தலைமுறைகள். காதலர் தின ஸ்பெஷல் -பொள்ளாச்சி அபி.
நண்பர்களே..இந்த கதைக்குள் மேலும் மூன்று கதைகள் ஒளிந்திருக்கின்றன.அவற்றை நீங்கள் எழுத முயற்சிக்கலாமே..!
-----------------
---------------
இனி வருவது கதை.
---------------------
சுப்ரமணியசாமிகோவில் வாசலில் நின்று,
வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.
கோவிலுக்குள்ளிருந்து,பட்டுப்புடவை,ஜரிகைவேட்டி,வைரஅட்டிகை, இரட்டை வடச்சங்கிலி சகிதம் வந்து கொண்டேயிருப்பவர்களை நோக்கி,அய்யா சாமி,ஆண்டவரே என்று பலஜோடிக் கைகள் இடைவிடாது நீண்டு கொண்டேயிருந்தன.அவற்றைக் கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளாத பலரும்,செருப்புவைக்கும் இடத்தில் தங்கள் ஜோடி பத்திரமாக இருக்கிறதா.? என்று சென்றுபார்ப்பதிலேயே குறியாக இருந்தனர்.
ஈஸ்வருக்கு இவற்றைப் பார்க்கும்போது,
“நடமாடும் ஆசாமிகளை,
சாமிகளாகப் பாவித்து
கைநீட்டுவோரிடம்,
தாங்கள் கடவுளாகமாறும்
சந்தர்ப்பத்தை
மறுதலித்து விட்டுப்போகும்
மனிதர்களைப்பார்த்து
சிரிப்புவருகிறது...!” என்று கவிதையாய் மனதுக்குள் ஓடியது.ஆனால் கோவிலுக்குள் சென்றுள்ள தனது தாத்தா சங்கரன்அய்யா அப்படியல்ல. அதுவும் அவனுக்குத் தெரியும்.
அவனது காத்திருப்பை அதிகப்படுத்தக்கூடாது என்று நினைத்தாரோ,என்னவோ வழக்கத்தைவிட,முன்னதாகவே வந்து கொண்டிருந்தார் சங்கரன்அய்யா.தன்னை நோக்கி நீண்ட கைகளில் சில்லறைகளை அவர் கொடுத்தபோது,அவரை நோக்கி கும்பிட்ட கைகளுக்கு,பதிலாக இவரும் கும்பிட்டுக் கொண்டே வந்தார்.
கொடுப்பதால் மட்டுமே தாங்கள் மிக உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு,தங்களுக்கு கும்பிடு போட்ட கைகளையோ,முகங்களையோ ஏறெடுத்தும் பார்க்கப் பிடிக்காதவர்களைப்போல அமர்த்தலாகத் தலையை ஆட்டிக் கொண்டு போகும் சிலரையும் இந்த இடைவெளியில் ஈஸ்வர் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
நெடுநெடுவென்று அண்ணாந்து பார்க்கும் உயரம்.எழுபத்தாறு வயது கடந்தும் ஆகிருதியான தேகம்.இன்னும் விடாப்பிடியாய்,ஜிப்பாவகை சட்டைகளையே போட்டுக்கொள்ளும் அவரது விருப்பம்.நெற்றியின் அகலத்தை நிறைத்துநின்ற சந்தனம்,விபூதியுடன்,அவர் கோவிலை விட்டு வெளியே வரும்போது, இந்தக்கோவிலைக் கட்டிவைத்த அரசன்,ஏதோ நவீனகாலத்து மனுசனாய் மாறி வெளியே வருவதுபோல தோன்றியது,ஈஸ்வருக்கு.
“ஏம்ப்பா..உனக்கு சாமி கும்பிடத்தான் பிடிக்காதுன்னாலும்,எனக்காக உள்ளே வந்திருக்கலாமில்லையா..? வெயில்லே இங்கியே இத்தனைநேரம் நின்னுகிட்டு இருக்கியே..?”தாத்தாவின் குரலில் பாசம் இழையோடியது.
ஈஸ்வருக்குத் தெரியும்.உள்ளேசென்று சாமி கும்பிடாமல்,சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால்,கோவில் குருக்கள் உட்பட தாத்தாவிற்கு தெரிந்தவர்களாக வருபவர்கள், தன்னை ஒருமாதிரிப் பார்க்கக்கூடும்.அது தாத்தாவிற்கு எவ்வித தர்ம சங்கடத்தையும் உண்டுபண்ணிவிடக்கூடாது என்பதால்,அந்த சந்தர்ப்பங்களை அவன் பெரும்பாலும் தவிர்த்துவிடுவதுண்டு.
