கவின் சாரலன்-உடன் ஓர் இனிய இலக்கிய யுத்தம்!(பாகம்-1)

மதிப்புக்குரிய கவின் சாரலன் அவர்களே!
உங்களோடு ஓர் இனிய இலக்கிய யுத்தம் புரிய வருகிறேன்.

ஆமாம்!
இது ஓர் இனிய இலக்கிய யுத்தம். அவ்வளவுதான்!

எவரும் வேறுமாதிரியான கண்ணோட்டத்துடன்
பார்த்துவிடக் கூடாது.

"இரண்டு கவிஞர்கள் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டால்
மூன்று காவல் நிலையங்கள் அங்கே அமைக்க வேண்டும்"
என்ற பெரியாரின் வார்த்தை உண்மையாகிவிடக் கூடாது.

இது ஓர் இனிய இலக்கிய யுத்தம். அவ்வளவே!

திரு கவின்சாரலன் அவர்களுக்கு நான்
நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

எனது "அறிவாயா காதலா?" என்ற கவிதைக்குத்
தாங்கள் கருத்துத் தெரிவித்திருந்தீர்கள்!

உங்கள் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

ஏனெனில்,
உம்மைப் போல் நன்கு இலக்கியம் அறிந்த நல்லவர்தம்
பாரட்டுகளை நான் மகுடம் போல் எண்ணி
மகிழ்கிறேன். மதிக்கிறேன்.

அதே நேரம் நமது இந்த இனிய இலக்கிய யுத்தத்தை
இங்கிருந்தே துவக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஏனெனில்,
தாங்கள் எனது கவிதைக்கு அளித்த கருத்தும் கூட
ஒரு கருத்து யுத்தத்தைத் துவக்கிவைக்கும் களமாகவே
அமைந்திருக்கிறது.

ஆம்!

"மதர்த்துக் கொழுத்த என் தனங்கள்
உன்மீது
நான்
நெஞ்சுக் கூட்டில் வைத்த
நேசத்தின் விம்மலென்று அறிவாயா?"

இதுதான் எனது "அறிவாயா காதலா" என்ற கவிதை!

"கலிங்கத்துப் பரணியை நினைவு படுத்துகிறது
நீங்கள் தவிர்க்கலாம். ஆனாலும்
கவித்திறனைப் பாராட்டுகிறேன் ரதிதேவி! நற்கவிதை."

இதுதான் நீங்கள் அளித்த கருத்தும் பாராட்டும்!

"கலிங்கத்துப் பரணியை நினைவுபடுத்துகிறது"

என்று நீங்கள் கூறியிருப்பதன் அர்த்தம் விளங்கவில்லை.
அதாவது,
கலிங்கத்துப் பரணியின் பாணியில்தான் எனது
இக்கவிதை அமைந்துள்ளது என்பதில்
எனக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஆனால்,

கலிங்கத்துப் பரணியை முதலில் நீங்கள்
ஆபாசத்தின் இருப்பிடமாகப் பார்க்கிறீர்களா?
அல்லது அழகுணர்ச்சியின் ஆலயமாகப் பார்க்கிறீர்களா?
என்பதுதான் எனது முதல் சந்தேகம்.

இரண்டாவது,
"நீங்கள் தவிர்க்கலாம்" என்று கூறியுள்ளீர்!

இதுவும் எனக்கு விளங்கவில்லை.

இது போன்று எழுதுவதைத் தவிர்க்கலாம் என்ற
அர்த்தத்தில் சொல்கிறீர்களா?

அல்லது,

"கலிங்கத்துப் பரணியை நினைவு"படுத்துவதாகத் தாங்கள்
தந்த கருத்தை நான் தவிர்க்கலாம்,மறுக்கலாம்,
நிராகரிக்கலாம்,புறக்கணிக்கலாம் என்ற
அர்த்தத்தில் சொல்கிறீர்களா?

எப்படி இருந்தாலும் இதுவும் இன்றைய காலகட்டத்தில்
நிச்சயம் வாதத்திற்குரிய விஷயமே என்பதால்
இதைப்பற்றியும் கொஞ்சம் பேசிவிடலாம்!

இந்தக் கவிதையை நான் எனது தோழிக்கு வாசித்துக்
காட்டியபோது அவள் என்னைச் சரமாரியாகத்
திட்ட ஆரம்பித்துவிட்டாள்.

