திருமதி சௌந்திரா கைலாசம் எழுதிய வாழ்த்துப்பா
தமிழ்நாட்டில் கரூர் அருகில் உள்ள செட்டிபாளையத்தில் 28-02.1927 அன்று தேசிய பின்னணி உடைய குடும்பத்தில் பிறந்த சௌந்திரா, தனது 15 வது வயதில் பி.எஸ். கைலாசத்தை திருமணம் செய்து கொண்டார். 9 ஆம் வகுப்பு வரை படித்துள்ள சௌந்தரா கைலாசம் பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்தும் தோய்ந்தும் தாமே பாடல் இயற்றத் தொடங்கினார். தமிழறிஞர்கள் உள்பட பலரும் இவர் முயற்சிகளைப் பாராட்டி ஊக்கமூட்டியுள்ளனர். சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழும் இவர், சொற்பந்தல் கட்டிப் பல்லோரையும் ஈர்த்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த முனைவர் அண்ணாகண்ணன் திருமதி.சௌந்திரா கைலாசம் (பிப்ரவரி 28, 1927 – அக்டோபர் 15, 2010) அவர்கள் பற்றி அமுதசுரபியில் அக்டோபர் 2004 ல் வெளியிட்ட கருத்துக்களில் சிலவற்றை இங்கே தருகிறேன்.
கவிதையும் இசையும் மிகவும் ஒத்திசைவுடையவை. நாம் சொல்லவரும் செய்தியை, உணர்வை இசை கலந்து சொல்லும்போது செய்தி அசாத்திய வலிமை பெறுகிறது. எனவேதான் இசை அடிப்படையிலான மரபுக்கவிதை தனிச் செல்வாக்கோடு திகழ்கிறது. கணிதக் கட்டுமானம் உடைய இது, நினைவிலிறுத்த ஏற்றதாகப் பன்னெடுங்காலமாய் மதிக்கப் பெறுகிறது. மரபுக்கவிதை எழுதுவோரே எதிர்பார்க்காத வரிகளைச் சிலநேரம் தந்துவிடும்.
தமிழில் மரபுக் கவிதைகள் எண்ணற்றுப் பெருகின. மரபுக் கவிஞர்களும் பெருகினர். இவர்களுள் பெரும்பாலோர் ஆண்கள். ஒரு விழுக்காட்டினர் பெண்கள். எப்பொருளையும் ஆண்களின் பார்வையிலேயே இவர்கள் பார்த்தனர். இந்த இலக்கியச் சிறுபான்மையினரின் இக்கால எடுத்துக்காட்டு செளந்தரா கைலாசம்.
இறைவன் சோலை, அளவற்ற அருளாளர், கவிதை பூம்பொழில், எழுத்துக்கு வந்த ஏற்றம், இதயப் பூவின் இதழ்கள், சிந்தை வரைந்த சித்திரங்கள், உள்ளத்தில் நிறைந்த உத்தமர்கள், நெஞ்சில் விளைந்த நித்திலங்கள், சௌந்திரா கைலாசத்தின் கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இவை தவிர கட்டுரை, சிறுகதை நூல்களையும் படைத்துள்ளார்.
இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக விளங்கிய கைலாசத்தின் மனைவி. இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இன்றைய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மாமியார்... என மிகச் செல்வாக்கு வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும் அமைதியும் பணிவும் பல நற்குணங்களும் கொண்டவர். இந்து அறநிலையத் துறை, திரைப்படத் தணிக்கைக் குழு, அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
இவர் வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, அகவல், பல்வேறு சந்தங்கள் எனப் பற்பல செய்யுள் வடிவங்களையும் ஆற்றோட்டமாக, எதுகையும் மோனையும் கொஞ்சி விளையாடப் பொழிந்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத்துடன் தொடர்புள்ள இவர், இயல்பாகவே அதிக எதிர்பார்ப்பைத் தூண்டினார்.
உணர்வுகளின் ஓவியமே
உயர்கவிதை! நெஞ்சத்தின்
இணைவுகளின் சாசனமே
இயற்கவிதை! எழிற் கவிதை!
என்பது உள்பட கவிதை பிறப்பது எப்படி? என்ற தலைப்பில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார் அம்மையார்.
உறங்குகின்ற சொற்களினை
ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்துத்
திறங்குவியச் சேர்த்துவிட்டால்
செழுங்கவிதை தோன்றாது
எனப் பலவாறு கவிதைக்கு இலக்கணம் சொல்லி, 'அவை தம் கவிதைகளில் அமைந்துள்ளனவா என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் வாசகர்களாகிய நீங்கள்தாம்' எனத் தன் நூலொன்றின் முன்னுரையில் கூறியுள்ளார்’ என்று முனைவர் அண்ணாகண்ணன் தெரிவிக்கிறார்.
நான் சமீபத்தில் வாசித்த மரபுக்கவிதை ஒன்றை இங்கே தருகிறேன். தருமை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களை வாழ்த்தி திருமதி. சௌந்திரா கைலாசம் 08.10.2004 தேதியிட்டு எழுதி, தருமை ஆதீனத் திங்கள் இதழ் ‘ஞானசம்பந்தம்’ 10.11.2004 இதழில் வெளியாகிய வாழ்த்துப்பா:
ஒப்பரிய சைவநெறி விளங்கு தற்கும்
உயர்வுடைய செந்தமிழிவ் வுலகி லெங்கும்
செப்பரிய வகையினிலே திகழ்வ தற்கும்
சிறுகுறையும் இல்லாமல் வைய மாந்தர்
எப்பொழுதும் இன்பெய்தி வாழ்வ தற்கும்
ஏற்றபணி ஆற்றுகின்ற முனிவர் உங்கள்
பொற்பதங்கள் தலைசாய்த்து வணங்கு கின்றேன்
போற்றுமிறை அருளாலே நீடு வாழ்க!
திருமதி.சௌந்திரா கைலாசம் அக்டோபர் 15, 2010 ல் இயற்கை எய்தினார்.