மேலை நாடு
ஆஹா! எத்துனை அழகு
எத்துனை சுத்தம் இங்கே
மண் பரந்த பூமியில்
மண் பரவாமல் எப்படிச் செய்கிறீர்?
நாரி கிடக்கும் தெரு
நாதி இல்லை அங்கே
தூசி இல்லா தெருவை
துவட்டி துவட்டி துடைக்கிறார்கள் இங்கே
யார் உழைத்த உழைப்பு?
வேலைக்கு சேர்ந்தது முதல்
ஒரு அஸ்தமனம் கண்டதில்லை நாம்
நான்கு மணிக்கு மேல்
நாய் கூட இருப்பதில்லை இங்கே.
யார் உழைத்த உழைப்பு?
குடிநீர் குவளையில் தொடங்கி
சாப்பிடும் சாப்பாடு முதல்
சாயும் நாற்காலி வரை வித்தியாசம்.
நாமெல்லாம்
செல்வ சீமானின்
செலவு குறைப்புகள்!
ஐந்தறிவு மிருகம் கூட
செவ்வனே வாழ்கிறது குடும்ப வாழ்க்கை
அது கூட அறியாத அந்நியன்
நாகரீகம் கற்றுக் கொடுக்கிறான் நமக்கு !
வீரம் முதல்
விருந்தோம்பல் வரை
தெள்ள வரையறுத்து
தொண்டு பழுத்த குடி எம் குடி
நீர் வெளிநாடு போக சொன்னால் போகணும்
வர சொன்னால் வரணும்.
ஓரிரு வாரம் உன் வேலை காரணம்
ஓராண்டு அடிமை சாசனம்
கேள்வி கேட்டால்
செலவுக் கணக்கு சமர்பிக்கிரீர் !
எத்தனை முறை வரவு கணக்கு சமர்பித்தீர் !
உன் வீட்டில் இழவு
நான் எதற்கு அழ வேண்டும்
நாமெல்லாம் விழித்து எழ வேண்டும்.
வளைந்து கொடுத்து
வளைந்து கொடுத்தே
முதுகு வளி பட்டோம் !
அய்யஹோ !
இது என்ன
இருட்டடித்த அடிமைத்தனம்
இத்துணை வருடம்
நமக்காக நாம் ஏன் உழைக்கவில்லை ?
கொக்கு பறக்குதடா - வெள்ளை
கொக்கு பறக்குதடா
பாரதி வந்து சொல்ல வேண்டுமா?
ஏன் விரட்டவில்லை நாம் ?
உண்ண உணவு
உடுக்க உடை
ஒண்ட உறையுள்
நமக்கு மட்டும் இருந்தால் போதுமா ?
மாதம்
எண்ணூறு ரூபாய்க்கு குறைவு
எந்நாட்டு வறுமைக்கோடு - அதையும்
எட்டிப் பிடிக்காதவர்கள் 25 கோடி
தனி ஒரு உயிருக்கு
உணவில்லை இங்கே
நாமெல்லாம் உலகமயமாக்கல் பற்றி பேசுகிறோம்.
இளைஞனே !
யாக்கை விரவியது குருதி தானே?
கூவம் இல்லையே ?
கொதிக்கவில்லையா உனக்கு?
நாடிகள் புடைக்கவில்லையா?
கனல் கொள்ளவில்லையா கண்கள்?
தோல்வியை எண்ணி துவளாதே
முயற்சி செய்!
சாதி பகுப்பு சறுக்கப் பார்க்கும்
மொழி பிரச்சனை முடக்கப் பார்க்கும்
அரசியல் கழுகு தின்னப் பார்க்கும்
விடாதே விரட்டு ! விரட்டு !
இனி ஒரு விதி செய்வோம்
பார் முழுவதும்
பாரத கொடி பறக்க செய்வோம்
நாமே நிறுவனங்கள் நிறுவுவோம் !
எம் குடி காக்க
என் உழைப்பை கொடுப்பேன் !
நான் ஒரு சுதேசி என்று
வ உ சி போல் உறுதி மொழி எடுப்போம்.