"நீ ஒரு பெண் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளடி.
இப்படி ஆபாசமாக எழுதலாமா? எவராது படித்தால்
எப்படி எடுத்துக் கொள்வார்கள்?"

இதில் ஆபாசம் இம்மியும் இல்லை என்பதுதான்
எனதுவாதம்!

இன்றைக்கு இதுபோன்ற கவிதைகளை பெண்கள்
எழுதுவது கிடையாது. ஏன் என்பதும் எனக்குப் புரியவில்லை.
ஒருவேளை சமூகம் அவர்களைக் காமாந்தகாரியாகப்
பார்த்துவிடுமோ என்ற அச்சமாகக் கூட இருக்கலாம்!

அப்படியெனில் சமூகப் பார்வையில் காமம் என்பது
அருவருப்பான விஷயம்.

இதை அருவருப்பு என்று நினைத்தால் இன்று
அவனியில் மனிதகுலம் இருந்திருக்காது.

"நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை"
இது உங்கள் கவியரசர் கண்ணதாசன் பாடல்தான்!

காமம் அருவருப்பான விஷயம் என்றால்
காதல் என்பதும் சத்தியமாக அருவருப்பான
விஷயம்தான். காதல் மட்டும் எப்படித்
தெய்வீக உணர்வாக இருக்கமுடியும்?.

நேசம் பாதி காமம் பாதி கலந்த கலவையே காதல்.

இது தான் நிஜம். ஆனால் பலருக்கும் இதனை ஏற்றுக்
கொள்வதில் உடன்பாடு இல்லை.

பெண்கள் மட்டுமன்று ஆண்களும் இதனை மறுக்கிறார்கள்.

அப்படியெனில், திருமணம் செய்து முதலிரவில்
ஊதுபத்தி கொளுத்தி சாம்பிராணி போட்டுப்
பூஜை செய்கிறார்களா என்பதென் கேள்வி.

"காதல் என்பது மாமிசப் பட்சினியன்று.
அதற்குச் சதை விருந்து அருவருப்பானது"

என்று கூறும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களை
ஒரு முற்போக்குக் கவிரென்று என்னால் மகுடம் சூட்ட முடியாது.

"காதல் உடலை நாடக் கூடியது" என்கிறான்
மேலை நாட்டுக் கவிஞன் "ஹெவ்லாக் எல்லீஸ்."

"என்னதான் காதல் என்பது ஆன்மா சம்பந்தப் பட்டது என்று
ஆயிரம் முறை வாதிட்டாலும், கட்டான தேகம் இல்லையென்றால்
அந்தக் காதல் பாதியில் முடிந்து விடுகிறது"

இதுவும் உங்கள் கண்ணதாசன் சொன்னதுதான்.


இனிய இலக்கியம் என்பது இப்படித்தான் இருக்கும்.

என்னைப் பொருத்தவரை இதுதான் இலக்கியம்.
உண்மை இலக்கியம் இப்படித்தான் இருக்கும்.

இலக்கியம் என்பது இனிமையாக இருக்க வேண்டும்.
அதே நேரம் எளிமையாக இருக்க வேண்டும். அதேபோல
சொல்ல வரும் கருத்து நேர்மையின் அடித்தளத்தில்
நின்று நேராகச் சொல்லிவிட வேண்டும்.

இதைத்தான் எழுத்தாளர் சுஜாதாவும் சொல்கிறார்.

Literature is Sweet, Simple, Honest and Direct என்கிறார் சுஜாதா!

சரி,
கவிதை என்பது எங்கே இருக்கிறது?
வார்த்தைகளிலா? சத்தியமாகக் கிடையாது.
கவிதை வார்த்தைகளுக்கு இடையிலேதான் இருக்கிறது.

Poetry is not in the words. It is inbetween the words---------W.B.YEATS

ஒரு பெண் ஏன் காமத்தைப் பாடக் கூடாது?
அழுகை, சிரிப்பு, ஆனந்தம், ஏமாற்றம், கோபம்
போன்று காமமும் ஒரு உணர்ச்சிதானே?

மற்ற உணர்ச்சிகள் உயர்ந்தவை என்றால் காமம்
எப்படித் தாழ்ந்ததாகும்?

