கருத்தா இருப்பாயடி....

ஒன்னப் பெத்தா,
ஒய்யாரம்!
ரெண்டப் பெத்தா,
ரீங்காரம்!
மூனப் பெத்தாலோ,
திண்டாடம்ன்னு சொல்லுவாங்க!

நானோ நாலப் பெத்து,
நாய் படாத பாடு பட்றேனே?
அதுவும் பொட்டச் சிரிக்கியா
பெத்துப் போட்டு,
தெனம் தெனம், செத்து செத்து,
சுண்ணாம்பா வாடுறேனே?

மகராசன் பாக்குற வேல
தாறு காட்சி ஊத்துறது,
அதுல வர்ற காச வச்சு,
இறுக்கி புடிச்சு கஞ்சி காச்சிறோம்.
அதையே குடிச்சு பசிய ஆத்துறோம்.

எரும மாடு கணக்கா ஒருத்தி.
கரும்பு சல்ல போல இன்னொருத்தி.
இந்த ரெண்டு சிறுக்கியும்,
வயசுகுக்கு வந்தும் வருசாமாச்சு.
கட்டிக் குடுக்கு காப் பவுனு
தங்கம் தவுர வேறொன்னுமில்ல.

முழுகாம இருக்கும் போதும்,
மாடாக ஓலைச்சேனே.
இந்த குடும்பம் தல தூக்க,
ஓடாவும் தேஞ்சேனே.

இதுகல கரசேத்தி,
பொணமா நான் பொதய,
இந்த ஜென்மம் பத்திடிமோ?
கொலசாமி நீ சொல்லு?

காலையில பசுமாடா
திரியுற எம் மச்சான்,
ராட்சசணா மாறுறாண்டி
ராத்திரியில.

சேந்து படுத்து,
வகுத்த நெறச்சு,
குடும்பம் விரிஞ்சு
போச்சுதடி.

வாங்குற சம்பளத்த
பெருக்க தெரியாத
எம் புருஷன்,
வகுத்த மட்டும் விதவிதமா,
நெறைக்கும் வித்தைய
எங்க தான் கத்துவந்தானோ,
தெரியலடி?

உனக்கு ஒன்னும் தெரியாது,
இதுல எதுவும் நடக்காது,
நாளிருக்கு, நாளிருக்குன்னு
சொல்லி சொல்லியே,
என்ன நாலு மொற
நாசமா போகவஞ்சாண்டி.

அடுத்தடுத்து, பெத்து பெத்து,
காத்தில்ல பலூன் ஆச்சுதடி,
என் உடம்பு.

காசரும கண்டதில்ல,
மெச்சு வீட்டுல வாழ்ந்ததில்ல,
கலர் கலரா துணியுமில்ல,
பல பலகாரம் உண்டதில்ல,
பசியாறி படுத்ததில்ல,
பளீர்ன்னு ஒரு நாளும் சிரிச்சதில்ல.

இருள் சூழ்ந்த வேலையில,
உட்ட சொகத்த எல்லாம்,
ஒன்னா புடிச்சுக்கிட,
கட்டிக்குவேன் என்
ஆச மச்சான!
வேறென்ன நாங்க செய்ய?

இப்போ ஏதேதோ வந்திருக்காம்,
இனக்கமாவும் இருக்குதாம்,
அதுவே இனப் பெருக்கத்தையும்
தடுக்குதாம், தெரிஞ்சுகோடி முத்தழகி!

கூப்பன் கடையிலையும்,
குடுப்பாகலாம்.
மண்ணெணையோடு சேத்து,
மறக்காம வாங்கிக்கோடி

கவனமா கையாண்டா
கவலையில்லையாம்.
கருத்தா இருந்துக்கோடி!!!

எழுதியவர் : கணேஷ்குமார் Balu (3-Feb-12, 4:36 am)
பார்வை : 446

மேலே