குமுறுகிறாள் ஒரு விதவை !

கோடி கணக்கு கனவுகள
மனசுக்குள்ள பொத்தி வச்சி
ஆசப்பட்டு வாழ வந்தே
அத்தனையும் வீணா போச்சி...!

வெள்ளாட போட்டுகிட்டு
பள்ளிக்கூடம் போகயில
வித விதமா ஆசப்பட்டே
விசித்திரமா கனவுகண்டே...!

வெள்ள பொடவ கட்டிக்கிட்டு
பள்ளியற போகுறப்ப
படும்பாட்ட என்ன சொல்ல - எனக்கு
பக்கதுண யாருமில்ல...!

கல்யாணம் சடங்கு வந்தா
சொல்லாம தள்ளி வச்சி
அமங்கலினு காட்டுறாங்க
என்ன தப்பு நா செஞ்சே ?

நல்ல உடுப்பு உடுத்திக்கிட்டு
கட பக்கம் போகுறப்ப
புருசன் செத்த கவல எனக்கு
கொஞ்சம் கூட இல்லன்னு
குத்தல் கத சொல்றாங்க...!

அண்ணன் தம்பி மாதியுள்ள
தெரிஞ்சவுங்க வந்து போனா
தேவையில்லா பட்டம் குத்தி
தெருவோரம் சிரிக்குறாங்க...!

தப்பி தவறி சிரிச்சிப்புட்டா
தவறான பேர சொல்லி
கூசாம பேசுறாங்க,
பெரிய கொடும செய்றாங்க...!

அவலப்பட்டு வாழும் என்ன
கேவலப்படுத்தி பேசாதிங்க
சந்தோசம் வேணாமுங்க
சங்கடத்த தறாதிங்க...!

(கிராமிய மொழி நடையில் எழுதியுள்ளேன்.சில இடங்களுக்கு தேவையான எழுத்துக்களை சேர்த்து வாசியுங்கள்.)

எழுதியவர் : KS Kalai (24-Jul-12, 7:41 pm)
பார்வை : 5327

மேலே