கடந்து வந்த பாதை

வெள்ளை சட்டை
சிவப்பு நிறக்
குட்டைப் பாவாடை
எண்ணெய் தேய்த்து
தலை வாரி,பூச்சூடி,
பிஞ்சு விரல்களில்
மருதாணியிட்டு,
மஞ்சள் பையில்
ஒற்றை சிலேட்டுடன்,
காலணி இல்லாது,
கல்லும் மணலும்
கலந்த பாதையில்
கால் நோகாதிருக்க
கண்கள் ஆங்காங்கே
இருந்த உயர்ந்த
கட்டிடங்களை கண்டுரசித்தபடியே
பள்ளிக்குச் செல்வேன்.
அப்பாவிற்கு தெரியாமல்
அம்மா கொடுப்பாள் எட்டனா.
அவளுக்குத் தெரியாமல்
அவர் கொடுப்பார் எட்டனா.
ஆக மொத்தம் ஒரு ரூபாய்.
அடேங்கப்பா ஏகப்பட்ட சந்தோசம்.
பள்ளிக்கு அருகில் பாட்டியின்
பாயாசக் கடை.
இருபத்தைந்து பைசாவிற்கு
ஒரு டம்ளர்
அடடடா எவ்வளவு
அமிர்தமாய் இனிக்கும் தெரியுமா!
இன்று நினைத்தாலும்
நாவில் ஊறும் எச்சில்...
ஒன்பது மணிக்குள் பள்ளியின்
உள்ளே செல்ல வேண்டும்
கையில் தடியுடன்
காவலாளி தாத்தா.
கண்டிப்போடு இருப்பார்.
நேரம் தவறினால்,
தடியால் விழும் தட்டு
வலிக்காது.
வீட்டுப்பாடம் செய்யமாட்டேன்
விளையாடியே வீணடிப்பேன்
நேரத்தை விளைவு
பாடவேளையில் அரைமணிநேரம்
வெளியிலே அரைமண்டி.
பாவமாக பாவனை
செய்து சென்றிடுவேன் விரைவில்.
வரிசையாக பாடங்கள்
இடையில் ஒரு இடைவேளை.
மீண்டும் தொடரும் பாடவேளை.
பன்னிரண்டு முப்பது மணிக்கு
மதிய உணவு.
நண்பர்கள் பட்டாளம்
நாளும் படரும்...
வேப்பமரத்தடியில்.
விதவிதமான உணவு
உண்டு முடித்த மகிழ்வு
பங்கிட்டு உண்ணும் சாதத்தில்.
எட்டனாக்களுடன்
ஐந்து கைகள்
காவலாளி தாத்தாவை
ஏமாற்றிவிட்டு ஓடும்,
பத்து கால்களுடன்...
பள்ளிக்கு பக்கத்தில்
சுரேஷ் அண்ணாகடை
அவித்த பனங்கிழங்கு
ஐம்பது பைசாவிற்கு ரெண்டு.
தோலை உரித்து
தெருவில் வீசிவிட்டு
வகுப்பின் உள்ளே
அமர்ந்த நாட்கள்.
ஆசிரியர் துவங்குவார்
புதிய பாடத்தை
அவித்த கிழங்கையே
கண்கள் பார்த்தபடி
அரைகுறை கவனிப்பு.
அடுத்த இடைவேளையில்
அவசரமாய் கிழங்கை
வாயில் திணித்தபடி,
பள்ளியின் மைதானத்திலே
ஓடிபிடித்து விளையாட்டு
மீண்டும் பாடவேளை
நாலரைமணிக்கு
முடிவடையும் பள்ளி
இரும்புச் சட்டத்தில்
மணி அடித்ததும்
இறகை விரித்து பறக்கும்
பந்தயப்புறாக்களாய்-நாங்கள்
முதலில் நுழைவாயிலை
அடைபவருக்கு ஐம்பது பைசாக்கள்.
சில நேரம் தோல்விகிட்டும்.
வெற்றி நாட்களில்
குதூகலடுத்துடன்
கேக்குப் பாட்டியின்
சின்னக் குடிசைக்கு
வருகை தருவேன்.
பாட்டியின் கையிலே
எட்டனா தந்தால்
சிறு காகிதம் நிறைய
கேக்குத்துண்டுகள் தருவாள்.
வரும் வழியில் உண்பேன்
உடன் வருபவர்களுக்கும் கொடுத்து
வீடு நுழைந்ததும் -காபி
கைகால்கள் அலம்பியதும் குடிப்பேன்
அந்தி வேளையில் விளையாட்டு
அரைகுறையாய் வீட்டுப்பாடம்
இரவு நேர சிற்றுண்டி
இனிமையான காற்றுடன்
காலைவரை கவலையற்ற உறக்கம்.
விடுமுறை நாட்கள்
விழாக்கள் போல
சிட்டுகளாய் வலம்வருவோம்
வீதிகளில்....
சில்வண்டுகளாய் சப்தமிட்டு ....
சுள்ளிகள் பொறுக்குவான் ஒருவன்
சூடமிட்டாய் வாங்கிடுவான் இன்னொருவன்
இலைகள் பறிப்பாள் இளவலவல்
அரிசியை அள்ளி வருவேன் நான்
கரட்டு வழியில் சென்று
ஊர்திறந்த வெளியில் அமர்ந்து
கூட்டாஞ்சோறு சமைப்போம்
கூடிச் சேர்ந்து....
இருபது வருடம் கழித்து செல்கிறேன்
நான் நேசித்த இடங்களைத் தேடி
மாறிவிட்டன நான் விளையாடி
மகிழ்ந்த இடங்கள்
அன்று நான்
கண்ணாமூச்சியாடிய இடங்கள்
இன்று கட்டிடமாகிவிட்டது...
கண்ணாடி வளையல்
அணிந்த கைகள்
கார்டூன்கள் மீது
மோகம் கொண்டதாய்
மாறிவிட்டது
வீட்டின் முகப்பிலே
விளையாடிடும்
சிறுவர் சிறுமியர்கள்
மாலை நேர வேளையில்
மலர் உதிர்க்கும்
சாலையோர மரங்களுக்கு
காலம் வந்ததோ?
அங்கு மின்சாரக் கம்பங்கள்
காட்சி தருகிறது...
இயந்திரங்களின் வரவேற்பு
நடனம் என்
இயற்கையின் அழகை
அழித்து விட்டிருந்தது...
காலம் கடந்து விட்டது
ஆம் நான்
கடந்து வந்த பாதையும்
மறைந்து போய்விட்டது.....