[201 ] புரிந்திலனே..!

தேக்கத்தான் என்றார் செல்வர்!
... திருடரோ வந்து நாங்கள்
தூக்கத்தான் என்று கொண்டார்!
... துடித்தவர், அழுது சென்று,
காக்கத்தான் என்றி ருக்கும்
... காவலர் கையில் மீதி
போக்கித்தான் புலம்பு கின்றார்!
... புரிந்திலேன் இவர்கள் போக்கே!

ஊக்கத்தால் உழைத்து உழைத்தே
... ஊரெலாம் வீடு கட்டி,
வாக்கற்றோர் , செல்வ மற்றோர்
... வாடகைக்கு இருக்க வைப்பார்,
சீக்குத்தான் 'தினம், எ மக்குச்
... செலவுசெய்' என்று வாட்டிப்
போக்குத்தான் காட்டச் சென்ற
... புதைகுழி! புரிந்தி லேனே!

ஆக்கத்தால் பொருளைச் சேர்த்தார்
... அறிவுடைக் கல்வி வாழ்வில்
போக்கற்றோர் பிள்ளை கட்கும்
... போய்ச்சேர வேண்டு மென்ற
நோக்கத்தால் கல்விச் சாலை
... நூலகம் கொடுத்தார்! சாவு
தாக்குற்றும் வாழ்வார்! இந்தத்
... தன்மைநான் புரிந்தி லேனே!

-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (20-Apr-12, 8:06 pm)
பார்வை : 213

மேலே