சிலைகள் செய்ந்நன்றி ஆகா!

தேரினை இழந்த பின்பு
-------திருவிழா நடத்து கின்ற
நேரிலா அறிஞர் தேசம்
-------நானிலந் தன்னில் இஃதே!
ஆறிலே ஒன்று போன
-------நாயிடம் உள்ள நன்றி
சீருடன் பிறந்த நம்மில்
-------சிறிதள வேனும் இல்லை!

எத்தனை மேதை கள்இந்
-------நாட்டிலே பிறந்து வந்தார்?
அத்தனை பேரில் யாரை
-------உண்மையில் மதித்து நின்றோம்?
செத்தபின் சிலைகள் வைத்தல்
--------செய்ந்நன்றி ஆகா தென்றும்!
மத்தியில் வாழும் போதே
--------மகுடங்கள் சூட்ட வேண்டும்!

சந்தியில் சிலையை நாட்டி
-------சிலையினைத் திறப்ப தற்கு
மந்திரி அவரோ டின்னும்
--------மடையர்கள் நால்வர் கூட்டி
"எந்தையே எங்கள் கோவே!"
--------என்றுமோர் கவிதை தீட்டி
வந்ததோ டென்ன செய்தோம்?
--------வழக்கம்போல் மறந்து விட்டோம்!

சந்தியில் நிற்ப தந்த
-------சரித்திர புருஷர் தம்மின்
மந்திர சிலைகள் மட்டும்
-------என்றாநீர் நினைத்தீர்? இல்லை!
செந்தணல் பட்ட அன்னார்
-------சித்தாந்தங் களும்தான்! இஃதைச்
சிந்தையில் என்று வைப்பீர்?
-------சிறப்பினை என்று காண்பீர்?

கருவது கலைந்த பின்பு
-------தொட்டிலை வாங்கும் மக்காள்!
தருவது பட்ட பின்பு
-------தண்ணீரை ஊற்றும் மக்காள்!
இருவிழி போன பின்பு
--------மையினைத் தீட்டும் மக்காள்!
பெறுவது இதனால் நீவிர்
--------பெரிதாக ஏதும் இல்லை!

உழுவதை விட்டு விட்டு
--------உலுத்தரே நீவி ரெல்லாம்
கொழுவினைச் சுற்றி வந்து
--------கும்பிடு வதாலே என்றும்
தழுவிய வறுமை போகும்
--------என்றுநி னைத்தி ருந்தால்
அழுவது அன்றி வேறு
--------வழியுமக் கில்லை யென்பேன்!

நேற்றுநாம் வாழ்ந்த வாழ்வு
--------நாளையும் தொடர்ந்தால் தாழ்வு!
மாற்றுவோம் நமது சாலை
--------மலரட்டும் புதிய நாளை!
போற்றுவோம்; மேலும் அன்னார்
--------புகன்றநற் கொள்கை யாவும்
ஏற்றுநாம் நடப்போம்; நல்ல
--------ஏற்றத்தில் களித்தி ருப்போம்!


------------ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (9-Apr-12, 3:17 pm)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 180

மேலே