இன்னுமா மௌனங்கள் காக்கிறாய் ?

என் நினைவுகளின் படியில்
நீ நிற்கிறாய்
உன் நிழல்களின் மடியில்
நான் தவிக்கிறேன் !

கனவின் வழிகளில்
கவிதை தருகிறாய்
கவிதையின் முடிவினில்
காதலாய் வருகிறாய் !

உணவில் கலந்திட்ட உப்பாய்
என் உணர்வில்
கலக்கிறாய்க் கொத்தாய்!

மலரின் நறுமணம்
தனியாய் நடக்குமா
மனதில் கலந்த உயிர்
பிரிந்துதான் கிடக்குமா?

உன் சிரிப்புக் குமிழ்களும்
அதனிடை முகிழ்க்கும் சொற்களும்
என்னிடம் வருவதற்கு
இன்னும் ஏன் வெட்கமாம் ?
இல்லை அதன் பெயர் அச்சமா ?

அள்ளிக் கொஞ்ச வரும் என்னை
கிள்ளி மட்டும் போகிறாய்
துள்ளுகிற இதயத்தை
எள்ளி நகை செய்கிறாய் ?

அம்மா என்றழைக்கும்
மழலையின் குரலுக்கு
அன்னைமார் திரும்பாமல்
சென்றதில்லை
அன்பே !
உன்னை நான் அழைக்கிற
உயிர் வளர்க்கும் வேண்டுதலை
இன்னுமேன் கேட்காமல்
மௌனந்தான் காக்கிறாய் ?

நினைவுகளின் படியில்
நீ இருக்கிறாய்
உன் நிழல்களின் மடியில்
நான் தவிக்கிறேன் !

எழுதியவர் : முத்து நாடன் (16-Jun-12, 4:47 pm)
பார்வை : 172

மேலே