பார் போற்றும் பரோட்டா.....

பிஞ்சுக் குழந்தையாய் இருந்ததிலிருந்து,
இன்று வரை பரோட்டா என்றால்
மனது ரக்கை கட்டிப் பறக்கும்.

பரோட்டாவை,
இரு கைகள் கொண்டு,
பிய்த்து, சிதற விட்டு,
வட்டமாய் பரப்பிவிட்டு,
நடுவில் குளம் வெட்டி,
அதில் சால்னாவை
நிரப்ப விட்டு,
ஓரிரு நிமிடங்கள் ஊற விட்டு,
வெளிப்புறத்தில் இருந்து,
உள்நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக,
தள்ளிவிட்டு, சால்னாவில் நீந்த விட்டு,
ஐந்து விரல்கள் கொண்டு,
கொத்தாக அள்ளி,
வாயிலிட்டு, ஒரு பக்கமாய் தள்ளி,
மெது மெதுவாக, கடவாய் பல் கொண்டு,
அரைத்தால், கிடைக்கும் சுகமோ அலாதி.
நாம் எடுத்த இந்த பிறப்பின் பலனை
அந்த நொடியே அனுபவிக்க,
இதுவே ஆதாரம்.

இலை காலியாகும் வரை,
விருப்பம்போல், விரும்பியபடி,
உண்டுவிட்டு, கடைசியில்
விரல்களில் ஒட்டியிருக்கும்,
பரோட்டா துகில்களை நாக்கு கொண்டு,
தேடித் தேடி துடைத்தெடுத்து,
இலையையும் கையால்,
கழுவி எடுத்து வாயிற்கு,
வார்த்துவிட்டு எழுந்தால்,
மனதுக்கு இரட்டிப்பு சுகம்,
கிடைப்பது நிஜம்.

பரோட்டாவில் எத்தனையோ வகைகள்.
எங்கள் ஊரில் கொதிக்கும்
எண்ணையில் பொரிதேடுப்பர்,
மனமோ கொதிப்படங்குமுன்,
கொறித்து பார்க்க துடிக்கும்.
வீச்சு பரோட்டா உண்ணும்போது,
உடலின் வீரியம் கூடுவதாய் தெரியும்.
கொத்து பரோட்டா உண்ணுவதைவிட,
கொத்தும்போது எழும் சத்தத்தை கேட்டால்,
சித்தமே கலங்குவதாய் தோணும்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அடிக்கடி மனதுக்குள் எழும் கேள்வி,
பரோட்டா எப்படி தென்
இந்தியாவை அடைந்ததென்று.
சங்க இலக்கியம் படித்தவர்கள்
சொல்கிறார்கள், இது மொகலாயர்
ஆட்சிகாலத்தில் ஊடுருவி இருக்கும் என்று.

எத்தனையோ ஆச்சிரியங்கள் நேரில் கண்டதுண்டு.
ஆனால் பரோட்டா மாஸ்டர்,
பரோட்டா செய்யும் நேர்த்தியே
அளவிடமுடியா ஆச்சிரியம் தான்.

மேசையில் அண்டா மாவை,
அப்படியே கொட்டி,
உப்பும், தண்ணீரும்
மாறி மாறி, தூவி,
சில முட்டைகளை மிதக்கவிட்டு,
துண்டை இறுக இடுப்பில் கட்டி,
துண்டு பீடியை காதில் சொருகி,
கைகளை நல்ல தண்ணீரில் கழுவி,
அணிதிருக்கும் முண்டா பனியனில் துடைத்து,
ஒரு காலை பின் வைத்து,
முன் காலை முட்டுக் குடுத்து,
பரப்பியிருந்த மாவுமேல்,
பாய்ந்து பாய்ந்து தேய்ப்பார்,
முன்னும், பின்னும் மாறி மாறி தேய்த்து,
உருட்டி, பொரட்டி, குத்தி, அடித்து,
அலங்கோலப் படுத்தி,
ஒரு வழியாக உருவகப் படுத்தி,
கிண்ணத்தில் இருக்கும் எண்ணையில்
விரலை விளையாட விட்டு,
சிறு சிறு பந்துகளாய் உருட்டி,
ஓரமாய் வைப்பார்.

பிறகு உருண்டையை,
உள்ளங்கையால் நசுக்கி,
கொஞ்சம் பெரிதாகி,
இரு கைகள் கொண்டு,
விசிறி விசிறி விரியவிட்டு,
அதை கயிறாக்கி,
சங்குச் சக்கரம்போல்,
சுருட்டி சுளுகெடுப்பார்.

சுருட்டியதை தட்டையாக்கி,
கல்லில் போட்டு, வேகவிட்டு,
பத்து பத்தாய் கல்லில் இருந்து எறக்கி,
ஒன்றாய் வைத்து,
முதலாளியை மனதில் நினைத்து,
நாக்கை மடித்து கொண்டு,
ஒரு கையால் பரோட்டாவை பிடித்து,
மறு கையால் மாறி மாறி அடித்து,
அனல் பறக்க சர்வர் தட்டில் வீசுவர்.

நானும் பல வருடம்,
இதை கண்டு, கேட்டு,
கற்றுக் கொண்டதாய் நம்பி,
வீட்டில் தயாரிக்க ஆயத்தமானேன்.

மாஸ்டர் போல் நானும்,
மாவை எடுத்து, பரப்பி,
முட்டையை மிதக்க விட்டேன்.

துண்டும், துண்டு பீடியும் கிடைக்காததால்,
சார்ட்ஸ் போட்டு சமைக்கலானேன்.
மாவை பிசைந்து,
உருட்டி ஓரத்தில் வைத்து,

உருண்டையை உள்ளங்கையால்
நசுக்கி, இரு கைகள் கொண்டு,
விசிறினால், மாவு ராகெட்டாய்
மாறி, எகிறி எரிந்து கொண்டிருந்த
டூப் லைட்டில் பட்டு வெடித்து சிதறியது..

விசிறும்போது கைதவறி,
எண்ணெய் பாட்டிலில் மோதி,
அது தரையில் விழுந்து நொறுங்கியது,
சத்தங்கேட்ட என் மனைவி,
எட்டி வந்து, எண்ணெய் படர்திருந்த
தரையில் கால் பதித்து,
பல்லை பெயர்த்துக் கொண்டாள்.

தூங்கிக் கொண்டிருந்த என் தாத்தா,
சமையல் கட்டு சிலின்டர் வெடித்துவிட்டதாய்
எண்ணி, ஒரே அடியாக வாய் பிளந்தார்!!!

எழுதியவர் : கணேஷ்குமார் Balu (12-Feb-12, 3:45 am)
பார்வை : 874

மேலே