மண் மரம் மனிதன்
மனிதம் பேசும் மகா உன்னதவாதிகளே
கேளுங்கள்
இயற்கையின் ஓலம்....
மண் தன்னை நிலைநிறுத்த
மரங்களை விதைத்தது....
நீ உன்னை உயர்த்த
வனங்களை அழித்தாய்!
மரம்
பழங்களை படைத்தது,
பறவைகள் உண்ட எச்சம்
விதைகள் ஆகுமே என்று...
நீ விதைகளை விடுத்தது
பழங்களைத் தரும்
மரங்களைப் படைத்தாய்
பழம் கொத்தும் பறவைகளைக் கூண்டினில் அடைத்தாய்....
மண்ணை மலடாக்கிய உனக்கு
மரங்களையும்
மலடாக்க எப்படி மனம் வருகிறது....
ஆக்சிஜன் சுழற்சியவது
நைட்ரஜன் சுழற்சியவது,
உனக்குத் தெரிந்ததெல்லாம்
கரன்சியின் சுழற்சியே.....
மழையில் நனைந்தால்
கண்கள் எரிகிறது
அமில மழை என்கிறாய்
கண்ணை மூடிக்கொண்டு
அது வானம் வடிக்கும் கண்ணீரடா...
மேகத்தில் கூட மீன்கள் செத்து மிதக்கின்றன
அவைகளுக்கு எப்படி தெரியும்
ஓசோனையும் கிழித்து
கோவணம் கட்டிக்கொண்டோமென்று......
சிட்டுக்குருவியும் வானம்பாடியும் செய்த
பாவம் தான் என்ன?
மழையை உண்டு உயிர் வாழ்வாத?
மனம் மகிழ துள்ளித்திரிவதா?
நீ செல் பேசியில் பேச
அவை ஏன் சாக வேண்டும்!
தங்க முட்டைக்காக
வாத்தை
அறுத்த கதையை கேட்டுக்கேட்டு
அதன் மென்னியை பிதுக்கி
முட்டை
எடுக்கும் வித்தை கற்றுக்கொண்டாய்...
இதுவா டார்விநிசம்?
"தக்கன தழைத்தல்" அல்ல இது.....
டார்வினே அறியாத நான்காம் விதி கண்டாய்...
உன் வயிறு நிரம்ப
பூமித்தாயை பட்டினி போட்டாய்!
உருகும் பனிமலைகள்
உன் முடிவை எண்ணியே
அழுகின்றன.....
கோல் தப்பும் கடல்
உன் தப்பை திருத்தவே
சுனாமியாய்!
உறுமும் எரிமலைகள்
இயற்கை அன்னையின்
உள்ளக்குமுரல்களே.....
என் பாட்டனும் உன் பாட்டனும்
விட்டுப்போன சொத்தடா!
விளைநிலம் - அதையும்
விலை நிலமாக்கினாயே..
பூமித்தாய் பசியோடிருக்கிறாள்
அவளொன்றும் அழும் குழந்தையல்ல
நிலவைக்காட்டிச் சோறுட்ட!
வீணில் சங்கம் அமைத்து கோசிப்பதை
விட்டுவிட்டு செயலில் இறங்கு....
வனங்களை மீட்டு எடு!
ஆத்துமண்ணை அள்ளாதே!
இயற்கையை ரசி!
பூமித்தாயை குளிரச்செய்!
கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை - உன்னிடம்
உன் குழந்தைக்கு
கொடு ஒரு மரத்தை!
ஒன்று பத்தாகட்டும் பத்து நூறாகட்டும்!