நடநட விடியல்வரை..!
படபட தடதட எனவரும் இடர்களும்
விடுபட உயிர்பெறவே
கடகட குடுகுடு எனநட தடைகளும்
பொடிபட உடைபடவே
கொடுகொடு பிடிபிடி எனத்துயர் தருபவ
ரிடம் அதை மறுபடியே
நடநட கிடுகிடு எனசெய லெடுகரம்
இணைந்திடு ஒருபடவே
கடகட எனஎழு கனதுள செயவென
திடமுடன் எடுநடையே
இட இட முடிஉன திருகர மிடுசெயல்
முடிவுற எமதுயர்வே
சட சடவெனப் பிழை புரிபவரிடம் கொதி
அனலென அவரிடையே
மடமட எனஎரி மறமுடன் தருமமும்
பெருநெருப் பெனஎழவே
தொடைகடகடவென நடுங்கிய நிலைவிடு
மடைவெள்ளம் உடைபடவே
விடுவிடு எனவரும் அலையென நடைஎடு
எதிரிகள் விடைபெறவே
தொடுதொடு குடையென வளையினும் தொலைவினில்
உளவிரி விண்அருகே
மடுமடு என அல்ல மலையென நிமிர்வரும்
கொடுமைகள் தறிகெடவே
தடுதடு வருமவர் எவரெனும் தரணியில்
தமிழினை துயர்செயவே
எடுஎடு கொடுகொடு எதிரிகள் நடைபிழன்
றுடைபட விட எமையே
மடமைகொள் ளவரிடம் எதுவென்ன பகர்வதில்
ஒருபய னெதுவில்லையே
விடிவினை அடைவதில் எதுவழியென உணர்
அதுவரை நடை தளரேல் !