சாதிகள் தொல்லையடி பாப்பா (சிறுகதை )

அது ஒரு கிராமத்து அரசு உயர்நிலை பள்ளி , மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது . ஐந்து வயதை ஒட்டிய குழந்தந்தைகள் தனது பெற்றோகளுடன் தலைமை ஆசிரியர் அறை அருகே நின்றுகொண்டிருகின்றனர்.

வரிசையில் இரண்டாவது ஆளாக தமிழ்மணி தனது தாயார் கற்பகத்துடன் என்னவென்று அறியாது நின்று கொண்டிருக்கிறான்.தமிழ் மணியின் குடும்பம் ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடும்பம் தான்..

அடுத்த ஆளாக கற்பகம் தனது மகனை அழைத்துக்கொண்டு அலுவலகத்துக்குள் நுழைகிறாள் தலைமை ஆசிரியர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை நிரப்ப ஒவ்வொரு கேள்வியாக கேட்டு விண்ணப்பம் பூர்த்தி ஆனபின்னால் "புள்ளைய கூட்டி போயி இன்னைக்கே ஒன்னாம் வகுப்புல கொண்டுபோய் விட்டுடுங்கமா " என்று கற்பகத்திடம் கூற அவளும் ஆகட்டும் சார் என்று சொல்லி ஒரு வணக்கத்தை இட்டுக்கொண்டு முதல் வகுப்பில் தனது ஆசைமகனை கொண்டு சேர்கிறாள்..

முதல் வகுப்பு ஆசிரியை சூசை அம்மாள் மிக அன்பான ஒரு ஆசிரியை அவர் தமிழ்மணியிடம் உன் பேரு என்னப்பா என்று கேட்கிறார் . பிள்ளைக்கு அப்பொதுதான் ஏதோ விபரீதம் நடப்பதாய் உணர்ந்து உடன் அழ ஆரம்பித்துவிட்டான் தமிழ்மணி .

அழாக்கூடது பா , நானும் உங்க அம்மாதான் சமத்து புள்ளையா இருக்கணும் நல்ல படிக்கணும் என்று சில அறிவுரைகள் சொல்லி கற்பகத்திடம் தமிழ்மணியை விட்டுவிட்டு செல்லும்படி ஆசிரியை கூற ,தமிழ் மணி கற்பகத்தின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான். பிறகு அவனை தேற்றி ஒருவழியாக இருக்க வைத்து கற்பகம் கிளம்பி விட்டாள். நாட்கள் செல்ல செல்ல தமிழ் மணி பள்ளி செல்ல அடம்பிடிப்பது இல்லை ,நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டான் ...

மூன்றாம் வகுப்பு வந்துவிட்டான் . அன்று வகுப்பு ஆசிரியை "இன்னைக்கு நான் உங்களுக்கு பாரதியார் பாட்டு ஒன்னு சொல்லிதர போறேன் நீங்களும் என் பின்னாலேயே சேர்ந்து பாடனும் சரியா என்றதும் மாணவர்கள் சரி டீச்சர் என்று ஒருமித்த குரலில் பதிலுரைத்தனர் .

ஓடிவிளையாடு பாப்பா என்ற பாடலை சொல்லி அதற்க்கு விளக்கமும் குழந்தைகளுக்கு சொல்லி கொண்டிருந்தார் ,
சாதிகள் இல்லையடி பாப்பா ! குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ;
நீதி உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறை உடையவர்கள் மேலோர் .

இதற்க்கு விளக்கம் என்னன்னு சொல்லுறேன்
இந்த உலகத்தில் சாதிகள் கிடையாது , நீ உயர்ந்த ஜாதி நீ தாழ்ந்த சாதி நு சொல்லுறது பெரிய பாவம். அப்டி சொல்ல கூடாது நாம எல்லோருமே மனித சாதி ! இந்த உலகத்தில் எல்லோரும் சமம் .
நீதி, சிறந்த அறிவு, நல்ல கல்வி கொண்டவங்கதான் மேலானவங்க சரியா ! மதிய உணவுக்கான மணி ஒலிக்கிறது.