ஆனால்,தனியாக வரும் சிலநேரங்களில்,கோவிலுக்குள் அவன் சுவாதீனமாகச் சென்று,கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கல்சங்கிலி,யாழி,ராசிச்சக்கரம்,இறைவனுக்கு கண்இடந்து அப்பிய கண்ணப்பர், துவாரபாலகர்கள் என சிற்பவேலைப்பாடுகளை மணிக்கணக்கில் ரசிப்பதுண்டு.
“இல்லே தாத்தா..என்னைப்பத்தி உங்களுக்கு தெரியும்தானே.?”
“எனக்கு இது மட்டுமா தெரியும்.?.இன்னும் உன்னைப் பத்தி நிறையவே தெரியும்.அதுவுமில்லாம இப்ப இங்கே எதுக்கு வந்திருக்கேன்னும் தெரியும்..” சங்கரன்அய்யா சொல்லிக்கொண்டே செல்ல,ஈஸ்வருக்கு வெட்கம் கலந்த சிரிப்பு, “சும்மாயிருங்க தாத்தா..” என்றான்.
இவனைப்பற்றித் தெரியும் என்று சங்கரன்அய்யா சொன்னதிலும் விஷயம் இருக்கிறது.
“சரி.நீ வந்த விஷயத்தை இங்கியே பேசுறஅளவுக்கு ஒண்ணும் அவசரமில்லையே..நம்ம தோட்டத்துக்கு போயிடலாமில்லையா..?”
“ஒண்ணும் அவசரமில்லே,அங்கியே போயிடலாம் தாத்தா..”
சரி உன்னோட வண்டியை எடுத்துட்டு நீ பின்னாடியே வந்துடு”என்றபடி அவர் சென்று அவரது காரில் உட்கார்ந்ததும்,தயாராக இருந்த டிரைவர் வண்டியை எடுத்துக் கொண்டுபோனார்.
ஈஸ்வர் தனது பல்சரைக் கிளப்பினான்.தாத்தாவைப்பற்றி எப்போது நினைத்தாலும்,மனதுக்குள் பெருமையும்,பெருமிதமும் மிகும். கோட்டாம்பட்டியைப் பொறுத்தவரை,அந்த ஊர்மக்களுக்கு நல்லது கெட்டது எதுவென்றாலும் தாத்தாதான் எல்லாம்.அது திருமணமென்றாலும்,இழவு என்றாலும் தாத்தாவிற்குத்தான் முதல் தாக்கீது பறக்கும்.தாத்தாவின் ஆலோசனைகளைக் கேட்டு மோசம்போனவர்கள் இதுவரையில்லை என்பதே ஊரின் நம்பிக்கை.அதை ஒவ்வொரு விஷயத்திலும் தாத்தா நிரூபித்துக் கொண்டுதான் இருந்தார்.
அப்படித்தான் ஒருநாள்,தங்கராசுவின் வீட்டுக்குத் திருட வந்த,இளம்விதவைப் பெண் ஒருத்தியை ஊரின் நடுவில் உள்ள புளியமரத்தில் கட்டிவைத்துவிட்டு, சங்கரன்அய்யாவிடம் வந்து சொன்னார்கள் ஊர்மக்கள்.அய்யா சொன்னால் அப்புறமாகப் போலீசில் சொல்வதாகவும் ஏற்பாடு.
“பெண்ணை புளியமரத்தில் கட்டிவைத்து அடிப்பதா..? என்னடா இது அநியாயம்.யாருடா உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.?” என்று கொந்தளித்துப் போனார் சங்கரன்அய்யா. “தம்பி வண்டியை எடுப்பா..” என்று,காருக்குள் பாய்ந்தவரின் வேகத்திற்கு ஈடாய் விரைந்து சென்றது கார்.
கல்லூரி விடுமுறைக்காக வந்திருந்த ஈஸ்வர் இந்தக்காட்சிகளைப் பார்த்துவிட்டு,அங்கிருந்த மோட்டர் சைக்கிளை எடுத்துக்கொண்டு,தாத்தா சென்ற காரினை அவனும் விரட்டிச் சென்றான்.
அந்தப் புளியமரத்தின் அருகில் சென்ற கார் கிரீச்சிட்டு நின்றதும்,இறங்கிய தாத்தாவை,ஓடிவந்து மொத்த ஜனமும் சுற்றிக் கொண்டது.
