கிராமத்துச் சாலைகள்

எனது சிறு பிராயத்தில் ஓடி விளையாடிய
எனது தெருவின் மண் சாலைகள்
இன்று தார்ச்சாலைகளாய்!

வெயிலுக்கு இதமாய் இருந்த
எனது தெருவின் மண் சாலைகள்
தார்ச்சாலைகளாய் மாறிய பின்
தேவைப் படுகின்றன ஒரு ஜோடி காலணிகள்!

மழைக்கு வரும் வெள்ளத்தை
உள்வாங்கி உறிஞ்சிக் கொண்ட
எனது தெருவின் மண் சாலைகள்,
தார்ச்சாலைகளாய் மாறிய பின் மழை நீர்
வடிய வடிகால் இல்லாமல் பரிதபமாய்!
வாங்கிய காலணிகளோ கைகளில் அடைக்கலமாய்!

பாதத்தில் காலணிகள் இல்லாமல்
ஓடித் திரிந்த போதும்
எனது தெருவின் மண் சாலைகள்
நன்கு கவனித்துக் கொண்டன
கீழே விழுந்தாலும் சிறு காயம் கூட படாதவாறு!

இன்றெனது தெருவின் குழந்தைகள்
அனைவரிடமும் விலை உயர்ந்த காலணிகள்!
இருப்பினும் அவர்களிடம்
நான் நிதம் பார்ப்பது ரத்தக் காயங்களை!
குழந்தைகள் விரும்புவதென்னவோ
இயற்கையை மட்டுமே!
காலணிகள் ஒரு ஓரமாய்!

எனது சிறு பிராயத்தில் ஓடி விளையாடிய
எனது தெருவின் மண் சாலைகள்
இன்று தார்ச்சாலைகளாய்!

பெரியவர்களுக்கு இளைப்பாருவதற்காய்,
குழந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டி விளையாடுவதற்காய்,
பெண்களுக்கு வசதியாகப் பேசிக் கொள்வதற்காய்
என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில்
பயன் தந்த எனது தெருவின் மரங்கள்
இன்று வேரோடு அழிக்கப்பட்டிருக்கின்றன.
கோவில் கோபுரத்தின் உச்சியில்
இருந்து பார்த்தால்
எனது தெருவுக்கு
தலை முதல் இடை வரை இருக்கும்
பெண்ணின் தலைமுடி போல் இருந்த மரங்கள் இன்று
மொட்டையடிக்கப்பட்ட மூளிகளாய்!

எனது சிறு பிராயத்தில் ஓடி விளையாடிய
எனது தெருவின் மண் சாலைகள்
இன்று தார்ச்சாலைகளாய்!

எழுதியவர் : (1-Oct-10, 6:21 pm)
சேர்த்தது : Sankara Narayanan
பார்வை : 403

மேலே