என் தேசம்

பள்ளிக் கூட வளவுகளிலும் கண்ணி வெடி வயல்கள்
விதைத்து விட்டிருக்கிறது போர்,
என் தேசமெங்கும் எறிகணைகள் பித்தெறிந்த
அம்மாக்களின் மார்புகளிலிருந்து கசிந்தோடிய
குருதி காய்ந்து போயிருக்கிறது,
அவர்களின் குழந்தைகளின் முகத்தில்.

நிர்வாண நிலையினிலே இரத்தச் சகதிக்குள்
நீந்தியவ்ர்களின் தசைகள் மறைக்கபடுகின்றன அபிவிருத்தியாய்...

தமிழச்சிகளின் யோனிகளினால்
அரச மர இலைகளுக்கு பச்சையம் தயாரிக்கப்படுகிறது!
முள்ளிவாய்க்காலுக்கு பின்
எங்களூர் பூவரசம் பூக்கள் மஞ்சளாய் பூப்பதில்லை,
கனகாம்பரம் பூக்கள்வாசம் வீசுவதில்லை.
எருக்களைகள் மட்டுமே தேசமெங்கும் பரவி கிடக்கிறது ...

இரவின் மகிழ்ச்சியில் முத்தம் கொடுத்து நான் உறங்கிய
வீட்டு முற்றத்தில் கந்தகம் பரவிக் கிடக்கிறது ,

பேய்களின் காலடிச் சத்தம் கேட்டு
தும்பி பிடித்து மகிழும் எங்கள் ஊர் சின்னன்கள்
தூக்கத்தில் மிரண்டு எழும்புகின்றனர்!

இரும்புத் தொப்பிகள் எங்களின் வீதிகளில்
உள்ள மரங்களை எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது,
துப்பாக்கிகளை விட அவன் குறிகளால் திட்டமிட்டு
அழிக்க படுகிறது என் வருங்கால சந்ததி!

நாங்கள் சுதந்திரமாய் பறந்து பாடிய தேசத்துள்
முட்கம்பிகள் மீண்டும் வேலிகள் மீது கொடியாகின்றது,
துட்டகை முனுக்களால்
அரச மரத் தேவனுக்கு
எங்கள் ரத்தத்தில் அபிடேகம் செய்யப்படுகிறது!

என் உறவுகளின் அங்கங்களின் போர்ச் சிதைவுகளிலிருந்து
கண்ணை மூடிய படியே வருகிறான் புத்தன்!

துப்பாக்கி ஏந்திய கயவர் கூட்டம்
குவளைகளை ஏந்திய படியே உலா வருகிறது
இரத்தங்களை ஓட விடாமல் சேகரிக்க

என் பள்ளி முட்கம்பிகளானது,
என் வீடு கண்ணீரானது,
என் கோவில் ரத்தங்களானது,
மொத்தத்தில் என் தேசம் சுடுகாடாய்யானது ....

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (24-Jun-12, 9:52 pm)
பார்வை : 304

மேலே