“விலகுங்க..முதல்லே கயிறெல்லாம் அவுத்துவிடுங்கப்பா..” கூட்டம் பதறிச்சென்று ஓடிப்போய்,நிமிடத்தில் கட்டுகளிலிருந்து அந்தப்பெண்ணை விடுவித்து,சங்கரன் அய்யா முன்கொண்டுவந்து நிறுத்தியது. “யாரும்மா நீ..?”
ஊர்மக்கள் அவருக்கு கொடுத்த மரியாதையைப் பார்த்து மிரண்டுபோய், நின்றிருந்த அந்தப்பெண்,பேசுவதற்கு தைரியமில்லாதவள்போல சுற்றும்முற்றும் பார்த்தாள்.அவமானத்தால் சிறுத்திருந்த முகமும்,விழிகளில் வழியும் கண்ணீருமாக இருந்தாள்.
நேர்த்தியாய் அவள் உடை அணிந்திருந்த விதமும்,கட்டுகளை அவிழ்த்துவிட்டபின்,உடனடியாக முந்தானையால்,தனது உடலை அவள் போர்த்திக்கொண்ட வேகமும்,இவள் திருடுவதற்காய் வந்த பெண்ணல்ல என்று சங்கரன்அய்யாவிற்கு விநாடிகளில் புரிந்துபோனது.
“சொல்லும்மா.. என்னவிஷயமா இங்கே வந்தே..? திருட்டு,பெரட்டு பண்றதுக்கு நீ இங்கே வரலைன்னு தெரியுது.ஆனா எதுக்கு வந்தேங்கற உண்மையைச் சொன்னாத்தானே எங்களுக்குத் தெரியும்” சங்கரன்அய்யாவின் குரலில் இருந்த பரிவும்,தன்மீது கொண்ட நம்பிக்கையுமாக வார்த்தைகள் வந்து விழுந்ததில், அவள் தைரியம் பெற்றாள்போலும்.சங்கரன் அய்யாவை நோக்கிக் கும்பிட்ட அவள், “அய்யா உங்ககிட்டே,கொஞ்சம் தனியா பேசணும்..”என்று தயக்கமும்,பணிவுமாக தெரிவித்தாள்.
“ஊம்,இந்தாப்பா எல்லாரையும் கொஞ்சம் தள்ளி நிற்கச்சொல்லு.கூட்டம் சிதறி ஒதுங்கியது.சில நிமிடங்கள் அவள் பேசியபின்,சங்கரன் அய்யா,ஆழ்ந்த யோசனையில் இறங்கிவிட்டதாகத் தோன்றியது.
“எல்லாரும் எம் பக்கத்திலே வாங்க,இந்தப் பொண்ணு,என்னோட மகள் முறையாகுது.இவளை எங்கவீட்டுக்கு இப்பநான் கூட்டிட்டுப்போறேன்.யாருக்காவது எதாவது சொல்லணுமா..?” தனக்கு முன் திரண்டிருந்த கூட்டத்தை,மையமாக நோக்கிக் கேட்டார் சங்கரன் அய்யா.
‘திருடவந்ததாய்,தங்கராசுவின் வீட்டிலிருந்து ஆட்கள் கொண்டுவந்து கட்டிவைத்த பெண்,சங்கரன் அய்யாவிற்கு மகள் முறையா..?’.கூட்டம் ஆச்சரியத்தில் வாய் பிளந்தது.ஆனால்,சங்கரன் அய்யா சொன்னால்,அதில் ஏதோ நல்லவிஷயம் இருக்கும்.
“அய்யா,தெரியாம நடந்துருச்சுங்கய்யா.மன்னிச்சுக்குங்கய்யா”.ஜனங்களின் குரலில் நிஜமான வருத்தம்.
“வண்டியிலே ஏறும்மா..”என்று அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார் சங்கரன் அய்யா.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வருக்கு,சங்கரன் அய்யா என்னபேசினார்.? இங்கே என்ன நடக்கிறது.? என்று தலைகால் புரியவில்லை.
ஆனால் ஊர்மக்களின் முன்பாக,இதுகுறித்து தாத்தாவிடம் பேசுவதற்கும் தயக்கமாக இருந்தது.யோசித்தபடியே,வீடு வந்து சேர்ந்தான்.
இரு தினங்கள் கழித்து,தங்கராசுவின் அப்பா,அம்மா,தங்கராசு மூவர் மட்டும் வந்து தாத்தாவை சந்தித்து,சில மணிநேரம் ரகசியம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனார்கள்.அதற்கு மூன்றாம் நாள்,சுப்ரமணியசாமி கோவிலில்,மிகவும் எளிதாக,தாத்தாவின் தலைமையில்,தங்கராசுவுக்கும்,அந்தப்பெண்ணுக்கும் கல்யாணம் நடந்தது.ஆசிர்வாதம் வாங்கிய அந்தப்பெண்,தாத்தாவின் கால்களில் வெகுநீண்ட நேரம் விழுந்து சேவித்து,தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.
