ஒப்பிலா உழவன் ( கவிதை திருவிழா)
வான் மழையின்
வரம் கேட்டு ஏங்குகின்ற
வெள்ளை மனம்.
எத்தனை வசந்தங்கள் வந்தாலும்
வரப்போடு மட்டும்தான்
உன் வாசம்.
ஆம்!
ஊரெல்லாம் உல்லாசம்
உனக்கேது
உனக்கேது சுகவாசம்.
உரமிட்டே
விளைகிறது பூமியென்று
விஞ்ஞானம் சொல்லுவது
உண்மையன்று.
உன் உதிரத்தின் சாறாகி
உடல்மீது வழிகின்ற
வியர்வைத் துளிதானே
வெள்ளாமை
விளைச்சல் என்று
வீதிக்கு வருகிறது.
கல்லாமை
உன் வீட்டில்
காலமெல்லாம் குடியிருக்கும்.
உன் வீட்டின்
நாற்புறமும்
வறுமையிட்ட வேலியுண்டு.
அதில்
வெறுமைக்கு மட்டும்தான்
நுழைவதற்கு
உரிமையுண்டு.
உன் கண்ணீர்
வழி தடத்தில்தான்
புரட்சிகள்
பூத்திருக்கிறது.
உன்னை நேசிக்காத
தேசம்
தன் வரலாற்றில்
பாதியை இழந்திருக்கிறது.
உழவனே!
உனக்கு என் வணக்கம்.