மூன்றாவது காலால்...நொண்டியடிக்கும் காலம்.
கடிகாரத்தின் கால்களை
நொடிகளாய்ப் பொடித்துவிட்டது காலம்.
நிற்கத் தருணம் இன்றி -விரையும் அதன்
கால்களோடு-
இறக்கைகள் அற்றுப் பறக்கின்றனர் மனிதர்களும்.
மலையில் விழுந்த சூரியனை-
வைகறையில் கடலில் கண்டெடுக்கிறது நிலவு.
பூவிலிருந்து பறக்கும் வண்டுகள் உதிர்த்த
மகரந்தங்களைச் சேகரிக்க -
தொட்டில் குழந்தைத் திட்டத்திற்காகத்
தவமிருந்தது உருவாகாத காடு.
குழந்தைகளின் கனவில்-
சென்ற ஜன்மத்துப் பாவங்களின் சுமையாய்
வீட்டுப் பாடங்கள்.
செயற்கை சுவர்க்கத்தில்-
களித்துத் தனிமை தீர்க்கின்றன...
"மேன்ஷன்" பிரம்மசாரிகள்.
மீண்டும்-
நினைப்பதற்கற்ற நினைவுகளுடன்
நீளும் வாழ்வு...
சருகாகும் காலங்களில் சிறைப்பட்டுவிடுகிறது..
மூன்றாவது காலால் நொண்டியடித்தபடி.

