மனிதனை படைக்கும்போது மட்டும் ...?!

இறைவன் இந்த உலகை படைத்தவராம்..
அதில் மனிதன் ...மகத்தான படைப்பாம் ..!?
எண்ணங்களால் செதுக்கப்பட்டவன்..
எண்ணியப்படியும் வாழ்பவன் மனிதன் ..!
வளைந்து நெளிந்து ஓடும் நதிகள் ..
வழியெங்கும் தென்படுவோர்க் கெல்லாம்..
வாழ்வளித்துவிட்டு வந்தஇடம் சென்று ..
வடிகால் தேடுகின்றன ..வஞ்சனை இன்றி ..!
மனிதன் சுயநலமாய் தனக்கென ..
தண்ணீரை தேக்கிவைத்து ..
காலத்திற்கும் கலகம் செய்கிறான்..!
எண்ணங்களால் செதுக்கப்பட்ட
மனிதன் மகத்தானவன் ...?!
காற்றில் விழுந்து முளைத்த..
மரம் செடி கொடிகளெல்லாம் ..
விதைத்தவன் யாரென்று கேட்காமல் ..
வாரி வாரி வழங்குகின்றன ..
வாழும்வரை அசராமல்
வாழ்க்கையையும் ,சுவாசத்தையும் ..!
மனிதன் சுயநலமாய் தனக்கென ..
மரத்தை வெட்டி சாய்த்துவிட்டு..
மழைவேண்டி யாகம் செய்கிறான் ..!
எண்ணங்களால் செதுக்கப்பட்ட
மனிதன் மகத்தானவன் ...?!
தன்னிரையைத் தவிர தனக்கென
எதையும் தேடாத மிருங்கங்களும் ..
தன்னையும் இரையாய் தந்து
மடிந்துபோகின்றன மண்ணில் ..
மனிதன் சுயநலமாய் தனக்கென ..
அதையும் சட்டியில் கொட்டி தின்றுவிட்டு ..
மனுதர்மம் பேசுகிறான் ...மரத்தடியில் ..!
எண்ணங்களால் செதுக்கப்பட்ட
மனிதன் மகத்தானவன் ...?!
எண்ணங்களால் செதுக்கப்பட்ட மனிதனுக்கு ..
இந்த எண்ணங்களை செதுக்கியது யார் ..யார் ?
விடைதெரியாத இந்த விடுகதைக்கு ..
விளக்கம் சொல்லி விளங்க வைப்பது யார் ..யார் ?
இவையெல்லாம் இறைவனின்
திருவிளையாடல் என்றால் ...
இத்தனை படைப்புகளை ...
நல்லெண்ணங்களோடு படைத்த நீ ...
மனிதனை படைக்கும்போது மட்டும் ...
நிலைத்தடுமாறி ....அலங்கோலமாய்
எந்த எண்ணத்தில் படைத்தாய் ...?
உன் மன்னராட்சியில் ...
நீ வைத்ததுதான் சட்டமென்ற ...
இறுமாப்பில் தானே ....?