தயார் !

வாடகைக்குத் தயார் !
வீடல்ல ...
இன்னமும் புழங்கப்படாமலேயே
இருக்கும் என் கருவறை.

எத்தனையோ பாடுபட்டும்
என் தந்தையால் விற்கவே
முடியவில்லை! - என்னை
இந்தக் கல்யாணச் சந்தையில்.

இன்னமும் நிலுவையிலேயே
இருக்கிறது - மாப்பிள்ளை வீட்டாரின்
ஒப்புதல் கடிதங்கள்.

பழகிப்போய் விட்டது!
புதுப்பெண்ணுக்கான வேஷமும்,
பொய் சிரிப்பும், வெட்கமும்,
பின் கடிதங்களுக்கான
காத்திருப்பும்...

வெளுத்துப் போய் விட்டது
என் நகைகள் மட்டுமல்ல
என் தந்தையின் தலை முடியும்தான்!

கேட்டுவிட்டுச் சென்றனர்
நான்கு சக்கர வாகனமும்,
50 பவுன் நகையும், 5 லட்ச ரூபாய்
பணமும் பணி ஓய்வு பெற்ற
என் தபால்கார தந்தையிடம் !

பயனற்றுப் போய் விட்டது !
ஸ்பரிசிக்கப்படாத என் பெண்மையும்,
தூசி படர்ந்த என் ஜாதகமும்.

விதவை, மலடி, வாழாவெட்டி ,
...... ??? ??? ???

ஓ!

இங்கும் நிலுவையில் இருக்கிறது,
எனக்கான பெயர் இன்னும்
வைக்கபடாமலேயே !!!

எழுதியவர் : கார்த்திகா கிருஷ்ணன் (29-May-12, 3:28 pm)
பார்வை : 197

மேலே