பெண் சிசுக்கொலை
ஒரு கோடி உயிரணுக்கள
ஒருவழியா முந்திப்புட்டு
நோகாம நா மட்டும்
ஒத்தையிலே உதிச்சுப்புட்டேன்.....
சேதி தெரிஞ்ச எங்கம்மா
மேனியெல்லாம் செவந்திடுச்சு
ஒரு நிமிஷம் பொறுக்காம
ஒன்னத்தேடி துடிச்சிடுச்சு....
ஒட்டுமொத்த வெக்கத்தையும்
ஓரங்கட்டி வெச்சுப்புட்டு
நீங்க "அப்பா" ஆகப்போறீங்கன்னு
ஒங்காதுக்கிட்ட சிணுங்கிட்டு ஓடிடுச்சு....
வயுத்துப்புள்ள கேட்டுப்புட்டானு
வளையல்லருந்து வானவில் வர
வாஞ்சையோடு வாங்கித்தந்து
வானத்தளவு நேசமா இருந்தீங்க...
நாளெல்லாம் நீங்கபட்ட சந்தோஷம்
நாலு மாசம் நெலைக்கலையே
கருத்தரிப்பு மையத்துல கருப்புதிர
என்ன பெண் சிசுவாக் காட்டிடுச்சு..!!
உனக்கு கருப்பு நாளா ஆயிடுச்சு ...!!!
இதயம் உருவாகி ரெண்டே நாளான
இளம்பிஞ்சு நெஞ்ச அறுத்த மாதிரி
இரக்கமில்லாம அரக்கத்தனமா
கருவுலையே கொன்னுட்டீங்க....
பத்துமாசம் சுமந்து
பக்குவமா பெத்தெடுத்து
பாத்துப் பாத்துப் பாசங்கொட்ட
"அம்மா" ங்கற பொண்ணு
ஒனக்கு வேணும்
வெவரமில்லாத வயசுக்கு
விடலைனு பேரவெச்சு
பத்தும் ஆறும் கூடுனதும்
"தோழி" ங்கற பொண்ணு
ஒனக்கு வேணும்
வயசு கொஞ்சம் கூடுனதும்
வயசுப் பொண்ண சுத்தி வந்து
கொஞ்சிப் பேசிக் காதலிக்க
"காதலி" ங்கற பொண்ணு
ஒனக்கு வேணும்
கல்யாணம் பண்ணிக்கிட்டு
அன்பும் புரிதலும் அள்ளித்தந்து
காலமெல்லாம் கூட வர
"மனைவி"ங்கற பொண்ணு
ஒனக்கு வேணும்...
அடிமனசுல இருந்து
"அப்பா" ன்னு கூப்படற
இந்தப்பொண்ணு மட்டும்
ஒனக்கு வேணாமாப்பா ..????!!
உசுருபோக இருக்கையில
உருக்கமா இத எழுதிப்புட்டேன்
ஊரு சனம் உன்ன ஏசும்
ஒருத்தர்டையும் இத காட்ட வேணாம்பா..!!
~~~கண்ணீருடன் உன் மகள் (பெண் சிசு...)