வலிக்கிறது அம்மா !

அன்புள்ள அம்மா !

உங்களுக்கும் எனக்கும்
இடையில் எத்தனையோ நிகழ்வுகள்;
உங்களுக்கும் என்னைப்பற்றி
எத்தனையோ நினைவுகள் ;
இனிமேல் இருவரும்
அவைகளைப் பரிமாறிக்
கொள்ள முடியாது அம்மா !

நான் இப்போது கைதியாய்
நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறேன்;
கைகள் கட்டப்பட்டும்
கண்கள் மூடப்பட்டும்
களிச் சேற்றில் கிடக்கிறேன் அம்மா !

கடிதமும் எழுத முடியாது
எவரிடமாவது சொல்லி அனுப்பலாம்
என்றால் அதுவும் இயலாது!
சிங்கள ஆர்மி அண்ணன்
துப்பாக்கியின் பேனட்டால்
குத்திக் கிழித்த காயத்துடன் இருக்கும்
என் முதுகில் சிறு நீர் கழித்துக்
கொண்டிருக்கிறார் அம்மா !

நிலம் பெயர்ந்தும்
இடம் பெயர்ந்தும்
புலம் பெயர்ந்தும்
போன உங்களுடன்
நானும் வந்திருக்கலாம்தான்;
உங்கள் ஆசைதன்னை
நிறைவேற்றும் எண்ணமுடன்
இருந்து விட்டேன் அம்மா !

நிலா காட்டி நீங்கள்
சோறு எனக்கு ஊட்டும் போது
நான் எப்படி வளர வேண்டும்
என்று ஆசைப்பட்டீர்களோ தெரியாது!
ஆனால் உயர் கல்விக்குப்
புதுப்பள்ளிக்கூடம் சேர்வதற்கு
அப்பாவுடன் கிளம்பிய
முதல் தினத்தன்று
அம்மா! நீங்கள் என் நெற்றியில்
திருநீறு பூசிவிட்டு,
"நான் நன்றாய்ப் படித்து
டாக்டர் ஆக வேண்டும்!" என்று!
என்னை ஆசிர்வதித்தீர்களே, நினைவிருக்கிறதா?
அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும்
என்ற வைராக்கியத்திற்காகத்தான்
உங்களோடு நான் வரவில்லை !

நான் கலாசாலையின் விடுதியில்
படித்துக் கொண்டிருந்த பொழுதுதான் ஆர்மிக்காரர்கள்
என்னைப் போராளி என்று பிடித்து வந்து
இங்கே கிடத்தியுள்ளார்கள் அம்மா !

பசிக்கிறது அம்மா!
இப்படிதான் தவிக்கிறது தண்ணீர்
வேண்டும் என்று கேட்டேன்;
கொதி தண்ணீரைக் கொண்டு வந்து
வாய்க்குள் ஊற்றிவிட்டார்கள்;
வாயெல்லாம் 'கொப்புளங்கள்'
வலி தாங்க மாட்டாமல் அழுததற்குத்தான்
அந்த அண்ணன்மார்கள்
"கொப்புளங்கள் காய வெண்ணெய்
சாப்பிடு!" என்று சொல்லி
சேவிங் க்ரீமை வாய்க்குள்ளே
திணித்து விட்டுச் சிரித்தார்கள்;
அப்போதும் அந்த அண்ணன்மார்களை
சபிக்க மனம் இல்லையம்மா !
நீங்கள் கற்றுத் தந்த பாடத்தைக்
கடைசிவரைக் காப்பேன் அம்மா !

நான் சிவிலியன் என்று அந்த
அண்ணன்மார்களின் கால்களில்
விழுந்து அழுதும் விடவில்லை;
இதோ நிர்வாணமாய் மண்ணில்
கிடக்கிறேன் அம்மா !

ஒரு நொடியோ, நிமிடமோ,
அல்லது ஒரு மணியோ
அந்த அண்ணன்மார்கள்
என்னோடு விளையாடும்
விளையாட்டு அவர்களுக்குப்
புளித்துப் போகும் வரை...
என் உயிர் என்னிடம் தங்க .........!

எழுதியவர் : முத்து நாடன் (16-Mar-12, 11:16 pm)
பார்வை : 351

மேலே