மழைக்காலம்.....


இருட்டாகும் வெளிச்சம் கூட
இனிமையாகும் நேரம் இது..

நீலம் நிறம் மாறும்போதெல்லாம் - என்னவோ
நானும் மாறிப்போகிறேன். மயில்தோகையைப் போல..

வருடக்கணக்கில் சூரியன் கொடுக்காத கூச்சத்தை,
வருடிச்செல்லும் ஒரு துளியில் எழுப்பி விடுகிறாய்...


மண்ணில் விழுந்து சிதறும்போதெல்லாம்,
மனதை வேரோடு பிடுங்கிச்செல்லும் வாசக்காரி...
முகத்தோடு நீ உரசும்போதெல்லாம்,
முத்தத்தின் ரகசியம் புரிகிறது.
கண்களை ஏன் மூடிக்கொள்கிறோம் என்று...


கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்தி,
காகிதங்களை தேடிக்கொண்டிருக்கும்,
பக்கத்து வீட்டு பையனிடம் இன்னும்
கற்றுக்கொண்டே இருக்கிறேன்,
கத்திக்கப்பல் எப்படி செய்வதென்று...


காய வைத்திருக்கும் துணிக்கொடிக்குப் பின்னால்,
கிணற்றடி வாளி அன்னாந்து பார்த்து சிரிக்கிறது,
கிழவியையுமா நீ விட்டுவைக்கவில்லை என்று...


திண்ணையில் நனைந்து ஒதுங்கிய,
தெருக்கோடி நாயின் நாக்கில் தெரிந்தது,
திண்ணச்சொல்லி அம்மா கொடுத்த
எண்ணை பலகாரத்தின் வெதுவெதுப்பு...


நீ
பெண்பால் என்பது உண்மைதான் -அதற்காக,
சன்னல் கம்பியை கூடவா தாண்டிவர வெக்கப்படுகிறாய்...

துரத்திப்பிடித்து இழுக்க நினைக்கும்போதெல்லாம்,
தூவானத்தால் என்னை சிறை பிடித்துகொள்கிறாய்..

நீலம் நிறம் மாறும்போதெல்லாம் - என்னவோ
நானும் மாறிப்போகிறேன். மயில்தோகையைப் போல..

எழுதியவர் : gshyamraj (17-Sep-10, 11:48 am)
சேர்த்தது : shyamraji
பார்வை : 332

மேலே