ஒ! இது அவனே தான்!

மண்ணின் மணமிகு வாசனை
விண்ணின் வியத்தகு கர்ஜனை
சாளரங்களின் அரட்டை சத்தம்
திரைச்சீலைகளின் மோகினி ஆட்டம்
இசைந்து நடனமாடும் தளிர்
உடல் விறைக்கும் குளிர்
ஒ! இது அவனே தான்!

இடமின்றி போராடும்
இயற்கையின் பிள்ளைகளோடு
இன்னுமோர் போர்தொடுக்க - இம்சையாய்
வந்துவிட்டான் அவன்

ஒளித்து வைத்திருக்கும் அவன்
ஓயாத நினைவுகளை எல்லாம்
ஒட்டுமொத்தமாய் அவிழ்த்து விட - ஓசையோடு
வந்துவிட்டான் அவன்

சாவகாசமாய் சுற்றி அமர்ந்து
சர்வமும் சாரத்தோடு பேசிய
சரித்திரத் திண்ணைகளை ஈரம்செய்ய - சாரல்தூவி
வந்துவிட்டான் அவன்

சிரமமின்றி கப்பல்கள் செய்து
சாலைக்கடலில் போட்டியிடும்
சின்னஞ்சிறு வ.உ.சி.களுக்காக - சிநேகத்தோடு
வந்துவிட்டான் அவன்

நீர் மறந்த குளம் குட்டைகளையும்
நீள் வரிசை வெற்றுக்குடங்களையும் கன நேரத்தில்
நிரப்பி வேடிக்கை பார்க்க - நிதர்சனமாய்
வந்துவிட்டான் அவன்

காடும் நாடும் குளிர்ந்திருக்க
காதல் பூக்கள் மலர்ந்திருக்க
காற்றில் வாசம் கலந்திருக்க
கொட்டு கொட்டென்று கொட்டிக்கொண்டு
வந்தேவிட்டான் அவன்
அவனே தான் அந்த "மழை" கள்ளன்.

எழுதியவர் : (5-Mar-12, 2:18 pm)
சேர்த்தது : mazhaithendral
பார்வை : 147

மேலே