ஒரே கொடியில் பூக்கும் பல மலர்களில்
எப்படி ஒன்று தாழ்ந்ததாகவும் ஒன்று உயர்ந்ததாகவும் ஆகும்?

அது அருவருப்பான உணர்ச்சியென்றால்
அதை ஆண்டவன் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

"பாவம் என்றால் ஒரு ஆணையும் பெண்ணையும்
இறைவன் படைப்பானா?" என்கிறார் கண்ணதாசன்.

"முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
-------முன்செல்வ மில்லாத வர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
-------கண்ணுற்று நெஞ்சங் களிப்பீர்"---கலிங்கத்துப் பரணி.

இதையே வள்ளுவனும் சொல்லி இருக்கிறான்.

மார்பிலே கணவன் பதித்த நகக்குறியைத்
தடவிப் பார்த்து ரசிப்பதாக வள்ளுவன் சொல்கிறான்.

அந்த வள்ளுவனின் குறள் ரசனைக்குரியது எனில்,
கலிங்கத்துப் பரணியும் ரசிக்க வேண்டிய இலக்கியமே.

"விம்மிப் புடைத்த என் மார்புகள்
வெறும் சதைக் கோளங்கள் என்றா நினைத்துவிட்டாய்?
அவை நான் உன்மீது
என் நெஞ்சுக்கூட்டில் வைத்த
நேசத்தின் விம்மல் என்று உனக்குத் தெரியவில்லையா?"

என்ற எனது கவிதையில் மட்டும் எப்படி
ஆபாசம் வந்துவிடக் கூடும்?

உங்கள் வள்ளுவனின் திருக்குறளைப் போல
எனது இந்தக் கவிதையும் அர்ச்சனைக்குரிய
அழகுக் கவிதைதானே?

சரி. பெண்கள் ஏன் தங்களது காமத்தைக் கவிதையில்
பாடக் கூடாது? அல்லது பெண்கள் எதற்குத் தயங்க வேண்டும்?

ஆணுக்குப் பெண் நிகரென்று சொல்கிறோம். இல்லையா?
(இதைப் பெண்கவிஞர்களும் சிந்திக்க வேண்டும்)

அப்படியெனில்,

இருபதே வயதாய் என்னை
----இருநூற்று ஐம்ப தாண்டு
பருவத்தில் அவன்வைத் தானேல்
----பார்க்கின்ற எல்லாம் பார்த்து
மருவற்ற பெண்கூட் டத்தின்
----மடியிலே புரண்டு நித்தம்
ஒருகிண்ணம் மாற்றி மாற்றி
----உலகத்தை அனுப விப்பேன்!

எனவும்,

ஆணெனப் படைத்தான்; பெண்ணை
-----அழகெனப் படைத்தான்; வாழ்வை
வீணெனப் படைத்தா னில்லை
-----விரும்பத்தான் படைத்தான்; கண்ணால்
காணெனப் படைத்தான்; கையில்
-----கலக்கத்தான் படைத்தான்; இன்னும்
நாணென்ன? அச்ச மென்ன?
-----நாமும்தான் வாழ்ந்து பார்ப்போம்!

எனவும்,

கொண்டுவந் தாரு மில்லை
----கூடையில் வாரி வாரிக்
கொண்டுபோ னாரு மில்லை!
----குறையிலா சுவைகள் யாவும்
உண்டுபார்த் திருந்து இந்த
----உலகத்தை மறந்தா லென்ன?
வண்டுக்கு நீதி யென்றால்
-----மனிதர்கள் செயக்கூ டாதோ?

எனவும்

குடிக்க வேண்டும், பல பெண்களோடு கூத்தடிக்க வேண்டும்.அதுவும் ஐம்பதாண்டு கூடப் போதாது, இருநூற்று ஐம்பதாண்டு தன்னை இருபது வயது இளைஞனாகவே ஆண்டவன் வைத்தால்
நன்றாக அனுபவிப்பேனே என்று உங்கள் கண்ணதாசன் தாறுமாறான அசிங்கமான ஒரு தறிகெட்ட வாழ்க்கை முறையை முன் வைக்கிறார்.இதையெல்லாம் பெரிய தத்துவமென்று ஆராதனை செய்ய
உம்மால் முடிகிறது.

