தாயின் கனவு

வானமதில் வெண்ணிலவு தோன்றும் நேரம்
வையமதில் அல்லி முகம் மலரும் நேரம்
அன்னை என் எண்ணமதில் கற்பனை கொண்டு
கனவுகள் ஓராயிரம் காணுகின்றேன் |

செம்பவழம் போலிருக்கும் அவன் அதரங்களும்
செந்தாமரை போல் சிவக்கும் கன்னமதும்
செந்தூரத் திலகமிடும் நெற்றிமேடும்
சிரிக்கின்ற போதுள்ள கண் அழகும் - என்
சிந்தையினை மயக்கத்தான் செய்யாதோ ? அவன்
தந்தைக்கு இன்பம் தான் வாராதோ !

கண்ணன் என் மன்னனுக்கு நன்றி சொல்லி
செல்வமகன் புன்சிரிப்பில் நான் மயங்கி
தெள்ளமுதம் போலினிக்கும் அதரமதில்
தெவிட்டாத முத்திரையைத் தந்திடுவேன் |

சோற்றுப் பருக்கையினை அள்ளி இரைத்திடுவான்
சோர்வுடனே நான் அவனை சலித்துக் கொள்ள
நெற்றித் திலகமதை அழித்திடுவான் - திட்ட
அவன் முகம் நான் நோக்க
வெற்றிச் சிரிப்பொன்றைத் தந்துவிட்டு
பெற்ற என் மனதைக் குளிரச் செய்வான் |

துன்பமெல்லாம் நான் மறந்து சிரித்திருப்பேன்
துயிலாது அவன் முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணிமை போல் அவன் உயிரைக் காத்திருப்பேன்
கருத்தாக நல்லவனாய் நான் வளர்ப்பேன் |

பெற்றவர் மனம் குளிர நடந்திடுவான்
சுற்றமெல்லாம் உயரும் வண்ணம் உயர்ந்திடுவான்
எத்தனை கோடி செல்வமதை நான் சேர்த்தாலும்
என் செல்வமகன் மழலைக்கு ஈடாகுமோ !!

எழுதியவர் : ஜெயா பத்மனாபன் (10-Sep-10, 3:27 pm)
பார்வை : 483

மேலே