பேசப்படாத துயரங்கள்..

சாத்திரம் நின்றது பின்னே -எங்கள்
நம்பிக்கை சென்றது முன்னே
நம்பிக்கையை மனதில் வைத்து
ஈழத்திலிருந்து சந்திரனுக்கு ரொக்கட்
அனுப்ப கனா கண்டோம்...

இன்று..

வேர்த்தன எங்களின் தோள்கள் - துயர்
சேர்ந்தன பூமியின் நாள்கள்
அராயக அரசின் போர் வலையில்
சிக்கின எங்களின் உயிர்கள்..
வானை பிளந்து வந்த குண்டுகளில்
சுற்று மதில்கள் சாய்ந்தன - எங்கள்
உறவுகள் அதிலே மாய்ந்தன..

இரவு வேலைகளிலும் வந்த குண்டுகளில்
உயிரை கையில் பிடித்து ஓடிப்
பிரிந்து சென்றோம்.. - ஒற்றை
தனிமையில் நின்றோம்.. - இனி
எங்கே செல்வோம் எம் உறவுகளை தேடி??
வாடியே சரிந்து போனோம் - இந்த
வையகத்தே இனி யார் உள்ளனர்
எம் துயரங்களை பகிர்ந்து கொள்ள.. - அந்த
குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க???

பைந்தமிழர் பண்பாட்டை சீர்குலைக்க நடந்த போர்க்களம் இதுதானோ??

மனிதர்களின் சுவடுகளே அறியாத இடங்களுக்கு நாம் துரத்தப்படுகையில்
யார் வந்தார் எம்மை காப்பற்ற???

உறைந்து போய் கிடக்கும் தமிழ் குழந்தைகளின் புன்னகை குரல்களையும்,
பேனாக்களை இழந்து அடைபட்டு கிடக்கும் குழந்தைகளையும்,
முகவரிகளற்ற தேசங்களில் அலையும்
உறவுகளின் முகங்களையும்,
மாற்றங்கள் அற்று போன வாழ்வின் சுவையையும்,
மீண்டும் ஒருமுறை தர முடியுமா உம்மால்??

நாங்கள் ஏன் தனித்து விடப்பட்டோம்???
உலகமே எங்களின் உணர்வுகளின் வலி எட்டவில்லையா உனக்கு???

எம் ஊரின் நதியின் சலசலப்பில்
வருடும் தென்றலின் தழுவலில் ஒவ்வொரு பூவின் முகத்திலும் விடுதலையின்
விருப்பு மிளிர்கின்றதே..

நிறங்கள் அற்றுப் போன எம் வாழ்வில் - இனி
வானவில்லாய் வருவது யார்???

எழுதியவர் : ச.ஜெயபாரதி (28-Jul-12, 6:40 pm)
பார்வை : 288

மேலே