கிளிப் பாட்டு 4 - மாயக்கிளி

4. மாயக் கிளி

கிளியின் பாட்டென்ற கிள்ளைமொழி தான்கேட்டு
உளியோ கூர்பட்ட உருவம்செய் சிற்பியென
மொழியாற் கவலையுற மேதினியிற் பெருஞ்சோகம்
அழுதே எனைக்கலங்க ஆக்கியதக் கிளிநோக்கி

பனியோ படுகுளிரோ பைத்தியமென் றாகியதோ
தனியே ஆடுவதும் தலைமாறிக் குதிப்பதுவும்
இனிதோ இளங்கிளியே இரு, சற்று கேளாயுன்
புனிதத் திருவாயால் பொய்யுரைத்த லாவதுமேன்

நேற்றோர் நாள் நிறுத்தா நீரொழுகும் விழிகொண்டு
கூற்றோ கொடிதென்று குவலயத்து வாழ்வதனை
காற்றோடு சென்றே காட்டிடையே சிக்கிமனம்
சேற்றோடு வாழச் சிதைந்ததெனச் சீற்றமுற்றாய்

இன்றோ குதிபோட்டு இன்பமே உலகென்று
தின்றே ஆடுகிறாய் தெரிவதுமென் முரண்கூறு
நன்றோ பெண்ணவளை நாஇழிந்து பேசுவதும்
இன்றே அவளன்பு ஆகா என் றோதுவதும்

ஒன்றேமெய் ஒன்றில்லை ஒன்றாகும் என்றில்லை
நின்றுலகில் நீயாடும் நிலையும் புரியவில்லை
சென்றேகாண் உள்ளத்தில் சீலம் தவறிவிடல்
நன்றோ மனமழுக்காய் நலிந்து கெடல் ஆவதுமோ

திரும்பித் திசை எனது திருமுகத்தைப் பார்த்துக் கிளி
இரு மனிதா ஏதேதோ எண்ணியதைக் கூறாய் நில்!
வருமுனது வார்த்தையெது வைத்தெல்லை காக்காது
வருந்தியழு தாயென்று வாய்கூசப் பொய்யுரைத்தாய்

எறும்பளவு துயர்தனும் என்மனது பட்டதில்லை
பொறுமையுடன் மன்னித்தேன் பேச்சாம் உனதென்றே
இறுமாப் புடன்பேசும் இளங்கிளியை கண்டயர்ந்தேன்
`வெறும் பச்சைப் பொய்கொண்டு விளையாடும் நாடகமென்

அழகுக் கிளி வாழ்வில் அவலம்தான் பெரிதென்று
அழுத செயல்கண்டேன் அதுவும் பொய்யாமோ
பொழுதான நாளொன்று போகத் தலைகீழாய்
முழுதும் இலையென்று மாயக் கதை சொன்னாய்`

//மாய உலகில்லை மாறுவதோ உன்கூற்று
மாயு முலகுண்மை மரணத்தின் மேடையிது
காயம் உயிர் கொண்டாய் காலந்தான் கொண்டோடக்
காயம் விளைத்துனையே காவு கொள்ளும் புவியாகும்//

”மோசக்கிளியே நீ முன்னொன்று பேசியதென்
பாசப் பலியென்று பாரினிலே பட்டதுயர்
கூசாப் பொய்பேசிக் குலைந்துனது மனமிழிந்தாய்
வேசம் புரியவிலை வீண்பிறப்போ தெரியவிலை”

(அடுத்ததில் முடியும்)

எழுதியவர் : கிரிகாசன் (20-Jul-12, 11:47 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 215

மேலே