வழக்கம் போலவே இயங்குகிறேன்!
இன்றும்-
வழக்கம் போலவே...
தினசரிகளைப் புரட்டியபடியே
விழிக்கிறது
எனது சூரியன்.
படிக்கையில்...
கொஞ்சம் பொறாமை;
கொஞ்சம் வருத்தம்;
கொஞ்சம் ஆற்றாமை;
கொஞ்சம் கோபம்...
இவைகளோடு...
கொஞ்சம் தேநீரையும்
விழுங்குகிறேன்.
கொஞ்சமாவது சுறுசுறுப்பு இருக்கா?
என்று...உள்ளறையிலிருந்து
எழும்பும் குரலுக்கு அடங்கி...
குளிக்கச் செல்கிறேன்;
தாத்தாவின் காலத்தில் ...
நாற்காலிக்கும், கதவுகளுக்கும்....
பின்னிருந்தும் எழும்பாத குரலின் இனம்...
சுதந்திரமும், கல்வியும்...
எனக்கு செய்த துரோகத்தால்...
இன்று...ஆர்ப்பரிக்கும் நிலையில்.
எனக்கு நேர்ந்த விதியை விழுங்கிக் கொண்டு...
தயாராகிறேன்...அலுவலகத்திற்கு.
வழக்கம் போல் பேருந்துப்பயணம்;
ஒரு கட்டுக்குள் ....
தனித்தனி சுள்ளிகளாய் மக்கள்.
ஏனோ-"நீர் அதன் புதல்வர்...இந் நினைவுஅகற்றாதீர்"....என்ற கவிதை வரி
நினைவில் வலியைத் தருகிறது.
எல்லா அலுவலகங்களுமே-
கடல் மீன்களின் கூட்டம்.
சிறிய மீன்களை எப்போதும்
தின்று கொண்டிருக்கும் பெரிய மீன்கள்.
பெரிய மீன்கள் வலைகளால்
வீழ்த்தப் படுவது வேறு விஷயம்.
இந்த அலுவலகத்தில் நான்-
பெரிய மீன்களிடம் இருந்து
சாதுர்யமாய்த் தப்பித்துக் கொண்டிருக்கும்...
சிறிய மீன்.
அலுவலகத்தின் எனது ..
இன்றைய நீச்சலில் எனக்குக் கிடைத்தவை.
சில புழுக்கள்.,
எப்போதும் தொங்கும் தூண்டில்;
சில... அழியும் நீர்க் கனவுகள்;
அலுவலகம் முடித்துக் கிளம்புகிறேன்.
தூண்டில்கள்..ஓய்வெடுத்துக் கொண்டுவிட..
பேருந்தில் எனது அடுத்த பிரளயம்.
வாழ்வின் வலிகள்... தொடர் கதையாகிவிட..
என் மேல் நரையேற்றக் காத்திருக்கிறது
காலம்.
ஒரு கூட்டிற்குள் நடக்கும் குருவிச் சண்டைகள்..
தொடர...
சிறகுகள் இருந்தும்.,வானம் தெரிந்தும்..
பறக்க இயலாமல்.
.
இயங்குகிறேன் நான்..
ஒரு..முடுக்கி விடப்பட்ட பொம்மையாய்
நாளைய சூரியனிலும்.
இதை நான்...
"வாழ்ந்தேன் நான்!"- என
எப்படிச் சொல்லுவோம்...
நானும்.. நீங்களும்?