"விஸ்கி புட்டி
வயசு குட்டி
ஒரு பேனா, ஒரு கட்டு காகிதம்
வரவழைத்துவிட்டு என்னை ஒரு தனியறையில்
பூட்டிவிட்டுப் போங்கள். நான் அனுபவித்து அனுபவித்து
எழுத வேண்டும்" என்று வெட்கம் கெட்டத் தனமாக
வார்த்தைகளை வீசும் வின்ஸ்டன் சர்ச்சிலை உம்மால்
வியந்து பார்க்க முடிகிறது.

Live, Live the wonderful life that is in you.Let nothing be
lost upon you.Be always searching for new sensations.Be afraid of nothing.

என்கிறான் ஆஸ்கார் ஒய்ல்டின். அவனை உம்மால் ஆராதிக்க முடிகிறது.


"எழுந்து நில்லடா மனிதா!
மதுக்கோப்பைக்கு வணக்கம் சொல்!

விதியின் கிண்ணத்தில்
உன் ரத்தம் நிரம்பும் முன்
உனது கிண்ணத்தை
நீ மதுவால் நிரப்பு.

அடே பேதை மனிதா!

நீ என்ன தங்கமா
புதைத்த பிறகும் உன்னைத்
தோண்டி எடுப்பதற்கு?"

என்று ஆவேசமாக அனுபவிக்கச் சொல்லும்
உமர் கயாம்-ஐ உங்களால் உயர்வாகப் பார்க்க முடிகிறது.

எட்டு வயதிலேயே காதல் போதையில் விழுந்து
கண்மண் தெரியாமல் பெண்களை மாற்றி மாற்றி
அனுபவித்துக் கிடந்து காதல்(காம) போதையில்
கண்ணிழந்து தன் ஒன்றுவிட்ட தங்கையையே
காதலித்துக் கிடந்த "பைரன்"-ஐ உம்மால்
உலக மகாகவி என்று உயர்த்த முடிகிறது.

குரோவ் என்ற முறைப்பெண்ணில் ஆரம்பித்து
ஹெரியட்--எலிசபெத்--மேரி--எமிலியா என்று
ஏதோ ரயிலில் இருந்து ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன்
இறங்கி ஏறுவது போல் பெண்களை மாற்றி மாற்றி
அனுபவித்துக் கிடந்த ஷெல்லி-ஐ நினைத்தால்
உங்களுக்குப் புல்லரிக்கிறது.

I like the women too; forgive my folly

என்று பகிரங்கமாக அறிவித்து தன் சல்லாப
சேஷ்டைகளுக்குச் சலுகை அளிக்குமாறு சமூகத்தைப்
பார்த்துப் பைரன் கேட்பதைப் போற்ற முடிகிறது.

ஆனால்,

ஒரு பெண் தனது உடல் உணர்ச்சியை அதாவது காமத்தை
விரகதாபத்தை கவிதையில் வெளிப்படுத்தினால்
அச்சோ! ஆபாசம் என்பீரோ?

கலாசாரத்தைக் கற்பழிக்க வந்த கைகாரி என்று
தூற்றுவதோ?

(திரு,கவின் சாரலன் அவர்களே! நீங்கள் என் கவிதையை
ஆபாசமென்று நினைத்திராவிட்டாலும் சமூகம்
பெண்கள் இதுபோல் எழுதுவதை இன்னும் இப்படித்தான்
பார்க்கிறது.எனவே இது நான் ஒட்டுமொத்த
சமூகத்தையே பார்த்துக் கேட்கும் கேள்வியாகவே
தாங்கள் கொள்ளவேண்டும்)

அப்படியென்றால் ஆண்கள் எதைச் செய்தாலும்
அங்கீகாரம் உண்டு.ஆனால், பெண்கள் தங்களின்
நியாயமான இயற்கை உணர்வுகளைக் கூட
வெளிபடையாகச் சொல்லக் கூடாது.

இதற்கு என்னையா பெயர்?

இதுவும் ஒரு வகையில் அப்பட்டமான பெண்ணடிமைத்தனம்தானே?

விலையி லாதவடம்
முலையி லாடவிழி
குழையி லாடவிழை கணவர்தோள்
மலையி லாடிவரு
மயில்கள் போலவரும்----இது சொக்கவைக்கும்
சுந்தரத் தமிழல்லவா?

