போய் வா மகளே!

போய் வா மகளே!
புதுமையான புன்னகைகளை
பூக்கவைத்த உன் கன்னங்களுக்கு
என் புரட்சி வணக்கங்கள்.

புன்னகையில் என்ன புதுமை?
ஆம்!
நீ சுவைக்கும் சோகத்தின்
அடையாளம் எதுவும் சொல்லாத
உன் சின்ன சுந்தரச்சிரிப்பை
வேறு எப்படி சொல்வதென்று
எனக்கு தெரியவில்லை மகளே!

உன் உண்மைச் சிரிப்பை
என் உலகத்தின் எவரெஸ்ட்
என்றே நான் குறித்துவைத்திருக்கிறேன்.

என்றாலும்
பாலைவனத்தைத் தாண்டமுடியாத
ஒட்டகமாகவே நான்
தவித்துக்கொண்டிருக்கிறேன்.

போர்களத்துக்கு அனுப்ப நான்
உனக்கு விடைகொடுக்கவில்லை.
வாழ்க்கை களத்தில் நீ
வசந்தங்கள் கொய்யவேண்டும்
என்றுதான்
உன்னை வழி அனுப்புகிறேன்.

மெய்ப்பொருள் காணும் அறிவு
உனக்கு நிரம்ப உண்டு.
பொய்ப் பொருள் சொல்வது
நானே என்றாலும்
என்னை நிராகரிக்கவேண்டும்
என்பதுதான் உன் இயல்பு.

நம்பிக்கை என்பது உன்னைவிட்டு
நழுவாத கைவேல்.
உன் கைபிடித்த நாயகன்தான்
உன் வாழ்நாள் நம்பிக்கை.

அரசாங்கம் எழுதிய சட்டங்களை
நான்
ஆராய்ச்சி செய்துவிட்டேன்.
குத்துவிளக்கு என்னும்
சொல்லுக்குகூட
குறிப்பேதும் இல்லை.

குலவழக்கம் என்பது
கலாச்சார அடையாளம்.
அதை குலைக்க நினைப்பது
ஒரு சதியின் வெளிப்பாடு.

போய் வா மகளே!
புதுமைகள் செய்ய புறப்படு.
அவசியமில்லை என்றால்
புன்னகயைக்கூட நீ
புறக்கணித்துவிடலாம்.

எந்த திசையில் நீ நின்றாலும்
புரட்சியின் புத்திரி நீ
என்று புரியவை உலகுக்கு.

உன் சாதனைகள்
கின்னஸ் பதிவுகளுக்கு
மேலென்று என் உள்ளம் சொல்கிறது.

போய் வா மகளே!
பூகம்பம் கூட உன் காலடிகளுக்கு
காவலாய் நிற்கும்.

உன் வாழ்க்கையில்
இனி வசந்தங்கள் மட்டுமே
வாழ்த்துப்பா பாடும்.
இது தான் சத்தியம்
என்றாலும்
மனித முயற்சியில்
இது அசாத்தியம்.

எழுதியவர் : mosay (27-Jun-12, 11:40 pm)
பார்வை : 232

மேலே