தமிழ்மணி சத்துணவு திட்டத்தில்தான் தனது மதிய உணவை உண்பான் ; கொஞ்சம் வசதி கொண்ட சிலர் குழந்தைகளுக்கு பையில் உணவை கொடுத்து அனுப்புவார்கள் இன்னும் சிலர் மதியம் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டிவிட்டு செல்வார்கள் . அந்த பள்ளியில் பயிலும் பலரும் ஏழை மாணவர்கள் ஆதலால் சத்துணவு திட்டம் தான் அவர்களின் ஜீவாதாரம் .


தமிழ்மணி படிப்பில் கெட்டி ,குறும்புகளிலும் சுட்டி
பரிட்சைகளில் முதல் இரண்டு தரங்களை அவன் என்றும் தவறவிட்டது இல்லை. வருடங்கள் கடந்தன வீட்டில் கடனும் வறுமையும் சூழ்ந்துவிட்டது. அந்நேரம் தான் பள்ளியிலும் அவனுக்கு பரிதாபம் நேர்ந்தது சாதி என்ற ரூபத்தில்....

சாதிகள் இல்லையென்று சொல்லிகொடுக்கும் பள்ளியில் தான் சாதிபிரிவுகள் ஆரம்பம் ஆகிறது. பள்ளியில் சேரும் விண்ணப்பத்தில் கூட சாதியின் பெயர் தேவைபடுகிறது;சாதியைத்தான் முதலில் கேட்கிறது அரசு .
8 - ஆம் வகுப்பிற்கு வந்துவிட்டான் தமிழ்மணி , அன்று வழக்கம்போல மதியஉணவு உண்ண சத்துணவு வரிசையில் நின்றிருந்தால்.
" லேய் தமிழ்மணி என்ற குரல் கேட்க்க யாருடையது என நோக்கி திரும்பினான். ஆம் சத்துணவு ஆசிரியையின் குரல்தான் அது அவனை மட்டும் அழைக்கவில்லை கையில் குறிப்பேடு வைத்துக்கொண்டு அந்த வரிசையில் நின்ற சிலபேரின் பெயரையும் அழைத்தார் அவர் .

என்ன டீச்சர் கூப்ப்டீன்களா ? என்று அவனும் சில மாணவர்களும் ஆசிரியர் அருகே சென்றனர். " நாளைல இருந்து நீங்க எல்லோரும் சாப்பாடு கொண்டுவந்துடுங்க வீடு பக்கத்துல இருக்குறவங்க வீட்டுக்குபோய் சாப்பிடுங்க சரியா !
ஏன் டீச்சர் நாங்க மட்டும் வீட்டுக்கு போயி சாப்பிடனும் என்றான் தமிழ்மணி .
உங்களுக்கு போனவருடத்தோட சத்துணவு சாப்பாடு முடிஞ்சுதுப்பா OC ,BC cast ஒசந்த சாதி பசங்க .நாங்க சத்துணவு போட கூடாதுங்கறது சட்டம் . உங்களுக்கு இன்னைக்கு தெரியாது நீங்க வந்துட்டீங்க நாளைல இருந்து வீட்டுல சாப்டுங்க சரியா ?இன்னிக்கு நீங்க இங்க சாப்ட்டுக்கொங்க என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் .

சில நாட்கள் கழித்து இலவச புத்தகம் சீருடை இலவசமாக வழங்கபடுகிறது , சத்துணவில் விலக்கிய தமிழ்மணி மற்றும் மூன்று மாணவர்களுக்குமட்டும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் தமிழ் ஆசிரியரிடம் கேட்டனர் அவரும் சத்துணவு ஆசிரியை கூறிய அதே பதிலைத்தான் சொன்னார் .நீங்க oc வகுப்பு மாணவர்கள் அதான் உங்களுக்கு மட்டும் புத்தகம் சீருடை தரவில்லை. தமிழ்மணி உடனே ஆசிரியரிடம் சார் oc யா இருந்தா எதுமே ஓசியா கிடைக்காதா ? சாதிக்கு பேரு மட்டும் oc என்று சொன்னான் அவரும் சகமாணவர்களும் சிரித்துவிட்டனர் .

