ஊழல் ஒழிய வழி

லஞ்சம்
இது அன்பளிப்பில் ஆரம்பித்த அவலம்.
அழிவின் படிக்கட்டு, வக்கிர காரியங்களின் பிறப்பிடம்.
நம் பணத்தில் நாமே நம் நாட்டுக்கு வைத்துக் கொண்ட சூன்யம்.
சில்லறையில் ஆரம்பித்து கோடியை தொட்டு விட்ட வினோதமான வியாபாரம்.
பிறந்தது ஆனா, பெண்ணா என்பதை சொல்ல கூட பணம் எதிர்ப்பார்க்கிறார்கள். இது எழுத படாத சட்டமாக இன்னும் அரசு மருத்துவமனைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாம் ஏன் இதை அங்கீகரிக்க வேண்டும். இருப்பவர்கள் யாரோ சிலர் பழகியது, அதை கட்டாயமாக்கி இல்லாதவர்களிடமும் எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம். பிறக்கும் போதே
நம் குழந்தையின் வாழ்க்கையை லஞ்சத்தில் இருந்து ஏன் ஆரம்பிக்க வேண்டும்.
வரிசையில் நிற்க்க பொறுமையின்றி பொது மருத்துவமனையில் ஆரம்பித்து நியாய விலை கடை வரை ஐந்து பத்து ருபாய் கொடுத்து முன்னே செல்கின்றனர். இந்த சிறு புத்திக்காரர்களால் நம் நாடு பின்னே சென்றுக் கொண்டிருக்கிறது.
அளவிற்கு மீறிய வேகத்தில் சீறி பறப்பது, பின் போக்குவரத்து காவல் அதிகாரியிடம் மாட்டிக் கொள்வது. செய்த தவறுக்கான தண்டனையை சந்திக்க முன் வராமல் ஐம்பது நூறில் முடிக்க நினைத்து அங்கே லஞ்சத்தை திணித்து விட்டு தப்பிப்பது. .
வருடம் தவறாமல் பதிவு செய்து, வரும் அரசாங்க தேர்வுகள் ஒன்று விடாமல் எழுதி தகுதிக்கேற்ற ஒரு வேலைக்கு காத்திருந்து கிடைக்காமல் போனவர் எத்தனை பேர்.
இதற்க்கு காரணம் என்ன..? யாரோ ஒருவர் கொடுத்த ஆயிரம் இரண்டாயிரம் லஞ்சம் அவன் தகுதியற்றவனாக இருந்தாலும் வேலை கிடைக்க செய்கிறது.
ஐந்து பத்தில் தொடங்கி, ஐம்பது நூறில் அடி எடுத்து வைத்து, ஆயிரத்தை கடந்து இப்போது கோடியை தொட்டும் கூட முடிவின்றி சென்றுக் கொண்டிருக்கிறது வளர்ச்சியை தடுக்கும் வக்கிர பாதையில்.
எத்தனை எத்தனை நிகழ்வுகள் நம்மை சுற்றி நடக்கிறது அத்தனையிலும் கலந்திருக்கிறது அழிக்க முடியாத லஞ்சம்.
லஞ்சம் கொடுத்து பதவியை, வேலையை, கல்லூரியில் இடத்தை வாங்கி சுகம் அனுபவிக்கும் இவர்களும் நம் நாட்டவர்கள் தான்.
இவர்களால் பாதிக்கப்பட்டு வறுமையிலும் வேதனையிலும் செத்துக் கொண்டிருப்பார்களும் இந்நாட்டவர்கள் தான். நாம் நம்மையே தண்டித்துக் கொள்ளும் அவல நிலையில் இருக்கிறோம்.
லஞ்சம் ஒழிய வழி என்ன?
பொறுத்திருந்து வரிசையில் செல்வோமே.
திறமை இருப்போருக்கு வழி விடுவோமே.
செய்த தவறுக்கு தண்டனை எதுவாயினும் சந்திப்போமே.முடிந்தவரை தவறுகளை தவிர்ப்போம்.
நேர்மையாக இருக்க பழகுவோம். நம்மை சுற்றி உள்ளவர்களை கொஞ்சம் நினைவில் கொள்வோம்.
லஞ்சம் கொடுப்பது யாராயினும் தட்டிக் கேட்ப்போம்.
வாங்க மறுப்போம். இளைஞர்கள் நாம் நினைத்தால் இதை மாற்றி அமைக்கலாம் என்று நான் நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள்.
ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு குழந்தைகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தந்தை, ஊழல் செய்பவராக இருந்தால், அவரிடம் குழந்தைகள் அன்பாக பேசி, அவரது தவறை உணர்த்த வேண்டும்.
ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகளையும், சமுதாயத்தில் ஊழல் செய்வோரின் நிலையையும் எடுத்துக் கூற வேண்டும்.
ஊழல் செய்து வரும் பணத்தை வாங்க மறுத்தாலே, ஒரு குடும்பத்தில் யாரும் ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது.
40 கோடி மாணவர்கள் உள்ள இந்த நாட்டில், இவ்வாறு அனைவரும் கூறினாலே, பெருமளவு லஞ்ச ஊழல் மறைந்து விடும் என்ற அப்துல் கலாம் அவர்களின் கூற்றை அமோதிப்போம்.
குறிப்பு: எனக்கு தெரிந்த, கண்ணில் பட்ட சில விஷயங்களை எடுத்துக் காட்டாக இங்கே எழுதி இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கூட சொல்லலாம். லஞ்சம் என்ற சொல்லை அகராதியை விட்டே ஒழிக்க வேண்டும் அதற்க்கான வழிகள் இருந்தால் நீங்களும் சொல்லுங்கள். நன்றி.