தீண்டப்படாத தீண்டாமை.

தீண்டாமை
பெரும் குற்றம்.

தீண்டாமை
பெரும் பாவச் செயல்.

ஹே!
மலம், மூத்ராதிகளோடு...
இருக்கும்
இந்த உடலைப்
"பஞ்சமன்" என்றும்...
"பிரம்மன்" என்றும் ...
அறிவது எங்ஙனம்?...
ஆதி சங்கரரே!

நந்தனும்....
கண்ணப்பனுமே..
நாயன்மார்கள்தான்.

இரத்தம் ஒரே நிறம்.

சாதிகள் இல்லையடி பாப்பா!

சாதி என்பது...
உயிரின் சாந்தியை
எரிக்கும் தீ.

அழிப்பதற்கல்ல மதம்..
கடவுளை நமக்குள்
அழைத்து வருவதற்குத்தான்.

நீயும்..நானும்
ஒன்றென...
நல்ல புத்தகங்கள்
இப்போதும் சொல்கின்றன.

எல்லாம் படித்திருக்கிறேன்..
உன்னைப் பற்றித்தான்.

இருந்தாலும்....
முகம் தெரியாத
பாட்டன் காலத்திலிருந்தே ...
பழக்கமாகி விட்டது..

நீ
புழக்கடைக்கு...
கொல்லையைச் சுற்றியே வா!
எதன் மேலும் பட்டுவிடாதே!
எதையும் தொட்டு விடாதே!

என்னால்
தீட்டுத் துடைத்து...
இரண்டாம் முறை
தலைகுளிக்க முடியாது.

எழுதியவர் : rameshalam (16-Jul-12, 12:25 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 189

மேலே