வீட்டில் புத்தகம் வாங்கிக்கேட்டால் அவனது அம்மாவும் அப்பாவும் நாளை நாளை என்று கூறி காலத்தை கடத்தினர்.கடன் சூழ்ந்த குடும்பத்தில் கிடைக்கும் வருமானம் கடனை அடைப்பதற்கே சரியாக இருக்கும்பொழுது புத்தகம் வாங்க ஏது பணம் இதை நினைத்து அவன் தாய் கற்பகம் கண்ணீர்விடாத நாள் இல்லை. வகுப்பில் புத்தகம் எங்கே என்று ஆசிரியர் கேட்க்கும் நாளெல்லாம் நாளை நாளை என்று தமிழ்மணி கூறியதால் கடுப்பாகி போன கணித ஆசிரியர் அவனை வெளியே புன்னை மரத்தருகே எனது வகுப்பு நேரம் முழுதும் நீ முட்டி இட்டு நிற்கவேண்டும் என தண்டனை கொடுத்துவிட்டார் . என்று புத்தகத்தோடு வருகிறாயோ அன்று வகுப்புக்கு வந்தால் போதும் என சொல்லிவிட்டார் . அந்த தண்டனை அவனுக்கு மட்டுமல்ல அவனோடு நின்ற அந்த மூன்று மாணவர்களுக்கும் சேர்த்து தான் .


மறுநாள் அவனோடு நின்ற இருவர் புத்தகம் வாங்க வசதி இல்லாததாலும் மதிய உணவு இல்லாததாலும் ஆசிரியரின் தண்டனைக்கு பயந்தும் பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.ஒருவன் விடுமுறை எடுத்துகொண்டு போய்விட்டான் தமிழ் மணி மட்டும் மறுநாளும் கணித வகுப்பு வந்ததும் வெளியில் சென்று முட்டிபோட்டு நின்றுவிட்டான். இதனை சன்னலோரம் தமிழ் ஆசிரியர் 7 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த போது கண்டுவிட்டார். ஒரு மாணவனை அழைத்து அங்கு நிற்கும் தமிழ்மணியை அழைத்துவா என சொல்லி அனுப்பினார் ...


லேய்! தமிழ்மணி தமிழ் சார் உன்ன கூப்புடுதாறு லேய் , உடனே வரசொன்னாரு லேய் !

எதுக்கு லேய் என்னைய கூப்புடுதாறு . தெரியல லேய் உடனே வரசொல்லி சொன்னாரு . தமிழ்மணி அவரைக்காண சென்றான் . "யாம்ல தமிழ்மணி நீ நல்ல படிக்குற பயலாச்சே எதுக்கு வெளியில முட்டிபோட்டு நிக்குதா ? தமிழ் மணி நடந்தவற்றை கூற அவர் கண்களில் கண்ணீர் கசிந்தது அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவாராய் உனக்கு என்னாலே புத்தகமும் நோட்டும் தானே வேணும் ? நான் 9 - ஆம் வகுப்பு பயலுவ கொஞ்சம் பேருக்கிட்ட சொல்லி அவனுக பழைய புத்தகத்த வாங்கி கொடுக்கிறேன் சாயங்காலம் வீட்டுக்கு போறதுக்கு முன்னால என்னைய வந்து பாரு. என்னென்ன நோட்டு வேணும்னு சொல்லு நாளைக்கு நான் வாங்கித்தரேன் சரியா ? கணக்கு சார் கிட்ட இன்னைக்கு மட்டும் மன்னிப்பு கேட்டு உள்ள போயி உக்காந்துக்க சரியா ? என்றார் . தமிழ்மணி சரி என்று சந்தோசத்தில் மண்டையை ஆட்டிக்கிட்டே ஓடிட்டான் ....

தமிழ் ஆசிரியருக்கு தமிழ்மணி மேல் தனிப்பட்ட பாசம் உண்டு .அவன் நன்கு படிக்கும் மாணவன் மட்டும் என்று இல்லை தமிழ் மீதான அவனது ஈடுபாடு மற்றும் ஆசிரியர்களின் மேல் அவன் வைத்திருக்கும் மதிப்பு ஆகிய குணங்களால் பொதுவாக ஆசிரியர்களுக்கு அவன்மீது விருப்பம் அதிகம். கணிதம் மட்டும் அவனுக்கு கொஞ்சம் கடினம் ஆகையால் கணித ஆசிரியருக்கு மட்டும் அவன்மீது கொஞ்சம் வெறுப்பு அதிகம் அது பாடத்தினால் உள்ள வெறுப்பு மட்டுமே ....

