திருடினால் திருமணம்?

ஒரு குருகுலத்தில் இருந்த ஆசிரியரிடம் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.

அந்த ஆசிரியருக்கு அழகும் நற்பண்புகளும் மிக்க மகள் ஒருவள் இருந்தார்.

அந்த ஆசிரியர் தனது மாணவர்களில் ஒருவருக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க நினைத்தார்.

ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியே அழைத்த அவர், “என் மகளை உனக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறேன். ஆனால் அவளிடம் போதுமான ஆடைகளோ அணிகலன்களோ இல்லை. நீ உன் நண்பனிடமிருந்து அவனுக்குத் தெரியாமல் பொருள்களைத் திருடி வர வேண்டும். யாரிடமும் சிக்கிக் கொள்ளாமல் திறமையாகச் செயல்பட வேண்டும். தேவையானவை சேர்ந்தவுடன் திருமணம் நடக்கும்” என்றார்.

அன்றிலிருந்து அவருடைய மாணவர்கள் பலரும் தாங்கள் திருடிய பொருட்களை யாருக்கும் தெரியாமல் ஆசிரியரிடம் தந்தனர். அவரும் அவற்றைப் பாதுகாப்பாக வைத்தார்.

ஒரு சீடன் மட்டும் எந்தப் பொருளையும் எடுத்து வந்து அவரிடம் தரவில்லை.

அவனை அழைத்த அவர் கோபத்துடன், “உனக்குத் திறமையில்லை... பிறர் அறியாமல் ஒரு பொருளைக் கூட உன்னால் எடுத்து வர முடியவில்லை..” என்று திட்டினார்.

“அய்யா, எனக்கு தவறு செய்வதில் விருப்பமில்லை. யாரும் அறியாமல் பாவம் செய்ய என் மனம் இடம் தரவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். என்னால் எந்த தீய செயலும் செய்ய முடியாது.” என்றான் அவன்.

அவன் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அவர், “என்னிடமில்லாத செல்வமா? எனக்கு நற்பண்புகள் நிறைந்த ஒருவனே என் மகளுக்கு மாப்பிள்ளையாக வர வேண்டுமென்று விரும்பினேன்.அதற்காக இப்படி ஒரு சோதனை வைத்தேன்” என்றார்.

மற்ற மாணவர்கள் திருடித் தந்த பொருட்களை அவர்களிடமே அளித்தார்.

நேர்மையான அந்த மாணவனுக்கு அவரது மகளை அளித்தார்.

ஆசிரியரின் மகளுக்கும், அந்த நேர்மையான மாணவனுக்கும் திருமணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

******************************
செ.சத்யா செந்தில், தமிழ் முதலாம் ஆண்டு. மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (22-Feb-12, 9:40 am)
பார்வை : 834

மேலே