முயன்று பாரீர்!
நாளை யென்பது இல்லை-சிறு
......நன்மை யென்பது
......முற்றிலு மில்லை!
கோழை யெனக்கி டப்பார்-தமக்குக்
......கேடன்றி வாழ்வில்
......வேறெது மில்லை!
கண்ணீர் சிந்து தற்கோ-இரு
.....கண்களைக் கொண்டு
.....பிறந்துநாம் வந்தோம்?
மண்ணிலும் விண்ணிலும் ஆடி-மிக்கச்
.....சந்தோஷங் கொண்டு
.....வாழ்ந்திட வந்தோம்!
விதிமிக வலியுடைத் தாகும்-அஃதை
......வெல்லல் கடிதென
......உரைத்தவர் மூடர்!
விதியினை மாய்த்திடச் செய்யும்-ஒரு
......வெற்றி மந்திரம்
......முயற்சியாம் காணீர்!
எண்ணிய யாவுங் கிட்டும்-என்றும்
.....அயர்ச்சி யுறாதொரு
.....முயற்சி மேற்கொண்டால்!
பின்னொரு துன்பிங் கில்லை-என்றும்
.....பேரா நித்தியப்
.....பேரின்ப மொன்றே!
மலையொடு காடுகள் கடக்கும்-நதியே
......முடிவிற் கடலினிற்
......சேர்ந்திடு மன்றோ?
நிலையாய் ஓரிடந் தன்னில்-தேங்கும்
......குட்டை கடல்சேரக்
......கண்டவ ருண்டோ?
அதிர்வுகள் தாங்கிட வில்லை-எனில்
.....காற்றுக் கேதிங்கு
.....கானங்கள் சொல்லீர்!
வதியுமா மரங்களோர் கோடி-மலர்
.....மகுடங்கள் தரிப்பது
....பாறைகள்கடக் கும்வேர்களாலே!
எந்தக் கல்லும் இம்மண்ணில்-ஒற்றைச்
.....செதுக்கலில் அழகிய
.....சிற்பமாய் விடாது!
எந்தச் செயலிலும் வெற்றி-இங்கு
.....ஒற்றை முயற்சியிற்
.....கிடைத்து விடாது!
தோல்விகள் தாங்கிட வேண்டும்-ஆயின்
.....துவண்டு வீழ்ந்திடக்
.....கூடா தென்றும்!
தோல்விகள் தோலெனச் சொன்னேன்-உள்ளே
.....வெற்றியெனுங் கனியுண்டு
.....சுவைத்து மகிழ்வீர்!
சோற்றினுக் கிலாதபல பேர்கள்-இந்த
......செகத்தினை ஆண்டது
......முயற்சியி னாலே!
சாற்றிடுங் கதைக ளன்று-சாகா
......சரித்திரமா வீர்நீரும்
......சற்று முயன்றுபாரீர்!
---------ரௌத்திரன்