தி பொத்தி
பூட்டி வைத்திருக்கும்
உணர்வுகளெல்லாம்
எரிமலையாய்
என்றுதான் வெடித்துவிடுமோ
என்ற
அச்சத்தின் உச்சியில்
ஊசலாடிக்கொண்டு
இருக்கிறது!

''மௌனமாய் மனது''
!!!
மௌனமான அமைதியில்
லயத்து கிடந்தேன்
யாரோ சிலரால்
வீசப்பட்ட கற்கள் - என்
மன குளத்தின்
ஆழத்தில் இன்னும்
மூழிபோய் கிடக்கிறது...!!!
!!!
மௌனமான இரவு
ஆகாயத்தை
வெறித்துக்கொண்டு இருந்தேன்
என்
இரவை கிழிக்கும்
சிறகுகளாய்
சில கனவுகள்...!!!
!!!
நான் அமைதியை
விரும்பினாலும்
அமைதிக்குப்பின்
புயல் என்பதைப்போல - என்
செல்லரித்த சிந்தனைகளில்
ஆர்பரிக்கும்
கடலலைகளாய்
சில ஆதங்கங்கள்...!!!
!!!
கோபத்தை
தணிக்க முடியவில்லை
ஆதங்கத்தை
அடக்க முடியவில்லை
உணர்வுகளை
ஒடுக்க முடியவில்லை
காட்டாற்று வெள்ளமாய்
என்னை நான்
தேக்கி வைத்திருக்கிறேன்
நம்பிக்கை என்ற
அணையை கட்டி...!!!
!!!
இடியின்
முழக்கத்தைகூட
ஏற்றுக்கொள்ளும் நெஞ்சம்
சில நேரங்களில்
இலைகளின்
சலசலப்பில் கூட
எரிச்சலாகிவிடுகிறது...!!!
!!!
பொன்வண்டு
பறந்து செல்லும் ரீங்காரம்
புதிதாய்
காதல் முளைத்த
மனதுக்குள்ளும்
அடிக்கடி நிகழும்...!!!
!!!
செந்தாழம் பூவுக்குள்
வசிக்கும்
கொடிய விஷமுள்ள
சிறிய பூ நாகமாய் - உன்னுடன்
வசிக்கும்
நம்பிக்கை துரோகிகள்...!!!
!!!
நெல்வயலின் வரப்பில்
குடியிருக்கும்
எலிகளைபோல்
மக்கள் ஓட்டு போட்டு
மந்திரியாக்கப்பட்ட
இன்றைய
அரசியல்வாதிகள்...!!!
!!!
ஒரேடியாய் உயரே
பறக்கவும் தெரியாது
நீண்ட தூரம்
பறந்தும் போகாது!
கொஞ்சம் கொஞ்சமாய்
குதித்து குதித்து
கொஞ்ச தூரம்
பறந்து சென்று
அதே வேலியில் அமரும்
வாலாட்டிக்குருவியைபோல்
சிலருக்கு
சிலரைவிட்டு
பட்டென்று
விலகிவிட முடிவதில்லை...!!!
!!!
இயந்திர சக்தியை
மின் சக்தியாய் மாற்றும்
ஜெனரேட்டரும்
மின் சக்தியை
இயந்திர சக்தியாய் மாற்றும்
மோட்டாரும்
மனிதனை
உறங்க வைத்துவிட்டது...!!!
!!!
சுடுகாட்டு நிசப்தம்
மூங்கில் காட்டு அமைதி
சலனமற்ற உச்சி நேரம்
வைகறை பொழுதின்
நீர், காற்று, மரம்
போன்றவைகளின் மௌனம்
இவைகளையெல்லாம் - நான்
தனியே ரசிக்கும்பொழுது
இந்த உலகை மறந்து
நானும் ஒரு
புத்தனாகி போவேன்...
எங்கிருந்தோ கேட்கும் குரலோ
ஏதாவது பறவையின் சத்தமோ
என்னை மீண்டும்
சராசரி மனிதனாக்கும்வரை...!!!
!!!
ஏரிக்குள் வளர்ந்திருக்கும்
சம்புக்குள்
சலசலக்கும் சாரைப்பாம்பாய்
மனதிற்குள்
ஏதோ ஒன்று சலசலக்கும்
என்னவென்று
அறியும் முன்பே
எங்கோ அது
மறைந்திருக்கும்...!!!
!!!
புளிய மரத்தின்
போறைக்குள்
அடுக்குதேன் கூடு இருக்க...
அதன் கீழ்
அமைதியாய்
படுத்து கிடந்தது கரு நாகம்
என்றைக்கோ என்னுள்
காலம் செய்த
பதிவு இது
இன்னும் என்னால்
மறக்கமுடியவில்லை...
காலம் எல்லா விசயங்களையும்
தவறாமல் நமக்குள்
பதிவு செய்து கொண்டுதான்
இருக்கிறது
ஆனால்
சில விசயங்களை - அது
ஆழமாய்
பதிவு செய்துவிடுகிறது...!!!
!!!
மூக்குத்தி பூக்களையும்
தும்பை பூக்களையும்
வட்டமிடும்
பட்டாம்பூச்சிகளை
எத்தனை பேர்
பார்த்து ரசித்திருப்பீர்கள்...???
எல்லோருக்கும்
எல்லாமும்
வாய்த்துவிடாது!

''வாழ்க்கை''
!!!
உன்னால்
விலக்கவும் முடியாது
நீ
விலகவும் முடியாது
நாவல் மரத்தை
துளையிட்டு வாழும்
கருவண்டுகளைபோல்
உன்னுள் சிலர்...!!!
!!!
யாரை பற்றியும்
எதற்காகவும்
எப்பொழுதும்
யோசிக்கமாட்டார்கள்!
பட்டென்று கொட்டிவிடும்
குளவிகளைப்போல்
நம்மில் சிலர்...!!!
!!!
சரிந்தும், ஒடிந்தும் போன
மரங்கள்...

எலும்பு நொறுங்கிப்போன
உடம்புகளாய்
உடைந்து போன
படகுகள்...

ஆளை அறுத்து
தொங்கவிட்டதைபோல்
ஆங்காங்கே
அறுந்து தொங்கும்
மின்கம்பிகள்...

இடிந்தும் சரிந்தும்
போன வீடுகள்...

பிணம்போல்
சாய்ந்து கிடக்கும்
வாழைகள்...

கணு உடைந்து
விழுந்து போன
கரும்புகள்...

குப்புற
சாய்ந்து கிடக்கும்
நெற்பயிர்கள்...

அடியோடு
சாய்ந்து போன
சோளத் தட்டைகள்...

18 பேர்களின்
உயிர் பலி...

இப்படித்தான் தன்
வரவை
பதிவு செய்துவிட்டு
போனது
தானே புயல்...!!!
!!!
எதை எதையோ
கிறுக்கிய போதும்
எந்த ஒரு
திருப்தியும் இல்லை...
சாதாரண மனிதனைப்போல்
தாவுகிறது மரம்!

''மனமென்னும் குரங்கு''
* * * !!! * * * !!! * * *

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-Feb-12, 4:10 pm)
பார்வை : 483

மேலே