சொந்த மண்ணை விட்டு......!
வயல்வெளி வாழ்த்துச் சொல்லி
வழியனுப்பி வைத்தது..... !
புயல் எனப் பறக்கத் துணிந்தேன்
பொருள் தேடி அயல் நாட்டில்...!
வீட்டிலிருந்து கிளம்பலானேன்..!
வீதி வழி நடக்கலானேன்....!
எதிரினில் என் தமிழ் வாத்தியார்..!
எங்கேப்பா பயணம் என்றார்...!
குட்மார்னிங் சார் - நான்
குவைத்துக்குப் போறேன் சார்
வைத்துக்கு சோறிருக்கு - இன்னும்
வசதி பெருக வேண்டுமையா...!
அஞ்சு மணிக்கு ரயிலுய்யா....!
அப்புறமா பேசுறேன்யா.....!
அனுமதி அவர் தருமுன்னே....
அவசரத்தில் நடக்கலானேன்...!
நீடுழி வாழ்கவென அவர் நெஞ்சோடு வாழ்த்தியது
நின்று கேட்க நேரமின்றி......
நெடுந்தொலைவில் கரைந்து போக.....
நெடிய அடி எடுத்து வைத்தே கிடு கிடுவென நடக்கலானேன்...!
கிராமத்துப் பூக்கள் சிரித்ததெல்லாம்
கிறுக்கல்களாக எனக்குப் பட்டது....
அயல் நாட்டு மோகம் வந்து என்னை
அப்படியே தின்று போட்டது.....
வயல்வெளிக் காற்றில் நெல்மணி வாசம்
அகத்தியர் அருவியில் என்தமிழ் நேசம்
தாமிரபரணியில் தமிழ் பருகிய மோகம்
அத்தனையும் மறந்து அவசத்தில் வேகம்...
இதோ ரயில் நிலையம் வந்துவிட்டது......!
இருக்கையில் அமர்கிறேன் ரயில் வரட்டுமென...!
அங்கே....ரயில் பிளாட் பாரத்தில்......
அழகாய் நடந்ததை கொஞ்சம் சொல்கிறேன்...
நாடோடிக் கூட்டமொன்று வட்டமாய் அமர்ந்து
நலம் கூறி உறவுகளோடு உறவாடி மகிழ்ந்திருக்க
அனாதையாக அங்கே அமர்ந்திருந்த நான்
அவர்களை ரசித்துப் பார்த்திருந்தேன்......!
பாஷை புரியவில்லை ! ஆனால் பாசம் புரிந்தது...!
சிறகுகளை சேர்த்தே இவர்கள் பறக்கின்றனர்...
உறவுகள் மறந்து இவர்கள் உல்லாசம் தேடுவதில்லை
ஊசி பாசி விற்றே உண்டு நிறைந்து மகிழ்கின்றனர்...!
அங்கு நடந்த அன்பான உரையாடல்கள்
அடுத்து என்னை சிந்திக்க வைத்தது......
எதற்காக எனக்கு இந்தப் பயணம் ?
எதை தேடி நான் பயணிக்கிறேன் ?
எல்லாம் உள்ளூரில் கிடைக்கின்றதே
எதற்காக என் மண்ணை பிரிய வேண்டும் ?
உறவுகள் கூடி இருக்கும் இடம் தானே
உண்மையான சொர்க்க புரி என நினைத்தேன்...!
தெளிவான முடிவு எடுப்பதற்குள் விழியில்
தெரிந்தது நான் பயணிக்க இருக்கும் ரயில்...!
ஏறி அமர்ந்தேன் என் இருக்கையில்....!
எதிரில் வந்து அமர்ந்த குடும்பத்தில்...
இரு குழந்தைகள் கணவன் மனைவி
ஏதோ ஒரு சோகம் எல்லோர் முகத்திலும்..!
கவலை இருள் சூழ்ந்து கண்ணீர் சுவடு பதிந்திருந்தது...!
காரணம் என்னவென்று கனிவுடனே நான் கேட்டேன்...!
சொந்த மண்ணை விட்டுப் பாவிகள்
சுனாமிபோல் துரத்தி விட்டனர்......!
சாதிச் சண்டை வந்தவுடனேயே
சட்டென மனம் மாறியவர்கள்
பட்டென வெட்டி விட்டனர் - எங்கள்
பாசக் கார ஒரு மகனை....!
பாலூற்றி அவனை புதைத்து விட்டு
பயணிக்கிறோம் வேறிடம் தேடி....!
பெற்ற தாய் கதறினாள்.....!
பெரிய அழுகையில் பிதற்றினாள்...!
ஐயஹோ...! என்ன கொடுமை இது ?
அழுதேன் நானும் அவர்களோடு...! - இங்கே
சொந்த மண்ணை சொந்தங்கள் ஏன்
சொர்க்க புரி ஆக்க வில்லை ?
நாடோடிக் கூட்டம் எங்கே ? இந்த
நயவஞ்சகக் கூட்டம் எங்கே ?
நான் செல்வது சரிதான்.....!
நாடு கடப்பதும் முறைதான்....!
இப்போது....
விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்...!
அதே தமிழ் கூறிய அகத்தியர் அருவி
அருமையான தாமிர பரணி ஆறு..... இப்போது
அழகாக தெரியவில்லை.....
அழுதாளே அந்த பெற்ற தாய்......
அவளின் வழிகின்ற கண்ணீராக அது தெரிந்தது....!
மனிதத் தன்மை தொலைத்த - தமிழ்
மண்ணை விட்டு நான் பிரிந்து செல்வது சரிதான்...!
மகிழ்ச்சியோடு பயணிக்கிறேன்............
சொந்த மண்ணை விட்டு......!