ஈஸ்வருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.’திருடி என்று,ஊர்மக்களால் கட்டிவைத்து அடிக்கப்பட்ட பெண்,தங்கராசுவுக்கே எப்படி மனைவியானாள்..?’
அன்று மதியம் அடக்கமுடியாமல்,தாத்தாவிடம் கேட்டே விட்டான்.தாத்தா அமர்த்தலாகச் சிரித்துக்கொண்டே சொன்னார். “ராஜா..” தாத்தா மிகுந்த செல்லமாகக் கூப்பிடுவதென்றால் அவனை அப்படித்தான் கூப்பிடுவார்.தனது தந்தையின் பெயரான தனிக்காட்டு ராஜா என்ற பெயரை,ஈஸ்வருக்கு வைத்திருந்தாலும்,அவ்வாறு முழுப்பெயரை உச்சரித்து விளிப்பது தாத்தாவிற்கு எப்போதும் சம்மதமில்லை.
“சொல்லுங்க தாத்தா..”சுவாரஸ்யமான கதை கேட்பதற்கு,ஆர்வம் மின்ன தாத்தாவின் முன்வந்து அமர்ந்து கொண்டான் ஈஸ்வர்.
“நீ இப்ப காலேஜிலே படிக்கிறே.இந்தக் கதையைப் பத்தி இன்னொரு நாளைக்கு சொல்றேன்.”என்று தாத்தா சொன்னதும்,பொசுக்கென்றாகி விட்டது ஈஸ்வருக்கு.
அதற்குப்பின்,மீண்டும் ஒருமுறை அதைப்பற்றி தாத்தாவிடம் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.சில மாதங்கள் கழித்து,அந்த மர்மத்தைப் பற்றி ஊரார் மூலம் தெரிந்து கொண்டபின்,அவன் தாத்தாவிடம் கேட்கவுமில்லை.அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளவுமில்லை.ஆனால் தாத்தாவின் மீது வைத்திருந்த மதிப்பு,பல மடங்கு கூடிவிட்டது.
முன்னால் சென்று கொண்டிருந்த காரிலிருந்து,ஈஸ்வரைத் திரும்பிப் பார்த்தார் சங்கரன் அய்யா.சீரான வேகத்தில்,அலட்டல் இல்லாமல் தன்னைப் பின்தொடர்ந்து வருவது தெரிந்தது.
தனது அப்பாவைப்போலவே முகஜாடை கொண்டிருந்த ஈஸ்வரைப் பார்க்கும்போதெல்லாம்,மதிப்பு மிகும் சங்கரன் அய்யாவிற்கு.அப்பாவைப் போலவே,ஈஸ்வரும் தன்மீது பிரியமும்,மரியாதையும் வைத்திருப்பதை நினைக்கும்போதெல்லாம் சங்கரன் அய்யாவிற்கு,ஏதோ பூர்வஜென்ம புண்ணியம் நிறைவேறியது போல மகிழ்ந்துபோவார்.
‘பாவம்.., தனக்கு ஒரு பிரச்சினையென்றும்,தாத்தாவின் மூலம் மட்டுமே அதைத்தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் வந்திருக்கிறான்.கல்லூரிப் படிப்பு முடியும்வரை கட்டுப்பாட்டுடன் இருந்த பிள்ளைதான்.படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவனாய் நன்றாகப் படித்து,தற்போது ஒரு நல்லவேலையிலும் அமர்ந்துவிட்டான்.இப்போது ஈஸ்வருக்கு கல்யாணம் செய்துவைத்துவிடலாம் என்று மகளும்,மருமகனும் ஆலோசித்தபோதுதான் பிரச்சினை தலைதூக்கியது.வேறு என்ன காதல்தான்.,’
சொந்த பந்தங்களுக்குள் இருக்கும் சாதியக் கட்டுப்பாடு.சொத்துக்குவிப்புக்கான அஸ்திரமாகவே இருக்கிறது என்பது சங்கரன் அய்யாவிற்கு நன்றாகவே தெரியும்.ஆனால் பாதுகாப்பான வாழ்க்கை என்பதால்,அதனை மீறுவதற்கு பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை.இதோ இந்த ஈஸ்வரைப்போல எப்போதாவது சில விஷயங்கள் காதுக்கு வரும்.அதுவும் வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்கள்,வாலிபர்கள் என்பதாக மட்டுமே தெரியும்.இவர்களில் நல்ல வேலையில் இருப்பவர்கள்,பொருளாதார ரீதியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் வாழக்கையில் ஜெயித்துக் கொண்டிருந்தார்கள்.
