ஒரு சிறைக்கைதியின் காதல் !

கழிப்பறையும் களி உணவும்
ஓர் இடத்தில் வைத்துக்கொண்டு
விழியோரம் நீர் சிந்த
கலி தின்னும் காதலன் நான்...!

வாழ வேண்டிய வயதில்
வாழ முடியா நிலையில்
அந்த உள்ளத்திலும்
இந்த கூட்டிலும்
ஒரே நேரம் இரு சிறையில்
துடித்துக்கொண்டிருக்கின்றேன் !

உன் முகம் பார்க்க
துடிக்கின்றேன்
என் முகம் பார்க்க
கண்ணாடி கூட இல்லாத
இடத்தில் இருந்துக்கொண்டு...!

கன்னத்தில் கைவைத்து – உன்
எண்ணத்தில் நானிருக்க
கன்னம் பொத்தி அறைந்த
காக்கிச் சட்டையின் கைகளால்
கனவு கலைந்தது தான் வலித்தது…
கன்னம் வலிக்கவில்லை
பழகிவிட்டதால்...!

கஞ்சாக்காரன் கசிப்புக்காரன்
கொலைகாரன் கொள்ளைக்காரன்
அத்தனைப்பேரின் இன்னல்களும்
சகித்துக் கொண்டு வாழ்கின்றேன்
சகியே உன் நினைவுகளை
சப்பிக்கொண்டு...!

செய்தி சொல்ல வழியில்லை
செய்தி கொண்டு வருவாரும்மில்லை
நீ எனக்கு வேண்டுமென்பதால்
செத்துக்கொண்டு வாழ்கின்றேன்...!

சங்கடமே இல்லாமல்
சந்தேகப்பட்டார்கள்
சாப்பிடும் போதுகூட
சங்கடமே தருகிறார்கள்
உயிர் வாழ ஆசைப்பட்டு
உணவருந்தி வாழ்கின்றேன்
என்னவளே உன்முகத்தை
எப்படியும் பார்ப்பேனென்று...!

இன்னல் தீர்ந்து
வரும் வரைக்கும்
என்னுயிரே நீ எனக்காய்
காத்துக்கொண்டு இருப்பாயா...?
காதல் கொன்று போவாயோ...?

எழுதியவர் : KS Kalai (9-Jul-12, 8:55 am)
பார்வை : 521

மேலே