நீங்கள் கேட்ட கதை..!.. .. பொள்ளாச்சி அபி.

நடந்து,நடந்து பிச்சையெடுத்து அவனுக்கு சலிச்சுப்போச்சு.ரொம்பநாளா ஒரு குதிரைவாங்கணும்னு ஆசை.அது மட்டுமிருந்தா வெளியூருக்கெல்லாம் போயி பிச்சையெடுக்க முடியுமேன்னும் அவனுக்கு ஒரு நெனப்பு.ஆனா அதைக்கட்டி மேய்க்க,காசு கட்டுப்படியாகாதுன்னும் ஒரு சலிப்பு.முதல் போடாத பொருளா குதிரையுமிருந்தா எப்படியிருக்கும்..? அவனுக்குள்ளே கேள்வி குடைஞ்சுட்டே இருந்தது.

ஒருநாள் கோயிலைத்தாண்டிப் பிச்சையெடுக்கப் போயிட்டிருந்தப்போ,உண்மையான பக்தியிருந்தா கேட்டதையெல்லாம் தருவார் கடவுள்னு யாரோ பண்ணுன பிரசங்கம் காத்துவாக்கிலே வந்து,அவனோட காதுக்குள்ளே போச்சு.. ‘ஆகா.பக்திக்கு ஒண்ணும் செலவு இல்லையே..ஏற்கனவே பாதிநாள் பட்டினிதான்.அதை விரதம்ங்கிற கணக்குலேயும், அம்மா,தாயே,கடவுளேன்னு பிச்சைகேட்கிறதை,நாமாவளி கணக்குலேயும் சேத்துக்குவோம்’ னு அவன் ஐடியா பண்ணுனான்.மத்தபடி,இப்ப இருக்கற அவசர உலகத்திலே, தவமெல்லாம் இருக்கறதுக்கு காட்டுக்கு போகணும்,மந்திரம் சொல்லணும்னு இப்ப கடவுளே எதிர்பார்க்கமாட்டாருன்னும் அவனுக்கு மனசுக்குள்ளே ஒரு தைரியமும் வந்துச்சு.

இப்ப கொஞ்சநாளா அவன் கணக்குப்படி பக்தி,ரொம்ப முத்திப் போச்சு..இன்னும் இது எவ்வளவு தூரம் முத்தனுமோன்னு அவனுக்கு தெரியலே.சரி காசா பணமா..மெதுவாவே முத்தட்டும்னு,அவன்பாட்டுக்கு இருந்தான்.

அப்படித்தான் பாருங்க..அன்னிக்கு அவன் தூங்கிட்டு இருக்கும்போது,திடீர்னு ஒருத்தர் வந்து, “உன்னோட முத்திப்போன பக்தியை ரொம்ப மெச்சினேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு.?”ன்னு கேட்டதும்,அவனுக்கு தலை,கால் புரியலே.
“ஆண்டவனே..எனக்கு நடந்துபோய் பிச்சை எடுக்கமுடியாததாலே,ஒரு குதிரை வேணும்.முக்கியமா அதுக்கு பசிக்கக்கூடாது.என்னோட சொல்பேச்சை மட்டும்தான் அது கேக்கணும்.அதுவும் சொன்னவுடனே,அடுத்த செகண்டுலே அதை செஞ்சுரணும்.அப்புறம் முக்கியமா..நீங்க தரப்போற குதிரை, குதிரை மாதிரி மெதுவாப் போகக்கூடாது.சும்மா ராக்கெட்டு மாதிரி பறக்கணும். அப்புறம்..அப்புறம் கொஞ்சநேரம் யோசித்தும் அதுக்கு மேலே அவனுக்கு ஒண்ணும் கேக்கத் தெரியலே...சரி அவ்வளவுதான்னு பேச்சை முடிச்சான்.

