அந்தக் கதவுகள் திறக்கட்டும்!
பதினான்கு ஆண்டுகள்
------பதவிக்கு வந்தவர்
-------------போனவர் காண வில்லை!
------பணம்மட்டும் காணுமவர்
-------------பொன்விழிகள் இவைகாண
--------------------பொழுதொன்று வாய்க்க வில்லை!
விதியென்று உள்ளவர்
------விண்ணப்பம் தந்திட்டார்
------------வேலையோ நடக்கவில்லை!
------விளையாட்டாய் இருக்கின்ற
-------------விழியற்ற இளைஞர்க்கோ
--------------------இதன்விலை புரிய வில்லை!
மதிகெட்டச் சமுதாயம்
-------மனமொன்றித் தம்முரிமை
---------------முழக்குமோர் தெளிவு மில்லை!
-------மலைபோல அறியாமை
---------------நிலையான ஒருநாடு
----------------------மண்மீது வாழ்ந்த தில்லை!
கார்மேகம் தனக்குள்ளே
-------கட்டிவைத்த மழைபோலக்
--------------கண்மறைத்தக் கோல மென்ன?
-------கணக்காக மாணாக்கர்
-------------கைகளிலே புத்தகங்கள்
--------------------மணக்காத அவல மென்ன?
தேர்வாகாய் இங்கிருக்கத்
-------தெய்வமும் தானிருக்க
--------------ஊர்வலம் இழந்த தென்ன?
-------தன்னலம் மிகுத்தபலர்
--------------தனக்கென்ன எனச்சொல்லி
----------------------தருக்கியே நடப்ப தென்ன?
ஓர்பாகு பாடின்றி
--------உறவாடும் மாணாக்கர்
---------------ஒற்றுமை குலைந்த தென்ன?
--------ஒருபயனும் இல்லாத
----------------அனைத்திற்கும் மறியல்கள்
-----------------------ஒழுங்காக நடப்ப தென்ன?
கரையானுக் கொருநாளில்
--------இரையாகிப் போகுமுன்
---------------கதவங்கள் திறப்ப தாக!
--------கர்ப்பத்து வாயிலெனக்
---------------கணக்கினில் தப்பாமல்
-----------------------கனிவுடன் திறப்ப தாக!
நிறைவான நூற்கற்று
-------நிலையான அறிவுற்று
-------------மாணவர் உயர்வா தாக!
-------நெடியதொரு இரவுக்கும்
--------------விடியல்வரும் பாவனையில்
----------------------நற்கதவம் திறப்ப தாக!
முறையாக என்நாவில்
-------முகிழ்க்கின்ற தமிழாணை
--------------முழுகதவம் திறப்ப தாக!
--------முத்தமிழில் நானெழுதும்
---------------வித்தாரக் கவியாணை
-----------------------மறவாமல் திறப்ப தாக!
(சில நாட்களுக்கு முன்பு எங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசினர் கலைக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியையோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அவர்கள் சொன்ன ஒரு செய்தியில் நான் உறைந்து போனேன்.
அக்கல்லூரியின் நூலகம் கடந்த 14 ஆண்டுகளாகப் பூட்டிக்கிடப்பதாக அவர்கள் கூறினார்கள். காரணம் கேட்டேன். சுயநலத்தோடு கூடிய பொறுப்பற்ற பதில் அவர்களிடமிருந்து வந்தது. அரசாங்கம் அக்கல்லூரிக்கு அனுப்பும் புத்தகங்களை எடுத்து அடுக்கிவைத்துவிட்டு மீண்டும் நூலகத்தைப் பூட்டி வைத்துவிடுவார்களாம்.14 ஆண்டுகளாக அங்கு "நூலகர்" என்று ஒரு நபரே கிடையாது.
ஆசிரியர்களுக்குப் பொறுப்பில்லை. அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. உரிமைக்காகப் போராட வேண்டியவர்கள் மாணவர்களே!
அவர்களும் போராடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். சினிமாவுக்குப் போவதற்காக கல்லூரியை இழுத்து மூடச்சொல்லி வாரத்தில் 4 நாள் கல்லூரிமுன் சாலை மறியலும் வகுப்புப் புறக்கணிப்பும்.
அந்த "வருங்காலத் தலைவர்களுக்கு" இக்கவிதை சமர்ப்பணம்)
-------------ரௌத்திரன்