எவர் கற்றுத் தந்தது ?
குழந்தைகளுக்கு
எவர் கற்றுத் தந்தது ?
பூக்களோடு
கொஞ்ச வரும்
பட்டாம் பூச்சிகளை
கைத்தட்டி வரவேற்கும்
குதூகலத்தை ....
ஜடம் என்று நாம்
சொல்லும் பொம்மைகளை
உயிருண்டாக்கி
நமக்கும் அவைகளோடு
உறவை உண்டாக்கி
அன்பின் புது அர்த்தங்களைச்
சொல்லிக் கொடுக்கும்
நேசத்தை ....
வீதியில் செல்கிற
வயதான
பிச்சைக்காரர்களைக் கூட
"தாத்தா" என்று அழைக்கும்
மரியாதையை....
மொழி புரியாத
தேசத்திலும்
தன் வயதொத்த
பிள்ளைகளோடு
உடனே சேர்ந்து விளையாடும்
சிநேக வித்தையை....
இன்னும்
இன்னும் ....
எத்தனை
எத்தனையோ ....?
குழந்தைகளுக்கு
எவர் கற்றுத் தந்தது ?