பத்தாம் வகுப்பு வந்துவிட்டான் வீட்டின் கடன் தொல்லையை நினைத்து நினைத்தது அவனது பாடத்தின் மேல் இருந்த கவனம் மாறிவிட்டது. இதனை தமிழ் ஆசிரியரும் உணர்ந்துவிட்டார் பல அறிவுரைகளை எடுத்து சொல்லி முதலில் ஒழுங்காகப் படி, நீ நல்லா படிச்சு பெரிய வேலை கிடச்சா கஷ்டம் எல்லாம் பறந்துடும்டா. நீ ஆசைப்பட்ட மாதிரி பெரிய I.P.S அதிகாரியா வரணும்டா என்று அவனது கவனத்தை படிப்பின் மேல்செளுத்த முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டார்..

சிறுவயதில் பொதுவாக பள்ளியில் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்க்கும் கேள்வி நீ என்னவாக வேண்டும் என்று கேட்பது . பலமாணவர்கள் டாக்டர், இஞ்சினியர் என்று சொல்வார்கள் ஆனால் அதில் பணபலம் கொண்டவர்கள் மட்டுமே அதிகம் வென்றிருக்கிறார்கள் . பல ஏழை மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது தான் அதிகம்.
சில மாணவர்கள் கிண்டலுக்காக அரசியல் வாதியாகவேண்டும் என்றும் சிலர் பெரிய விளையாட்டு வீரனாக வேண்டும் என்றும் கனவுகளை வைத்திருப்பார்கள். தமிழ்மணியின் ஆசையோ போலீஸ் ஆகவேண்டும் என்பது ஐந்தாம் வகுப்பு படித்த போது ஒரு ஆசிரியர் ஏண்டா இந்த விபரீத ஆசை நல்ல படிப்பு படிச்சு பெரிய ஆளா ஆகுரதவிட்டு போக்கத்த போலீஸ் ஆகணும்னு நினைக்கிற அது ஒரு பொழப்பா டா என்று கேட்டார் அதற்க்கு அவன் கூறிய பதிலை தமிழ் ஆசிரியரிடம் சொல்லி பலமுறை சிரித்திருக்கிறார்.
சார் போலீஸ் ஆண்தான் பெரிய திருடன புடிக்கமுடியும் , புல்லட்டுல ஊர சுத்திவர முடியும் , எல்லோரும் நம்மள கண்டு பயபடுவாங்க அதான் சார் நான் போலீஸ் ஆகணும்னு ஆசைபடுறேன் என்ற பதில் தான் அந்த பதில்... தமிழாசிரியர் ஒருமுறை போலீஸ் ஆகுறது தப்பு இல்ல நேர்மையா இருக்கணும், நியாயமா நடக்கணும் , நீ சாதாரண போலீசா இருக்க கூடாது பெரிய i.p.s ஆபீசரா வரணும்டா சரியா? சரி சார் ...


பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தது நானூறுக்கு மேல் மதிப்பெண் வாங்கி பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்தான் தமிழ்மணி . மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் அட்டை வாங்க தனது தாயாருடன் வந்தான் முத்துமணி, எல்லாம் வாங்கியபின் தமிழ் ஆசிரியர் அவன் தாய் கற்பகத்திடம் நல்ல மார்க் வாங்கிருக்காம்மா அப்புடியே விட்டுடாதிங்க நல்ல படிக்க வைங்க கஷ்டத்த இன்னும் கொஞ்சநாள் பொறுத்துக்கிட்டா இவன் நல்ல முன்னேறிடுவான் பார்த்து முடிவு பண்ணுங்க என்றார். கற்பகத்துக்கு கண்நீர்விடுவதை விட வேறு வழி தெரியவில்லை தானும் வேலைக்கு சென்று அவனை படிக்க வைக்கவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

