மழை அனுபவங்கள்
மழை அனுபவங்கள்
எல்லோருக்கும் இருக்கும்
கோடை வெம்மை குறைந்து
குளிர்மூடி துமிக்கும் போது
புழுதி வாசம் கிளம்பும்
இதை நுகர்திருக்கிறாய் அல்லவா.
குடையில்லாமல் சிறுதுமியில் நனைந்து
வீட்டுக்குள் ஓடிவந்து
மழை அதிகரிக்க அதிகரிக்க
மகிழ்ச்சியும் அதிகரித்திருக்கிறதல்லவா
திடீரென கொட்டிய
மழை நாளில்
உன் விருப்பத்துக்குரியவள்
ஓடி வந்து
அவசரமாய் தலைதுவட்டும் போது
வெளியே மழை நின்று விட்டிருக்கும்
உன்னுள்ளே மழை பெய்ய ஆரம்பிக்கும்
நனைந்து மரங்கள் ஆடும் அழகில்
மனதை தொலைத்து
குளிரை பகிர மனதுக்கு விருப்பமானவளை
மனதுள் அழைத்திருக்கிற அனுபவம்
வாய்திருக்கிறதல்லவா
சுடு தேனீருடன்
குளிர் மழை அழகை
ஜன்னல் வழியே ரசித்தபடி
ஒரு கவிதை எழுதும் அனுபவம்
அலாதியானதல்லவா
இரவு தூக்கத்தில்
தொடரும் மழையில் போர்வை இறுக்கி
அதன் ஓவென்ற ஓசைலயத்தில்
மனமொன்றி
வருகின்ற தூக்கமும் சுகமும்
மிகப் பிரியமானதல்லவா
இதை விட
இப்படியும் ஓர் அனுபவம் இருக்கிறது தெரியுமா
நடு நிசி நேரம்
வெளியே செல்விழும்
உயிர் நடுங்கும்
மழை கொட்ட ஆரம்பிக்கும்
பங்கருக்குள் வெள்ளம்
குளிர் உயிர் கொல்லும்
உருண்டையாய் நீளமான
ஜந்து ஒன்று காலில் சுற்றி
மேலே நகரும்.