தங்குகண் வேல்செய்த புண்களை
---தடமுலை வேதுகொண் டொற்றியுஞ்
செங்கனி வாய்மருந் தூட்டுவீர்----சுவைக்கவில்லையா?

பொருங்கண் வேலிளைஞர் மார்பி னூடுருவு
-----புண்கள் தீரவிரு கொங்கையின்
கருங்கண் வேதுபட வொற்றி
-----மென்கைகொடு கட்டு-----ரசிக்கும் வண்ணம் இல்லையா?


உபய தனமிசையி லொடியு மிடைநடையை
------ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு
அபய மபயமென அலற நடைபயிலு மரிவை

"முலைகளின் பாரத்தை இந்தச் சிற்றிடை தாங்குமோ?
அச்சோ! நிச்சயம் இந்த இடை ஒடிந்துவிடத்தான்
போகிறது" என்று சிலம்புகள் புலம்புவது ரசனைக்குரிய
இலக்கியமா இல்லையா?

"கவிஞன் பாடிய காவியம் படித்தால்
போதை வரவில்லையா?" என்ற கண்ணதாசன்
பாடல் போலத்தான் நம் அனைத்து இலக்கியங்களும்
உள்ளன. அவற்றுள் கலிங்கத்துப் பரணி மட்டும்
விதிவிலக்கல்ல!

எனவே கலிங்கத்துப் பரணி அற்புத இலகியம்தான் என்பது
எனது முடிபு.

இலக்கியம் மனிதனின் இதயத்தை இளக்குகிறது.
அந்தச் சுகத்தில் கவலைகள் மறக்கப்பட்டு
நீண்ட காலங்களுக்கு இளமையோடு வாழ வைக்கிரது.
அப்படி இல்லை என்றால் அது இலக்கியமே அல்ல!

அடுத்ததாக, கவின் சாரலன் அவர்கள்
ஒரு தோழியின் கவிதைக்கு அளித்திருந்த
ஒரு கருத்தை நான் பார்க்க நேர்ந்தது.

அதில், "ஒரு பெண்ணின் உணர்ச்சியை ஒரு
ஆணைவிட பெண்தான் அழுத்தமாகப் பதிவு
செய்ய இயலும்.அது பாரதியாக இருந்தாலும்
முடியாது." என்று கூறியிருந்தீர்கள்!

தோழி ப்ரியாராம் அல்லது தோழி லலிதா-வின் கவிதைக்குதான் நீங்கள் அவ்வாறு அளித்திருந்ததாக ஞாபகம்.ஆனால் நீங்கள் அளித்ததுதான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

உங்களின் இந்தக் கருத்தையும் நான் முற்றிலுமாக
எதிர்க்கிறேன். என்னால் இதனை ஏற்கமுடியாது!

காரணம், கவிஞனுக்கு முதலில் "பால்" கிடையாது.

ஆண்பால்,பெண்பால்,உயர்திணை,அஃறிணை என்ற
பேதமெல்லாம் கவிஞனுக்குக் கிடையாது.

எதுவாக வேண்டுமானாலும் மாறி அதன் உணர்ச்சிகளை
அப்படியே உள்வாங்கி மொழியில் வெளியிட கவியால் முடியும்.


ஒரு சுத்தமான மகாகவியால் மட்டுமே அது முடியும்.
அப்படி முடியாது என்றால் அவன் மகாகவியல்ல.

ஒரு குழந்தையின் அழுகைக்குத் தாலாட்டுப் பாட்டு
எழுத உட்கார்ந்தால் அந்தக் குழந்தையின் அழுகுரலை
எண்ணும் போதே தனக்கு மார்பிருப்பதையும்
அது சுரப்பதாகவும் உணரமுடிந்தால் மட்டுமே
அவன் கவிஞன்!

இதைக் கவிஞர் கண்ணதாசனும் சொல்லியிருக்கிறார்.

கவிஞனால் அர்ஜுனனின் தடுமாற்றத்தையும்
உணர முடியும், கண்ணன் போல் கீதை உரைக்கவும்
முடியும்.அப்படி இயலாதென்றால் அவன் கவிஞனே அல்ல!

(பாகம்-1-முற்றும்)

-----ரதிதேவி

எழுதியவர் : ரதிதேவி (13-Apr-12, 5:00 am)
பார்வை : 328

மேலே