அவள் கதை கேளுங்கள்...

பதினாறு வயதினிலே
பத்தாம் வகுப்பு படிக்கையிலே
என் கை புடிச்சி வந்தவளே
காணாமல் போனதென்ன?

பள்ளி கூடம் போகாம
படத்துக்கு போனோமே
டீச்சர்கிட்ட மாட்டிக்கிட்டு
மண்டியிட்டு தண்டனையும்
சேர்ந்தே அனுபவிச்சோமே
இப்போ தனியா விட்டு போனதென்ன?

இடைவெளியே இல்லாம
இன்பத்தோட இருந்தோமே
இடையில அவன் வந்ததும்
என்னை மறந்து போனவளே
இப்போ மண்ணோடு போனதென்ன?

குடிகாரன்னு தெரியாம
குடுத்துட்டியே உன் மனச.
இப்போ குழந்தை இரண்டையும்
விட்டுட்டு நீ குழிக்குள்ளே போனதென்ன?

சந்தேகப்படுரான்னு நீ சொன்ன போதெல்லாம்
சகிச்சிக்கடி ரெண்டு குழந்தை
இருக்குனு படிச்சி படிச்சி
சொன்னேனே. பாவி மகளே
நீ பாதியிலே போனதென்ன?

அவன் மட்டுமே உலகமுன்னு
உறவெல்லாம் எதுத்துக்கிட்டு
அவன் பின்னால் ஓடி போனவளே
பச்ச ஓலையில போனதென்ன?

அப்பனோட பேசினாலும்
அசிங்கமா பேசுராண்டி.
தம்பியோட பேசினாலும்
தகாத உறவுன்னு சொல்லுரண்டி.
தினமும் குடிக்குறான்டி.
என்ன அடி மாடா நடத்துராண்டி.
மிருகம் போல என் உடம்ப
உயிரோட தின்னுராண்டி.
தட்டி கேட்க யாரும் வந்தா
அவன வச்சிருக்கியானு கேட்குறாண்டி.
உன்னோட பேசுறத பாத்தாலும்
போதும்டி அதுக்கொரு கதை கட்டுவான்.
நீ சீக்கிரம் கிளம்புடி.

இப்படி சந்திக்குற போதெல்லாம்
ஓயாம அழுதவளே. இன்னைக்கு
ஊமையா படுத்ததென்ன?

சிரிப்ப தவிர சின்னவளே
உன் முகத்தில் வேற எதுவும் பாத்ததில்ல
அந்த சின்னஞ்சிறு வயசில.
அரக்கனை கட்டிகிட்ட பின்னாலே
அழுகை ஒன்னே சொந்தமுன்னு
அழுது அழுது கரைஞ்சவளே
உன் உருவத்துல ரெண்டு பொண்ண
இந்த பொல்லாத உலகத்துல
தனியா தவிக்க விட்டு போனதென்ன?

ராத்திரி தான் ஊரு வந்தேன்
ராசாத்தி உன்ன பாத்தேன்
பேச தானடி நினச்சேன் - பாவி
நான் அவனை பாத்ததும்
விடிஞ்சது பேசிக்கலாமுன்னு
விலகி வந்துட்டேன்.

காலையில வந்த சேதி
ஐயோ அது விதி செஞ்ச சதி.
சண்டை முத்தி போயி
சண்டாளி நீ கயித்துல
தொங்கிட்டனு பார்த்தவன்
சொன்னதை கேட்டு செத்த
பொணமாத்தான் ஓடி வந்தேன்.

பாடையில பாதகத்தி நீ
பொணமா படுத்திருந்த
காட்சிய பாத்ததும், நெஞ்சு
சிதறியே போச்சுதடி.

நிம்மதியா நான் தூங்கி
பல வருஷம் ஆச்சின்னு
பாவி மகளே நீ சொன்ன
வார்த்தைக்கு அர்த்தம் அப்போ
புரிஞ்சுதடி.

எங்க நான் உன்ன தேடுவேன்
எப்போ உன்ன மறுபடி பார்ப்பேன்
ராத்திரி பேசி இருந்தா உன் முடிவ
தடுத்திருக்கலாமே. பேசாம போயிட்டேனே
பாவி நானே உன்னை கொன்னுட்டேனே.

கேட்க முடியலடி உன் குழந்தைங்க
அழுற சத்தம். அதுல ஒன்னு சொல்லுதடி
ஏன் ஆன்ட்டி அழுறீங்க அம்மா தூங்குறாங்கநு.
இந்த செல்வங்கள விட்டு போக
சிறுக்கி உனக்கு எப்படிடி மனசு வந்துச்சி.
அந்த பிஞ்சு குரலை கேட்டாவது
நீ திரும்ப வர மாட்டியானு என்
நெஞ்சு துடிக்குதடி.

நீ போன பின்னால் அவன்
நிம்மதியா குடிக்குறான்டி
கேட்டாக்கா போன்னடாட்டி போன
வருத்தமுன்னு வாய் கூசாமே சொல்லுறான்டி.

நீ சொர்கத்துல இருக்கியோ
நரகத்துல இருக்கியோ
உன் பிள்ளைங்க இப்ப
வீட்டு வேலை செய்யுதுடி.

நீ மட்டும் இருந்திருந்தா
அதுங்க நிலைமை இப்படி
ஆகி இருக்குமா?

உசுர விடும் முன்னாடி
அதுங்க முகத்த ஒரு முறை
பார்த்திருக்க கூடாதா?






(மறைந்த என் தோழியின் குழந்தைகளை
நான்கு வருடங்களுக்கு பிறகு சந்தித்தபோது
நான் அடைந்த வேதனையை சொல்ல வார்த்தையில்லை. பெண்களே போராடுங்கள். கணவன் சரி இல்லை என்றால் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். வாழ்ந்து காட்டுங்கள். தற்கொலைகள் தவிர்க்க பட வேண்டியவை.)

எழுதியவர் : லலிதா.வி (17-May-12, 6:31 pm)
பார்வை : 790

மேலே