தமிழ் மணியின் நண்பன் மோகன் அவனை தேடி வந்தான்.தமிழ் மணி வீட்டில் இல்லை ஆற்றிற்கு குளிக்க செண்டிருப்பதாக அவன் அம்மா கற்பகம் கூற மோகன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த தமிழ்மணியிடம் "மாப்புள நான் அரசு பாலிடெக்னிக்ல சேரலாம்னு இருக்கேன் அங்க ப்ரீ சீட் கிடைக்கும்டா உனக்கு நல்ல மார்க் இருக்கு வாட போகலாம்னு மோகன் சொன்னது தான் தாமதம் எப்டியாவது இலவச சீட் கிடச்சுட்டா சந்தோசம் வீட்டுலயும் என்னால யாரும் கஷ்டப்பட மாட்டாங்கன்னு சந்தோசத்துல தமிழ்மணி விறுவிறுவென வீட்டுக்கு சென்று உடைமாற்றி இருவரும் கிளம்பிவிட்டனர்.

அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு வந்தடைந்தனர். இருவரும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு தங்களது சான்றிதழ்களையும் மதிப்பெண் ஏட்டையும் கொடுத்தனர். மோகன் தமிழ்மணியிடம் கட்டாயம் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஊட்டினான். அலுவலக ஊழியர் ஒருவர் வந்து மோகன் உனக்கு சீட் ஓகே ஆயிடுச்சுப்பா நீ இந்த நாளில் வந்து சேர்ந்துகொள்ளலாம் என்றார். தமிழ்மணி எனக்கு என்று எத்தனிக்கும் முன் தம்பி உனக்கு இலவச சீட் கிடைக்காது உங்க சாதிக்கு நீங்க இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் எடுத்திருந்தா கிடைச்சிருக்கும் வேறு எங்காவது முயற்சி பண்ணுங்க என்றார். தமிழ் மணியை விடவும் இந்த பதிலை கேட்டதும் மோகன் கலங்கிவிட்டான் . என்னடா இது என் மார்க்குக்கு எனக்கு கொடுத்துருக்காங்க இவ்ளோ மார்க் எடுத்துருக்க உனக்கு இல்லைன்னு சொல்லிருக்காங்க .
அது ஒன்னும் இல்ல மாப்புள நான் தெரியாத்தனமா ஒசந்த சாதில வந்து பொறந்துட்டேன் பாத்தியா அதுனால வந்த வினை இது. அப்பொழுதுதான் மாற்று சான்றிதழில் சாதி என்ற இடத்தில் OC என்று இருப்பதை எடுத்துக்காட்டி முன்னர் தமிழ் ஆசிரியரிடம் சொன்னதை நியாபகப்படுத்திக்கொண்டான் தமிழ்மணி...

லேய் மாப்புள கவலைப்படாத ஒவ்வொரு சாதிக்கும் அவங்க சமுதாயக் கல்லூரி இருக்கும் அது அந்த சாதியில வசதி இல்லாதவங்க இலவசமா படிக்க சீட் ஒதுக்கி கொடுப்பாங்க அங்க போயி கேக்கலாம் வா என்று தமிழ் மணியை அழைத்துக்கொண்டு அந்த கல்லூரிக்கு கிளம்பினான் மோகன்....

அந்த கல்லூரியில் தமிழ் மணியின் சொந்தக்காரன் துரை என்ற ஒருவன் வேலை செய்தான். அவன் தமிழ்மணியிடம் "மணி கண்டிப்பா உனக்கு ப்ரீ சீட் வாங்கிடலாம்ப்பா ,நீ கஷ்டபடுற பய நல்ல படிக்கிற பய , நம்ம சாதிக்காரன் வேற உன்னைய அப்டி விட்டுடமாட்டேன் பா . அலுவலகத்தில் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி பண்ணிக்கிட்டு வா என்று அனுப்பினான். விண்ணப்ப படிவத்திற்கு 100 ரூபாய் , விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு துரையிடம் இருவரும் செல்ல வாப்பா போயி டீ சாப்ட்டுவரலாம் என்று கேன்டீனுக்கு அழைத்து சென்றான் துரை. மடமடவென்று டீ குடித்துவிட்டு அலுவலகத்துல சின்ன வேலை இருக்கு , அப்புடியே உன் விண்ணப்பம் என்ன ஆச்சுனு பார்த்து வந்துடுறேன், டீ க்கு பணம் கொடுத்துடு என்று கிளம்பிவிட்டான் துரை. பணத்தை மோகன் கொடுத்தான் இருவரும் அலுவலகம் நோக்கி நடந்தனர் வெளியே காத்திருந்தனர் ,துரை வந்தான் ரொம்ப கெஞ்சி பாத்துட்டேன் தமிழ்மணி இலவச சீட் எல்லாமும் தீர்ந்து போச்சாம் ,மேற்ப்படி நன்கொடை இருபத்தி ஐயாயிரம் ரூபாயும் அந்த கட்டணம் இந்த கட்டணம் என்று ஒரு தொகையை சொன்னான் ஒரு வருடத்துக்கு இவ்வளவு வருமப்பா என்றான்.. தமிழ் மணி நொந்து போய் நின்றுவிட்டான் ....