ஈஸ்வருக்கும் பதவி உயர்வுகளைப் பெற்றுத்தரும் நல்லபடிப்பு இருக்கிறது,நல்லவேலையும் இருக்கிறது.ஆனால் காதலை முன்னிறுத்தி பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்வேன் என்றும்,தான் விரும்பிய வேற்று மதத்தைச் சேர்ந்தபெண்ணை திருமணம் முடிக்க நீங்கள்தான் உதவவேண்டும் என்றும் வந்திருக்கிறான். மற்றவர்களைப்போல ஓடிப்போய்,பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க எண்ணாமல்,வாழ்க்கையை ஜெயிக்கவேண்டும் என்ற போராட்டத்திலும் இருக்கிறான்.சங்கரன்அய்யாவிற்கு அவனது உறுதியும்,தன்மேல் வைத்திருந்த நம்பிக்கையும் மிகவும் பிடித்திருந்தது.
இந்த விஷயமெல்லாம் அவன் இங்கு வருவதற்கு முன்பாகவே,சங்கரன் அய்யா கிரகித்துவைத்துக் கொண்டிருந்தார்.
“சொல்லு ராஜா..நான் என்ன பண்ணணும்.?”வீட்டுக்கு வந்து சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சங்கரன் அய்யா,ஈஸ்வரின் முகத்தை நேராகப் பார்த்துக் கேட்டார்.
“தாத்தா என்னோட பிரச்சினையெல்லாம் அம்மா,அப்பாகிட்டே சொல்லியும்,அவங்க சம்மதிக்கலே.சொந்தபந்தம் என்ன சொல்லும்னுதான் கவலைப்படறாங்க..”
“சரி,பொண்ணு வீட்டுலே என்ன சொல்றாங்க..?”.
“வேற்று மதத்திலேருந்து,மாப்பிள்ளையா..? அதக் கொஞ்சம்கூட எங்களாலே ஒத்துக்க முடியாது.இனிமேல் இது பத்தி பேசவே நாங்க தயாரில்லேன்னு சொல்லிட்டாங்க தாத்தா..”
‘கீதை இந்துக்களையும்,
குரான் மூஸ்லீம்களையும்,
பைபிள் கிறித்தவர்களையும்
படைத்தது போதும்,இவை
இனியேனும் மனிதர்களைப் படைக்கட்டும்’, சங்கரன் அய்யாவின் மனசுக்குள் எங்கோ படித்த கவிதை ஓடியது.
“அந்தப் பொண்ணு ..?”
“அவ ரொம்ப உறுதியாத்தான் இருக்கா.,நீங்க பாத்து என்ன செய்யச்சொன்னாலும் அதுபடி நடப்பேன்னு சொல்லீருக்கா..”
“அப்ப சரி..,நான் போய்ப் பேசறேன்”சங்கரன் அய்யாவின் குரலில் உறுதியிருந்தது.
‘தாத்தா போய்ப் பேசறேன்னு சொன்னாலே,அந்தக் காரியம் சுபமா முடிஞ்ச மாதிரிதான்’.ஈஸ்வருக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.
கண்களில் நன்றியுடன்,கைகளைக் குவித்த ஈஸ்வர் தாத்தாவின் கால்களில் விழுந்து வணங்கினான்.மனம்நிறைய ஆசீர்வதித்த சங்கரன் அய்யா,அவனை எழுப்பி,தன்னுடன் அணைத்துக் கொண்டார்.’நீ ஜெயிக்காமப் போனா..வேற யாராலே ஜெயிக்க முடியும்.?’ சங்கரன் அய்யாவின் மனசில் எழுந்த கேள்வியுடனேயே, ‘எனது இளமைக்காலத்தில் எனக்கு ஆதரவாக யாரும் இல்லாமல் போனதால்,எனது காதல்,பலியாகிவிட்டது.அப்படி உன்னையும் விட்டுவிடமாட்டேன்..!’ என்றும் நினைத்துக் கொண்டார்.
தலைமுறைகளின் ஆரோக்கியமான புரிதல்,அந்த மாலை நேரக் கதிரவனுக்கும் புரிந்ததோ என்னவோ. மரங்களின் இடைவெளியினூடே,தன் கிரணங்களை நீட்டி அவர்களை,அவனும் அணைத்துக் கொண்டான்.