போலி பொலிவுகள்

உன் நினைவெங்கும்
நீந்தித் திரியும்
நிலவாக நான்
உருவாக
அன்றிலிருந்துதான்
உன் வானம்
அமாவசை பொழுதுகளை
அனுமதித்தது.

உன் மடியினில் தூங்கும்
உன் அடியினை தாங்கும்
செல்ல பிள்ளையாக
நான் மாற
நீயோ
நாய்களை கொஞ்சியே
நாட்களை கடத்தினாய்...

நீ குப்பையில்
வீசியெறிந்த
வீண் பொருட்கள்
என் வீட்டு அலமாரியை
அலங்கரித்தது.

என் காதல் கடிதங்களாலும்
கவிதைகளாலும்
கழுத்துவரை
உன் வீட்டு குப்பைத்தொட்டி
நிரம்பியிருந்தது.

பாவை உன் பிம்பம்
விழுந்தபின்னே
என் பார்வை கிணற்றுக்குள்
நிலாவின் நிழலும்
நிராகரிக்கப்பட்டது.

பறவைகளின் சிரமும் அறிந்து
சிறகுகளின் அவசியம் உணர்ந்து
சிறைக் கதவுகளை
சினம் கொண்டு உடைத்தவன் நான்.

இன்று
உனக்காகத்தான்
பட்டாம்பூச்சி
பிடித்து கொண்டிருக்கிறேன்.

கிளைகள் அதிருமோ
இலைகள் உதிருமோ - மர
இதயம் சிதறுமோ என்று
அஞ்சி அஞ்சித்தான் நான்
ஆலமர விழுதுகளில் கூட
ஆடுவதில்லை.

உன் உள்மனதில்
எங்கோ ஒரு மூலையில்
ஏற்படும் சின்ன சிரிப்புக்காக
வண்ண பூக்களை
பறிக்க தொடங்கினேன்.

இருமல் மருந்து போய் வாங்க
இருந்த ஒரு மகன்
வீட்டில் இல்லாமல்
இருமி இருமி
என் அம்மா
இம்சையடையும் போது
மணிகணக்காக
உனக்கு காத்துகிடந்தேன்
ஒரு மருந்துக்கடை வாசலில்.

என் ஏதார்த்ததை
புறம்தள்ளிவிட்டு
உன் போலி பொலிவுகளை
போற்றி ரசிக்க செய்தாய்.

நவீன உலகில்
எல்லா காதலர்களையும் போல்
நாமும்
அப்பா உழைப்பை உறிஞ்சி
ஊர் சுற்றி
உல்லாசித்தோம்.

நீ என்னை காதலிப்பதாகவே
கதைகள் சொன்னாய்.

நம் காதல்
திருமணத்தில் முடியுமென்று
திடமாக இருந்தேன்.
அப்படித்தான் முடிந்தது
நம் காதல்
உன் திருமணத்தில்.

எப்படியும் ஒருநாள்
என்னை
ஏமாற்றிவிடுவாய் என்று
தெரிந்தே உன்னை
காதலித்தேன்.

ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய் என்று
நினைத்து நினைத்துதான்
ஏமாந்துபோனேன்.

--- தமிழ்தாசன்---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (15-Jun-12, 7:18 pm)
பார்வை : 199

மேலே