மறுகணம் கேளாத ஒருகணம்…

நேற்று நான் சுவாசித்த (அ)சுத்தக்காற்று,
விலைபேசுகிறது என்னிடம்…
நுரையீரலுக்குள் நுழைந்துவர…

'தன்னிலை மறந்தாயோ?' என்றேன்…
'நான் தனியார் பிடியில்' என்றது…

'நான் சாமானியன்' என்றேன்…
'நான் சாதிகள் பார்ப்பவன்' என்றது…

'உரிமைகள் யார்தந்தது?' என்றேன்…
'ஊழலில் விளைந்தது' என்றது…

'பாவம் செய்வாயோ?' என்றேன்…
'நான் படுகொலை செய்பவன்' என்றது…

'தரணியை ஆண்டது தமிழன்' என்றேன்…
'தர்க்கக் கதைகளைத் தனிமையில் பேசு' என்றது…

'யாது உன் விலை?' என்றேன்…
'இலாபம் சேராமல் இலட்சம்' என்றது…

தொண்டை வரண்டு மண்ணில் விழுந்தேன்…
'தொலைந்தானொரு தமிழன்' என்றது…

'இனவெறி கொண்டவனா நீ?' என்றேன்…
'இப்போதுதான் புரிந்ததா உனக்கு?' என்றது…

'எடுத்துச்செல், எந்தன் ஆவியும்' என்றேன்…

கருமை கொண்டது மேகம்…
கண்ணீர் சிந்தியது வானம்…

நுரையீரல் நிறைத்தது காற்று…
(நி)சப்தமாய் துடித்தது இதயம்..!

எழுதியவர் : ஆனந்தன் (15-Jun-12, 9:19 am)
பார்வை : 238

மேலே