ஏய் கவலை படாதப்பா நான் வேணும்னா பேசி நன்கொடை தொகையை குறைக்க சொல்லுதேன் நம்மளையும் கொஞ்சம் கவனிசுடுப்பா என்றான்..
தமிழ் மணி கோபம் கொப்பளிக்க துயரம் துன்புறுத்த ஒன்றும் பேச இயலாதவானாய் திரும்பிவிட்டான். உதவினால் ஒட்டும் உறவுகள் உதவி என்றால் ஓடிவிடுவது வாழ்வியலின் நிதர்சனம்.நான் எதுக்கு துரை மேல கோவப்படனும் நான் இந்த சாதில பொறந்தத நினைச்சுதான் வெக்கபடனும். வாடா கிளம்பலாம் என்றான் மோகனிடம்.
மாப்புள இதுக்கு ஏண்டா வருத்தப்படுற வேற கல்லூரில விசாரிக்கலாம் என்று ஆறுதல் சொன்னான் மோகன்.. இல்லைட மோகன் நீ கிளம்பு வீட்டுக்கு மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் நீ கிளம்பு என்று கூறிவிட்டு தானும் வீட்டை நோக்கி நகர்ந்தான் தமிழ்மணி.....

அவன் மனதில் வேறு எதையும் எண்ணவில்லை நான் படிக்க நினைச்சத என் தம்பிய படிக்கவைக்கணும் , அம்மாவை வேலைக்கு போக வச்சு நான் உக்காந்து சாப்பிட்டா நல்லா இருக்காது படிப்பும் வேணாம் ஒன்னும் வேணாம் , என்னென்ன வேலை கிடைக்குதோ எல்லாம் பாக்கணும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கடனை எல்லாம் அடைக்கணும். படிச்சவனுக்கு பகுசான ஒருவேலை படிக்காதவனுக்கு பாக்குறது எல்லாமே வேலை தான் ஆயிரம் வேலை இருக்கு எதுக்கு கவலை படணும் இதுவரைக்கும் என்னைய வளத்து ஆளாக்கின அப்பன் ஆத்தாள உக்காரவச்சு ஒழுங்கா சோறு போடணும் அது போதும். லட்சியமாவது வெறியாவது அதல்லாம் நடக்கனும்னு இருந்தா நடக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம்.வேலைக்கு இடையில் எதாச்சும் படிக்க முடிஞ்சா முயற்சி பண்ணலாம் என்று தீர்கமாக ஒரே முடிவை எடுத்துக்கொண்டு கொண்டே தன் பள்ளியருகே வந்துவிட்டான். பள்ளி தாண்டினால் வீடுதான்..

பள்ளியை நெருங்கும் நேரம் பழைய நினைவுகளும் I.P.S கனவும் கண்முன்னே வந்து போகிறது. ஒரு நிமிடம் அமைதியாய் அங்கு நின்றவனுக்கு ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுக்கும் சத்தம் கேட்க்கிறது
சாதிகள் இல்லையடி பாப்பா -----------------------------
சிரித்துக்கொண்டே பள்ளியை கடக்கிறான் தமிழ்மணி........................

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ..... (8-Aug-12, 7:52 pm)
பார்வை : 1295

மேலே