மகாலட்சுமி

நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது,
விலை வாசியோ விண்ணை முட்டுகிறது,
தங்கத்தை தள்ளி நின்றே பார்க்க முடிகிறது.

பள்ளிக் கட்டணமும் பாடாய் படுத்துகிறது,
வரதட்சணை கொடுமையும் வரம்பு மீறுகிறது,
என்று நிதம் நிதம் புலம்பிக் கொண்டிருக்கும்
ஒரு சராசரி நடுத்தர வர்கத்தின்
சாபக்கேடு நான்.

பெயர் கதிரவன்.
கருத்த தேகம்,
சிறுத்த உருவம்.

மனைவி மாதவி.
சிவத்த நிறம்,
வரைந்து வைத்த சித்திரமாய் ஜொலிப்பாள்.

எனக்கு இரண்டு மகள்கள்.
அப்படியே என்னை உரித்து வைத்தது போல்.

முதல் பெண் குழந்தை
பிறந்த போதே பெரிதும் சங்கடப் பட்டேன்.
நான் ஒரு ஆண் வாரிசு விரும்பியன்று.
இருந்தாலும் இந்த சமுதாயத்தில்,
ஒரு பெண்ணை பெத்து,
பேணிக் காத்து,
கடன் வாங்கி,
தாரை வார்த்துக் கொடுப்பது,
அவ்வளவு எளிதன்று.

ஒரு ஆண் பிள்ளை இருந்தால்
செலவு குறைவு,
வரவும் பெறலாம்.

அடுத்ததாவது ஆண் குழந்தை
கிடைக்க விரும்பி,
ஏறாது கோவிலில்லை,
பண்ணாத பூசயில்லை,
இருந்தும் இந்த மூதேவியும் வயிறும்
இவளைப்போலவே அதிர்ஷ்டக்கட்டை.

கள்ளிப்பால் இட்டு கொள்ள
துணிச்சல் இன்றி சகித்துக் கொண்டேன்.

இந்தமுறை எப்படியும்
ஆண் வாரிசு அடைந்துவிடுவேன்
என்ற உறுதியோடு காத்திருக்கிறேன்.

இன்றோ, நாளையோ மூன்றாவது
பிரசவம் நிச்சயம்,
என்று எண்ணும்போது,
மாதவி கூச்சலிட்டாள்.
வலி வந்துவிட்டது.

ஆட்டோ பிடித்து உள்ளே அமர்தோம்.
இந்த முறை பெண் பிறந்தால்,
இருவரையும் எரித்துவிடுவேன்
என்று எச்சரித்தேன்.
மாதவி அழுதுகொண்டே
மௌனமாய் இருந்தாள்.

பிரசவ வலியை விட,
நான் என்ன சொல்வேனோ என்ற
பயமே அவளை உலுக்கியது.

ஆஸ்பத்திரி அடைந்து,
கைத்தாங்கலாக உள்ளே இட்டுச் சென்றேன்.
நர்ஸ் பார்த்தபின்,
வார்டில் அனுமதிக்கப் பட்டாள்.

நான் வெளியே நின்று,
விடாமல் சிகரட் புகைக்கலானேன்.

திடீர் என்று ஒரு யோசனை.
முடியுமா? முடியாதா என்ற கேள்வி வேறு.
முயற்சி செய்து பாப்போம்
என்று நர்சை அணுகினேன்.

காதில் விஷயத்தை சொன்னேன்.
முடியவே முடியாது என்றாள்.
என் நிலைமையை விலகினேன்.
போறாத ஏழ்மையையும் எடுத்துரைத்தேன்.
அவளும் ஏழை என்பதால் இசைந்து கொடுத்தாள்.
கையிலிருந்த 500 ரூபாயை திணித்தேன்.

இரண்டு மணிநேரம் கழித்து
என் மனைவியை பிரசவத்திற்கு
அழைத்துச்சென்றனர்.

வெகு நேரமாகியும் தகவல் இல்லை.
கொஞ்சம் பயந்து போய்,
வேறொரு நர்சிடம் கேட்டேன் விவரமறிய.

டாக்டர் இன்னொரு பெண்ணுக்கு
பிரசவம் பார்துகொண்டிருகிறார் என்றும்,
என் மனைவிக்கு சற்று நேரம் பிடிக்கும் என்றாள்.

அமைதிகாத்து, அப்படியே அயர்ந்துவிட்டேன்.
தீடீரென்று ஒரு வீச்சு குரல்
கேட்டு பரவசம் அடைந்தேன்.

குழந்தை என்னவென்று அறிந்துகொள்ள
தயாரானேன்.
யாரும் வெளியே வராததால்,
திரும்பவும் அமர்ந்தேன்.

சிறிது நேரம் கழித்து
இன்னொரு குழந்தையின்
சத்தம் வேறு.
உள்ளே இருந்த இருவரும்
குழந்தை பெற்றது உறுதியாயிற்று.

வெளியே வந்த நர்ஸ்,
காதில் என்னிடம் சொன்னாள்,
நாம் திட்டமிட்டபடி குழந்தையை
மாற்றிவிட்டேன் என்று.
இன்னுமொரு 500 பெற்றுச் சென்றாள்.

எனக்கோ ஆனந்தமோ, ஆனந்தம்.
பல நாள் வேண்டிக் கொண்டிருந்த
ஆண் பிள்ளை,
இன்று என் வசமானதை எண்ணி.

குழந்தையை பார்த்தேன்,
நல்ல பருமன்,
கருத்த தேகம்.
மனைவியோ இன்னும் மயக்கத்தின்
பிடியில்.

படபடப்பு அடங்குமுன்,
என் குழந்தையை பார்க்க
பக்கத்து அறை சென்றேன்.

அழகோ, அழகு.
அளவான பருமன்.
அடர்ந்த முடி.
குழி விழும் கண்ணம்.
பெரிய விழிகள்.
சிவந்த நிறம்.
அப்படியே வரைந்து வைத்த
சித்திரம் போல் ஜொலித்தாள்.

அருகில் குழந்தையின் தாய்.
நாற்காலியில் குழந்தையின் பாட்டி.

பாட்டியின் கைகளிலும்,
கழுத்திலும் தங்க நகைகள்
மின்னியதைக் கண்டு,
எனக்கு பேரானந்தம்.

எப்படியோ என் பெண் பிள்ளை
வசதியான வீட்டில் வளரப்போகிறாள் என்று.

அருகில் சென்ற நான்,
குழந்தை மகாலட்சுமி போல் இருக்கிறாள்,
நன்கு படிக்க வையுங்கள்,
நாடு போற்றும் நர்த்தகி போல் வருவாள் என்றேன்.
கூடவே பெண் குழந்தை பிறந்ததால்,
உங்களுக்கு ஏதேனும் மன
வருத்தம் உண்டா? என்றேன்.

அதற்கு அவள் பாட்டி,
அப்படியெல்லாம் இல்ல சார்,
எங்க தொழிலுக்கு பெண்
குழந்தை தான் தேவை என்றாள்,
லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டே!!!!!

எழுதியவர் : கணேஷ்குமார் Balu (19-Feb-12, 12:08 am)
பார்வை : 917

மேலே