எங்களூர் திருவிழா..!!

சித்திரைமாத நிலவின் பவுர்ணமி ஒளிபொங்கும்
சிறப்பான திருநாளை எங்களூர் கொண்டாடும்
வருசத்தில் ஒருநாள் வசந்தத் திருநாள்
வயசுப் பசங்களும் வயசானவர்களும் மனம்சேர வரும்நாள்
நாட்டாண்மை பஞ்சாயத்து கணக்குப் பிள்ளையென
கோயிலுக்கு வசுலிக்க புறப்படும் ஒருகூட்டம்
வீட்டில் எப்போதோ எடுத்துவச்ச கொஞ்சநெல்லு
வேண்டி முடிஞ்ச காசென கொட்டும் பெண்கள்கூட்டம்
வண்ணக் காகிதங்களை கத்தரித்து ஒட்டி
கொடிகட்டும் பள்ளிச் சிறுவர்கள் கூட்டம்
தென்னங்குலை பனங்குலை ஈச்சங்கொத்து
வாழைமரமென வெட்டித்திரியும் இளவட்டக் கூட்டம்
தரயைப் பெருக்குதல் கூட்டி நீர்த்தெளித்தலென
கோயிலை சுத்தம் செய்யும் பெண்பிள்ளைகள் கூட்டம்
பூசைகளுக்கு வேண்டிய பொருட்களை சேர்த்தல்
கோயிலின் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டலென
மும்முரமாய் ஈடுபடும் இளைஞர்கள் கூட்டம்
வேலைகள் எப்படி எல்லாம் நடக்குதென
வந்து வந்து விசாரிக்கும் பெரிசுகள் கூட்டம்
மயிலாட்டம் கரகாட்டம் பொய்க்கால் குதிரையாட்டம்
குரவங்குரத்தியாட்டம் பொம்மலாட்டம் அரிசந்திர நாடகமென
நாளுக்கொண்று நடத்த திட்டமிடும் நடுத்தர வயசுக்கூட்டம்
ஊரே கூட்டமாகக்கூடி கொண்டாடும் திருநாளில்
எங்களூர் ஐய்யனார்சாமி ஊர்ப்பெரியவர் மோல்வரும்
ஊருக்கே ஆசியும் அருளும் கிடைக்கும்..!!

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (9-Apr-12, 10:23 am)
பார்வை : 237

மேலே