சில கவிதைகளும் சிறு துண்டு காகிதங்களும்

நினைவுகளில் வந்து செல்லும்
கவிதைகள் எல்லாம் அப்போதைக்கப்போது
துண்டு காகிதங்களில் பிரசுரமாகின்றன,
மறவாமல் அவற்றை எனது சட்டைப் பையில்
பத்திரபடுத்திக் கொள்ள தெரிந்த எனக்கு
அதை புத்தகங்களில் பிரசுரிக்க
அனுப்ப மறந்து விடுகின்றன,

முடிவு!
எனதன்னை எனது சட்டையை துவைப்பதற்கு
ஊற வைக்கும் பொழுதே
உள்ளே உள்ள கவிதை துணுக்குகளும்
கலைந்து விடுகின்றன
எனது நினைவுகளில் இருந்து கலைந்தது போலவே!

ஆயினும் கவலை படுவதில்லை!
இதோ இப்பொழுதும் என் நினைவுகளில் மற்றுமொரு கவிதையும்,
என் முன்னால் சில துண்டு காகிதங்களும்!!!

தூங்கி எழும் முன்னே கனவுகளில் வந்து செல்லும் கவிதைகளும்,
தூங்கி எழுந்த பின்னே தூக்கத்தோடு கலைந்து விடுகின்றன,
கனவுகளில் கற்பனைக்கெட்டாத கவிதைகள் பல
கண்ணுக்கெட்டா தூரம் வரை விரவிக் கிடக்கின்றன,
அதில் நிஜங்களும், நிழல்களும் கலந்து கொள்கின்றன,
நியாங்களும், அநியாயங்களும் கட்டித் தழுவி கொள்கின்றன,
இன்பமும், துன்பமும் ஆக்ரமித்து கொள்கின்றன,
எல்லாமே கனவுகள் இருக்கும் வரைதான்,
கனவுகள் கலைந்தவுடன்
கவிதைகளும் கண்ணுக்குள்ளேயே புதைந்து விடுகின்றன
வெளியே எடுக்க முடியாமல் என்றென்றைக்குமாய்!

ஆயினும் கவலை படுவதில்லை!
இதோ இப்பொழுதும் என் நினைவுகளில் மற்றுமொரு கவிதையும்
என் முன்னால் சில துண்டு காகிதங்களும்!

எழுதியவர் : (1-Oct-10, 6:22 pm)
சேர்த்தது : Sankara Narayanan
பார்வை : 680

மேலே