மலைச்சுப்போன கடவுள், “சரி,இந்தா பிடிச்சுக்கோ”ன்னு சொன்ன அடுத்த செகண்டுலே.அங்க ஒரு குதிரை அழகா நின்னுகிட்டு இருந்தது.ஆனா கடவுள் சொன்னாரு.இந்தா பாரு இதுகிட்டே சும்மா தொணதொணன்னு கண்டதையெல்லாம் பேசமுடியாது.ரெண்டே வார்த்தைதான்.ஒண்ணு நிக்கறதுக்கு,இன்னொன்னு ஓடறதுக்கு..அவ்வளவுதான்னு கண்டீசன் போட்டாரு.
முதல் போடாம ஒரு குதிரை கிடைக்கும்போது,கண்டீசனுக்கு ஒத்துக்கிலேன்னா, கடவுள் திரும்பவும் காணாமப் போயிட்டாருன்னா என்ன பண்றது.அவனோட மனுச மூளை லாபநட்டத்தை உடனே கணக்குப் போட்டது. சரி ஒத்துக்குவோம் னுட்டு,அந்த ரெண்டுவார்த்தையையும் நீங்களே சொல்லுங்க..ன்னான்.
நில்லுன்னா நிக்கும்.கடவுளேன்னா ஓடும் அவ்வளவுதான்னு சொல்லிட்டு அவரு மறைஞ்சு போயிட்டாரு.
அவன் குதிரையைப் பாத்தான்.குதிரையும் அவனைப்பாத்தது.பக்கத்திலே போய் மெதுவா ஏறி அதுமேலே உக்காந்தான்.கடவுளேன்னு சொன்னான்.குதிரை உடனே மின்னல் மாதிரி,படுவேகமா கிளம்பிருச்சு.அது பறக்குதா,ஓடுதான்னு ஒண்ணுமே புரியலே..ஆனா,அவன் எதைக் கண்ணுலெ பாத்தாலும்.அது மின்னல் மாதிரி அவனுக்குப் பின்னாலே போய்ட்டே இருந்தப்போதான்,இது தான் ராக்கெட் வேகம்..னு அவன் தெரிஞ்சுகிட்டான். எப்படியோ,எப்பம்போல நாம இருந்ததைப் பாத்தே பக்தின்னு நெனச்சுகிட்டு கடவுள் குதிரையைக் கொடுத்துட்டுப் போயிட்டாரு.கடவுளுக்கே தண்ணீ காமிச்சதை நெனச்சு அவனுக்குப் பெருமையாவும் இருந்தது.
இந்த நெனப்புலெயே இருந்தவன்,குதிரை போயிக்கிட்டு இருந்த பாதையை அப்பத்தான் கவனிச்சான்.அடக் கருமமே இது எந்த மலைன்னு தெரியலையே..கரடு முரடா இருந்த பாதையிலும்,வேகமாப் போகுதேன்னு அவனுக்கு ஆச்சரியமா இருந்தாலும்,திடீர்னு பயம்வேற வந்துடுச்சு மலை உச்சிவரையும் இப்படியே போயிக்கிட்டு இருந்தா..அப்புறம் பாதாளம்தானே. விழுந்தா என்ன ஆகறது..? ன்னு அவன் நெனச்சுகிட்டு இருக்கறப்பவே கண்ணு எதிர்லே வெட்டவெளியா பாதாளம் தெரியுது.அவன் பதறிப்போய்..நில்லு...ன்னு உயிரையெல்லாம் திரட்டிக் கத்தினான் பாருங்க அந்த மலையே கிடுகிடுன்னு ஆடி எதிரொலிச்சுச்சு. குதிரை போய்க்கிட்டிருந்த வேகத்திலே,அவனோட சத்தத்தைக்கேட்டு அப்படியே நின்னுச்சு.அது நின்ன இடம் பாதாளம் தொடங்குற விளிம்பு.இன்னும் ஒரு எட்டு எடுத்துவெச்சிருந்தா.. அவ்வளவுதான் எண்ணிப் பொறுக்கறதுக்கு எலும்பு கூட கிடைச்சிருக்காதுன்னு அவனுக்கு தெரிஞ்சுபோச்சு.இப்பத்தான் நிம்மதியோட நெஞ்சுலே கைய வெச்சுகிட்டு,தப்பிச்சுட்டோம்ங்கிற நெனப்புலே,கடவுளே..ன்னான்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (12-Feb-12, 4:34 pm)
பார்வை : 667

சிறந்த நகைச்சுவைகள்

மேலே