அழிவை நோக்கி தமிழ் கலாச்சாரம் ?
உலகின் தொன்மையான் மொழிகளில் ஒன்று என பெருமைப்பட்டுக்கொள்ள காரணமான தமிழ் மொழியின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் சோகம்தான்.
தமிழின் சிறப்பு தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் உள்ளது. என தமிழை காப்பாற்ற வேண்டிய காலமும் கடமையும் இப்பொழுது நம் கையில் உள்ளது. தமிழன் தன் பெருமையை மறந்து ஆங்கிலத்தின் மேல் மோகம் வைத்ததுதான் தமிழின் இந்த நிலமைக்கு அடிப்படை காரணம். பெரும்பாலும் இப்பொழுது நம்மிடம் தமிழ் இல்லை. ஆங்கிலத்தமிழ் தான் நமது நுனி நாக்கில் மிஞ்சியுள்ளது. அதிலும் தமிழை விழுங்கி ஏப்பம் விடும் நிலைதான் எதிர் வரும் காலத்தில் நிகழும் போல,
தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என பிரச்சாரம் செய்ய வேண்டிய அழிவு நிலைக்கு வந்து விட்ட நமது செந்தமிழ் மொழி நம் தலைமுறையுடன் முடிந்துவிடுமோவென அச்சம் நெஞ்சினுள் ஊற்றெடுக்கிறது.
கவிஞன் ஒருவன் அருமையாக சொன்னான், பசுமாடும் தாயை அம்மாவென சொல்கிறது, பச்சைத்தமிழனோ மம்மினு சொல்கிறான். என்று. இந்த வார்த்தைகள் அவனது வாயில் வர அவனது எண்ணக்குமுறல்கள் எப்படி இருக்குமென யோசிக்க முடிகிறது. சிறு குழந்தை பள்ளிக்கு போகும்முன் பெற்றோர் சொல்லிக்கொடுக்கும் முதல் வார்த்தைகள் கூட தாய்த்தமிழ் மொழியில் இருப்பதில்லை. நம்மை அடிமையாக்கியவர்கள் மொழிதான் இன்று தமிழனுக்கு உயர்வாக தெரிகிறது.
ஒருவனின் ஆங்கிலப்புலமையே அவனது அறிவுத்திறமையாக கணக்கிடப்படுகிறது. சிந்தியுங்கள், இப்பொழுது நம்மை சுற்றியிருக்கும் பொருட்கள் பலவற்றின் தமிழ் பெயர்கள் நம் இதுவரை நாம் அறிந்திடாதவையாக இருக்கிறது. மனதின் சிந்தனைகள் கூட சுத்தத் தமிழில் இருப்பதில்லை.
சரி விடுங்கள், மொழிதான் இப்படி, கலாச்சாரம் எப்படியென பார்த்தால் அதுவும் மிகவும் சோகம்தான். அந்தி மயங்கும் மாலையில் சாலையோரம் வறுத்துக் கொடுக்கும் சோற்று உருண்டைகளை பெயர் தெரியாமல் சுவைக்கும் கலாச்சாரத்தை காலம் ஏற்படுத்தியுள்ளது.
சினிமா என்னும் ஊடகம் முன்பெல்லாம் நாடகத்தமில் வடிவில் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்க மட்டுமே உதவியது. இப்பொழுது நிலைமையே தலைகீழ். நுனி நாக்கில் ஆங்கிலமும் சாயம் பூசப்பட்ட தலைமுடியும் ஐந்து நிமிடத்தில் நூறு பேரை சாகடிக்கும் ஒருவன் தான் நாயகனாம்.
எல்லாம் சரிதான் நூறு பேரை சாகடித்துவிட்டு அடுத்து என்ன செய்வான் என்றால் விசித்திரம்தான். அரை நிர்வாண உடையில் நாயகியும் முழுதாக போர்த்திய உடையில் நாயகனும் இமயமலையின் உறைய வைக்கும் பனி மலைச்சாரலில் இடி இசையில் நடனம்.
தற்போதுள்ள தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் ஒரு கேலிப்பொருள்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இதனை தமிழ் சினிமா இன்றும் ஆதாரப்பூர்வமாக நிருபித்துக்கொண்டுதானிருக்கிறது.
அவலங்கள் இத்துடன் முடியவில்லை. தமிழின் பண்டைய வரலாற்றையும் சண்டைக்கு இழுக்கிறது. இதற்க்கு தற்போது சிறந்த எடுத்துக்காட்டு ஒன்று இருக்கிறது. மிகப்பெரும் கூட்டணியில் பிரம்மாண்ட செலவில் தமிழில் வெளிவந்த சிவாஜி என்னும் படத்தில் ' தமிழ் வேந்தன் கொடை வள்ளல் பாரி மன்னனின் புதல்விகள் அங்கவை, சங்கவை என்பவர்களை கதாப்பாத்திரங்களின் பெயர்களாக வைத்து அவர்களின் தந்தையாக ஒரு நாடறிந்த தமிழ் பேராசிரியரை நடிக்க வைத்து அவரது வாயிலாகவே இரட்டை அர்த்த வசனங்களை பேசி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் கொலை செய்ய துணிந்திருக்கிறார்கள்.
தமிழ் கலாச்சாரத்தையும் ஈகைப்பண்பையும் போற்றி வளர்த்த பாரியின் புதல்விகளின் பெயர்களுக்கே இந்த நிலைமையா? அதுவும் தமிழகத்திலேயே!
இதனால்தான் இந்த சூழலில் இப்படியொரு கேள்வி எழுப்புகிறேன். அழிவை நோக்கி தமிழ் கலாச்சாரம் ?
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.